ஆகமம் – ஒரு பார்வை!
ஆகமம் என்றால் என்ன? அப்படி என்ன தான் இருக்கு ஆகமத்தில்? ஏன் அதை ஏற்கனும்? ஏன் அதை நிராகரிக்கனும்? அதற்கு ஏதாவது வரலாற்று சான்றுகள் இருக்கிறதா? மொத்தம் எத்தனை ஆகமம் இருக்கிறது? ஆகமத்தினால் நமக்கு என்ன பயன்? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் வரலாற்று ஆர்வலர்களுக்கும் வெகுஜன மக்களுக்கும் கோவில் குடமுழுக்கு, திருவிழாப் போன்ற காலங்களில் அவ்வப்போது எழும்.

ஆகமம் என்பது எந்த மொழி கலப்புமற்ற ஒரு தூய தமிழ் சொல். ஆனால் பின்னாளில் அது சமஸ்கிருதமயமானதும் அம்மொழி வழியில் பொருள்கொள்ளவும் வழிவகை செய்கிறது என்பது தனித்து விவாதிக்க வேண்டியது.
ஆகமம் என்பது ஆ + கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்நிலைத் தொடர். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் என்னும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும். உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொல் தொடர் தான் ஆகமம்.
கடவுளை அடைவதற்கு இரு வழிகளை பிரதானப்படுத்தியிருக்கிறார்கள். அதில் ஒன்று வேத மரபின் கரும காண்டத்தின் வழியே வேள்வியின் மூலமும்,வேதத்தின் ஞான காண்டமான வேதாந்தத்தினை (உபநிடதம்) ஏற்றும் கடவுளை அடையலாம். ஆதலால் சைவம் குறிப்பிடும் வேதம் என்பது வேதாந்தமே.
அதாவது திருக்குறள் என்பது பொதுவான ஒரு நூல். அதனை இதுவரை சைவ,வைணவ,ஜைன,பௌத்த, கிருத்துவ, ஆசீவக மதத்தின் கருத்தை முன்மொழியும் நூலாக இதுவரை பலர் எழுதியிருக்கிறார்கள். அதுபோல தான் வேதம் என்பது பொதுவான நூல். அதில் இருந்து இராமானூஜர் ஒரு கருத்தையும், ஆதி சங்கரர் ஒரு கருத்தையும், மத்வாச்சாரியார் ஒரு கருத்தையும் தனித்தனி தத்துவங்களாக போதித்தார்கள். அதன் வழியில் முக்தியை தேடுகிறார்கள் அவர்களின் சீடர்கள்.
இதேபோல் பெரும்பான்மை பிராமணர்கள் வேதாந்தத்தினை ஏற்றும் ஸ்மிருதியை ஏற்றும் சடங்குகளை செய்து கடவுளை வழிபடுகிறார்கள். இவ்வாறு ஸ்மிருதியை ஏற்ற பிராமணர்கள் தான் ஸ்மார்த்த பிராமணர்களாகிறார்கள்.
இதற்கு இணையான அதே சமயம் வேத கருத்தினை சிவனாக மட்டுமே கொண்டு வேதாந்தத்தினை (உபநிடதம்)பொதுவாக ஏற்று, ஆகம வழி கடவுளை அடைவது இரண்டாவது முறை. ஆகம முறையில் கடவுளை அடைவது தான் சைவத்தின் மூல தத்துவம். இந்த ஆகம முறை வெறும் சைவ, வைணவ மதங்களில் மட்டுமே இருக்கும் மரபல்ல. பௌத்த, சாக்த, ஜைன போன்ற வேதத்திற்கு எதிரான மதங்களிலும் ஆகமங்கள் உண்டு.
ஆரம்ப காலத்தில் ஆகமம் என்பது தந்திர முறையாக மட்டுமே இருந்தது. அதாவது தாந்த்ரீக மரபு. அப்பர் தேவாரத்தில் தந்திரம் என்பது ஆகமம் என்றே கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க சான்று. அதே சமயம் வேத வேள்விக்கு எதிரான சடங்காக ஆகம முறை இருந்து வந்தது என்பது தக்கனின் யாகத்தினை சிவன் வீரபத்திரரை கொண்டு வீழ்த்துவதை சுட்டிக்காட்டலாம். அதனை அப்பர் பெருமான் ஆகம வழியை தவறிய தக்கனின் யாகத்தை வீழ்த்தியதாகவே குறிப்பிடுகிறார்.
ஆனால் பிற்காலத்தில் இந்த ஆகம முறையென்பது காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளது. வேதம் Vs ஆகமம் எனும் முறை ஒன்றிணைந்து இரண்டும் ஒன்று என்றே கருத வழிவகை செய்கிறது.
முதலில் ஆகமத்தின் வரலாற்றினை அறிய முயற்சிப்போம். ஆகமங்கள் பெரும்பாலும் இன்று கிரந்தத்தில் தான் உண்டு. எனினும் சில ஆகமங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஏன் கிரந்த எழுத்தில் ஆகமங்கள் இருக்கிறது என்று கேட்கலாம். சமஸ்கிருதத்தை இன்று அணுகுவதுபோல் வரலாற்று காலத்தில் அணுகