இன்றைய ஒடிசாவில் புவனேஷ்வரை அடுத்த உதயகிரி எனும் மலையில் இருக்கும் யானை குகையில் அமைந்துள்ளது இந்த அத்திகும்பா கல்வெட்டு. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற அரசனாக அறியப்படுபவன் கார்வேலன். அவனது ஆட்சியில் அவன் செய்த சாதனைகளையும் இன்னபிற தகவல்களையும் வெறும் 17 வரிகளில் சொல்லிவிடுகிறது இக்கல்வெட்டு.

அத்திகும்பா கல்வெட்டு படம். நன்றி: விக்கிபீடியா

கலிங்க நாட்டை ஆண்ட மகாமேகவாகன சாம்ராஜ்ஜியத்தின் தலைசிறந்த அரசன் தான் இந்த கார்வேலன். இவனது காலம் பொது ஆண்டிற்கு முன் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அதாவது கிமு 150. இவன் தற்போதைய ஒடிசாவின் சிசுபால்கர் எனுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டவன். இவனது காலத்திய குகை ஒன்று உதயகிரி மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. யானையின் வடிவில் அமைந்திருப்பதால் அது யானை குகை என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. அக்குகையின் முன்பக்கத்திலிருந்து கூரை வரை அமைந்துள்ளது இவனது கல்வெட்டு.

இக்கல்வெட்டில் பயன்படுத்தி இருக்கும் எழுத்து பிராக்கிருதம் என்று பொதுவாக கருதப்பட்டாலும் இங்கிருந்து ஆறு மைல் தொலைவில் தவுளி என்ற இடத்தில் அமைந்துள்ள அசோகனின் பாறை கல்வெட்டில் பயன்படுத்தி இருக்கும் பிராக்கிருதத்திற்கு பெரிதும் வித்தியாசப்பட்டது இவ்வெழுத்து. ஏனெனில் தமிழுக்கு மட்டுமே சிறப்பெழுத்தாக சொல்லப்படும் ‘ன’ போன்ற எழுத்துக்கள் இக்கல்வெட்டில் காணப்படுவது ஆய்வுக்குறியது. எடுத்துக்காட்டாக, ‘ஸதக்னி’ போன்ற வார்த்தைகளை கூறலாம்.

கல்வெட்டில் ‘ஸதக்னி’. நன்றி:விக்கிபீடியா

இக்கல்வெட்டை முதன்முதலில் கண்டுபிடித்தவர் A.ஸ்டெர்லிங். கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1820. அதை படியெடுத்தவர் மெக்கன்சி. ஆனால் அக்கல்வெட்டை 1837இல் தான் Asiatic Society Of Bengal லில் முழுவதுமாக படித்து ஜேம்ஸ் பிரின்செப் வெளியிட்டார். இக்கல்வெட்டு வெளியானதுமே பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆகையால் பலரும் பலவிதமாக படித்துக்கூறியதில் அநேகம் முறை இக்கல்வெட்டு மறுவாசிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் முதன்முதலில் படியெடுக்கப்பட்டபோதே கல்வெட்டின் சில பகுதிகள் முற்றிலுமாக அழிந்துபோனது வருத்தத்திற்குரியது. 19 ஆம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் கன்னிங்காம்,பகவான்லால் இந்திரஜித், பூலர், பிளீட் போன்றோரும் 20 ஆம் நூற்றாண்டில் கல்வெட்டியலாளர்களான பானர்ஜி, ஜேஸ்வால்,DC சர்கார் என பலரும் இக்கல்வெட்டை காண படையெடுத்திருக்கிறார்கள். அதேபோல் இத்தனை பேரும் தங்களது கோணத்தில் இக்கல்வெட்டை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். ஆம் அத்தனை சிறப்பு வாய்ந்த தகவல்களை அள்ளித்தருகிறது இந்த அத்திகும்பா கல்வெட்டு.

அத்திகும்பா குகையின் முகப்பு. நன்றி: விக்கிபீடியா

அசோகனின் கல்வெட்டுகளில் புத்த ஸ்லோகங்கள் வருவது போல இக்கல்வெட்டின் தொடக்கத்தில் ஜைன ஸ்லோகம் காணப்படுகிறது. தான் மகாமேகவாகன சாம்ராஜ்ஜியத்தில் சேதி வம்சத்தில் பிறந்த மூன்றாவது அரசனாக அறியணை ஏறிய அயிரை மகாராஜன் என தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறான். இதிலிருந்து அவனுக்கு முன்னர் இதே வம்சத்தை சேர்ந்த இருவர் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள் என அறியலாம். சேதி வம்ச மரபானது இடைக்காலம் வரை தொடர்ந்து ஆண்டிருக்கிறது. காளச்சூரி அரசர்கள் தங்களை சேதி வம்சத்தவர்கள் என கூறிக்கொள்கிறார்கள். இனி கல்வெட்டின் வரிகளை தனித்தனியாக பார்ப்போம்.

அத்திகும்பா கல்வெட்டின் முதல் 11 வரிகள். மூலம்: எபிகிராபியா இன்டிகா தொகுதி 20.

1. ஜைன ஸ்லோகத்தில் நமஸ்காரம். அயிர மாகாராஜ மகாமேகவாகன சேதி வம்சத்து மூன்றாம் அரசனான கலிங்காதிபதி ஶ்ரீகார்வேலன். (இதில் குறிப்பிடப்படும் ‘அயிர மகாராஜன்’ என்பது கார்வேலனின் பேரனான குடிப்பசிறி மன்னனின் கல்வெட்டிலும் உண்டு. அதை ஆரிய என பொருள்கொள்ள முடியாது என்பதை பானர்ஜி போன்றோர் உறுதியாக குடிப்பசிறி மன்னனின் கல்வெட்டை கொண்டு மறுக்கிறார்கள்)

2. 15 வயது வரை இளமை ததும்ப சிகப்பு உடலமைப்புடன் விளையாட்டில் கெட்டிக்காரனாக விளங்கியவன் அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் (Lekha Rupa Gnana) நிர்வாகம்,பொருளாதாரம், நீதி, மதம் போன்றவைகளை கற்றுத்தேர்ந்து இளவரசனாக பட்டத்திற்கு வந்து தனது 24 வயது முடிந்த சமயத்தில் வர்த்தமானரின் ஆசியுடன்

3. கலிங்கநாட்டின் அரசனாக அரியணையில் ஏறிய முதல் ஆட்சியாண்டிலேயே கலிங்க நகரம் புயலால் பாதிக்கப்பட்டதால் மதில்கள், கோபுரங்கள், வீடுகள், விகாரைகள் போன்றவைகளையும் கபீர ரிஷி எனும் ஏரியையும் சீர்படுத்த

4. முப்பத்து ஐந்து நூறு ஆயிரங்களை செலவு செய்து மக்களை மகிழ்வித்தான். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் மேற்கிலிருந்து அச்சுருத்திக்கொண்டிருந்த சதகர்னி அரசனை தனது (Haya Gaja Nara Ratha ) குதிரை,யானை,இரத மற்றும் காலாட்படைகளை கொண்டு கன்ஹா, பெம்னா போன்ற இடங்களை வென்று மூஷிகநகரத்தினை கலங்கடித்தான். தனது மூன்றாவது ஆட்சியாண்டில் (இதில் வரும் மூஷிகநகரம் என்பது தற்போதைய மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது)

5. கலிங்கநகரத்தின் தலைநகரை காந்தர்வ வேதத்தின் வழியில் இசை,நடனம், பாடல் என மகிழ்வித்தான். தொடர்ந்து நாலாவது ஆட்சியாண்டில் தனது முன்னோர்கள் வித்யாதாரர்களுக்காக கட்டிய செங்கல் கோபுரங்களை…… அர்த்தமில்லாமல் குடில்களையும் (இங்கு வரும் ‘Veda’ என்பது தான் தொல்லியல் ரீதியில் வேதம் எனும் வார்த்தைக்கான முதல் சான்று. அந்த வேதமும் ரிக்,யஜூர், சாம,அதர்வண வேதங்கள் இல்லை. இசை நடனம் குறித்த காந்தர்வ வேதம் தான். பின் தனது பூர்வ ராஜாக்கள் பற்றி அவர் குறிப்படவந்த வரிகள் சேதமாகியிருப்பதால் அதன் தொடர்ச்சியை அறியமுடியவில்லை.)

6. விலையுயர்ந்த இரத்தினங்களையும் குடைகளையும் பிஞ்சரர்கள் திருடிக்கொண்டு ஓடியதால் அதனை மீட்டு இராஜக மற்றும் போஜகர்களை காலில் அடிப்பணிய வைத்தான். அவனது ஐந்தாவது ஆட்சியாண்டில் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தனசுலியிலிருந்து கலிங்கம் வரை நந்த ராஜா ஏற்படுத்திய கால்வாயை விரிவுபடுத்தினான்……. இராஜசூய யாகம் நடத்த வரிவசூல் செய்த ( Ti vasa sata என்பதை மூன்று நூறு ஆண்டுகள் என்று மட்டுமே படிக்க இயலும். இதை வலமிருந்து இடமாக நூற்றி மூன்று என படித்தால் கார்வேலனின் காலம் அசோகனுக்கு முன் செல்லும். அப்படியாயின் சதகர்னி அசோகனுக்கு முன்னான காலத்தியவனாக கருதப்பட வேண்டும். சாதவாகனர்கள் பற்றி அசோகன் குறிப்பிடாததால் நிச்சயமாக அசோகனுக்கு பின்னான காலமாகவே கார்வேலன் இருக்க வேண்டும். அதுவும் தவிர்த்து இக்கல்வெட்டு முறையாக மூன்று நூறு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை வலமிருந்து இடமாக படித்து குழம்ப வேண்டிய அவசியமே இல்லை)

7. நூறாயிரம் காசுகளை அரசு நிர்வாகத்தில் இருந்து எடுத்து செலவு செய்தான். தனது ஏழாவது ஆட்சியாண்டில் பட்டத்தரசி வஜ்ரகரா தாய்மையடைந்தாள். பின் அவனது எட்டாவது ஆட்சியாண்டில் அவனது பெரும்படைகள் கோரத்னகிரியை தாக்கியது. ( கோரத்னகிரி என்பது தற்போதைய பராபர் குடைவரைகள் அமைந்துள்ள பகுதி)

8. இராஜகிருகத்தை அதிரசெய்தான். யவன மன்னன் தமிதியுடன் மதுராவில் பெரும்போரில் ஈடுபட்டு அவனது படைகளை சோர்வடைய செய்து பின்வாங்க செய்தான். அதன்பின் பசுமையான… (இராஜகிருகம் என்பது தற்போதைய பாட்னா. தமிதி எனும் யவன அரசன் தான் Demetrius என அறியப்படுகிறான்)

9. கல்பவிருட்ச மரங்களையும் யானைகளையும் தேரோட்டிகளுடன் தேர்களையும் வீடுகளையும் ஓய்வு அறைகளையும் அனைவரது விருப்பத்துடன் நெருப்பில் இட்டான். பிரம்மதேய நிலங்கள் வரியில்லா நிலங்கள் கொடுத்தான். ஓ அருகரே..

10. முப்பத்தி எட்டு நூறு ஆயிரம் செலவில் மகாவிஜயம் எனும் மிகப்பெரிய அரண்மனையை கட்டினான். அவனது பத்தாவது ஆட்சியாண்டில் பாரதவாச நாட்டினருக்கு தண்டனையா சம்மந்தமா சமரசமா எனும் மும்மடங்கு கொள்கையை விடுக்கிறான் பின் அந்த தேசங்களை கவர்ந்தான்…. மணிரத்தினங்களை கவர்ந்து வந்தான். ( பாரதவர்ச நாட்டினர் என்பது தென்னிந்தியா என அறியப்படுகிறது ஏனெனில் வட இந்தியாவுக்கு ஆர்யவர்ச எனும் பெயருண்டு என்பர்.)

11. ஆவா அரசனின் வணிக நகரமான பித்துண்டாவை கைபற்றி அதை கழுதையால் உழுதான். ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக இவனது நாட்டிற்கு தீமையை ஏற்படுத்தி வந்த தாமிர தேச கூட்டணியை முறியடித்தான். அவனது பனிரெண்டாவது ஆட்சியாண்டில் உத்தரபாத அரசர்களை… (பித்துண்டா நகரமென்பது தற்போதைய ஆந்திர மாநிலத்தின் ஶ்ரீகாக்குளம் பகுதியில் அமைந்திருந்தது. Terasa Vasa Sataga என்பதை நாம் முறையாக ஆயிரத்து முன்னூறு [ பதிமூன்று நூறு]என்றே அணுக வேண்டும். ஏனெனில் இதே கல்வெட்டில் நந்த மன்னர் காலத்தை முன்னூறு ஆண்டுகள் என படித்த அதேமுறையில் தான் இதையும் படிக்க முடியும். அதை இடமிருந்து வலமாக படிக்கும்போது இதையும் அதே வகையில் படிப்பது தானே முறையாகும்.)

அத்திகும்பா கல்வெட்டின் கடைசி ஆறு வரிகள். மூலம்: எபிகிராபியா இன்டிகா தொகுதி 20.

12. மகதநாட்டு மக்களை நடுங்க செய்யும் வகையில் சுகம்கியா அரண்மனையினுள் தனது யானையில் சென்று மகத அரசன் பஹசதிமிதாவை காலில் அடிப்பணிய செய்தான். முன்னொரு காலத்தில் நந்த ராஜா எடுத்துச்சென்ற கலிங்கநாட்டு ஜைன சிலையை மீட்டு வந்தான். அங்க மற்றும் மகத அரச குடும்பத்தின் விலையுயர்ந்த பொருட்களை தனது அரண்மனைக்கு கொண்டு வந்தான். (சுகம்கியா அரண்மனை பிற்கால நாடகமான முத்ரராட்சசாவிலும் மௌரியர்களின் அரண்மனையாக குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் மகதநாட்டு அரசன் பிரகஸ்பதிமித்ரன் என்றும் அவன் சுங்க வம்சத்தை சேர்ந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

13. அவனது நாட்டில் மிகப்பெரிய அழகான உட்கட்டமைப்புடன் கூடிய கோபுரங்களை கட்டினான். நூறு கொத்தனார்களுக்கு வரியில்லா நிலங்களை கொடுத்து தங்கவைத்தான். அதிசயம் ஆச்சரியமாக யானைகளையும் குதிரைகளையும் முத்து மணி இரத்தினங்களையும் பாண்டிய அரசனிடம் இருந்து பெற்றான். (இதில் பாண்டிய எனும் பெயர் பாண்ட என வழங்கப்பட்டிருக்கிறது. அதைவிட குறிப்பாக முத்து மணி இரத்தினம் என்றே கார்வேலனும் குறிப்பிட்டிருப்பது சிறப்பான ஒன்று. ஏனெனில் முத்துக்களும் இரத்தினங்களும் பாண்டிய நாட்டில் மட்டுமே கிடைத்தன. அதற்கான பெயர் தமிழில் மட்டுமே வழக்கில் இருந்திருக்க வேண்டும்)

14. அவனது பதிமூன்றாவது ஆட்சியாண்டில் குமரி மலையில் இருந்த ஜைன மதத்துறவிகளுக்கு இராஜ மரியாதையும் சீன பட்டிலும் வெண்ணிற ஆடைகளையும் அளித்து முன்பு அங்கு உபதேசித்த மதகுருமார்களின் நினைவுக்கான நிசீதிகைக்கும் ஏற்பாடுகளை செய்தான் ஜைன உபாசகன் கார்வேலன். ( நிசீதிகை என்பது பிற்காலத்திலும் ஜைன துறவிகளின் இறப்பிற்கு பின் அவர்களது நினைவாக எடுக்கப்படுவது. ஆனால் இங்கு கார்வேலன் வெள்ளை ஆடைகளையும் ஆடம்பர சீனப்பட்டையும் துறவிகளுக்கு வழங்குவதன் மூலம் அவன் ஸ்வேதாம்பர ஜைனன் என சொல்லப்படுகிறது)

15. பல நூறு இளம் ஜைன துறவிகளை அழைத்துவந்து அவர்களுக்கு தேவையானதை செய்துகொடுத்து ஜைன சங்கம் ஒன்றை நிறுவினான்… பல யோஜன தூரங்கள் சென்று அழகான கற்களை கொண்டு வந்து சிம்ஹபாத ராணியான சிந்துலாவிற்கு கோவில் கட்டினான்.

16. பச்சைக்கல்லில் நான்கு வரிகளில் பொறித்தான்…. எழுபத்தி ஐந்து நூறு ஆயிரங்களை செலவு செய்து வேகமாக ஏழு மடிப்பினை கொண்ட அங்கத்தினை 64 வார்த்தைகளில் உருவாக்கினான். இதையெல்லாம் செய்தவன் அமைதியை விரும்பும் மன்னனான, செழிப்புமிக்க அரசனான, துறவிகளுக்கான இராஜாவான, தர்மத்தினை மதித்தவனான, அவனை கண்டோர் கேட்டோர் உணர்ந்தோர் அனைவருக்கும் அருள்பவனான.. (ஆரம்பத்தில் சில இடங்களில் வாசகம் சேதமடைந்துள்ளதால் தொடர்ச்சி தெரியவில்லை)

17. உயர்ந்த ஞானமுடையவனான, அனைத்து மதங்களையும் ஏற்பவனான, பல கோவில்களையும் மீட்டெடுத்தவனான, தேர்களையும் மிகப்பெரிய படையையும் உடையவனான, தனது தேசத்தினை காப்பவனான, வசு முனிவரின் வழிவந்தோனான, இராஜாதிராஜனான கார்வேலன்.

கந்தகிரி மற்றும் உதயகிரி மலைகள். நன்றி: விக்கிபீடியா

ஆக இப்படியாக 17 வரிகளில் தனது சாதனைகளையும் வீரத்தினையும் பெருமைகளையும் காலவாரியாக கூறிய பழம்பெரும் மன்னன் கார்வேலன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இக்கல்வெட்டின் 11ஆவது வரியை கூர்ந்து கவனித்தோமானால் கார்வேலனின் காலத்திற்கு முன்பிருந்து ஆயிரத்து முன்னூறு வருடங்களாக கலிங்கநாட்டை அச்சுறுத்தி வந்த தமிழக மூவேந்தர்களின் கூட்டணியை தான் வென்றதாக குறிப்பிடுகிறான்.

அதாவது இக்கல்வெட்டின் காலம் கிமு 150 என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிலிருந்து 1300 ஆண்டுகள் பின்னோக்கி சென்றோமானால் மூவேந்தர்களின் கூட்டணியானது கிமு 1500 வாக்கிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறியமுடியகிறது.

ஆகவே வடக்கிழக்கு இந்தியாவை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர தமிழ் மன்னர்கள் கிமு 1500 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கார்வேலனது கண்ணோட்டத்தில் அவனது நாட்டின்மேல் தொடர்ந்து அதிகாரம் செலுத்திவந்த தமிழ் மன்னர்களின் கூட்டணியை அவன் வென்றிருக்கிறான். அதை அவன் மிகப்பெருமையாகவும் கர்வத்துடனும் குறிப்பிட்டு பெருமைகொள்கிறான். கார்வேலன் இக்கூட்டணியை முறியடித்தாலும் பின்வந்த பல்லவர்களும் சோழர்களும் கூட கலிங்கத்தின் மேல் தங்களது அதிகாரத்தினை தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர். அதற்கு காரணம் வேறொன்றும் இல்லை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான வாணிபத்திற்கு கலிங்கத்துறைமுகங்கள் பெரும் உதவியாக இருந்தன என்பது தான்.

இக்கட்டுரைக்கு மூலமாக இருந்தது Epigraphia Indica Vol 20.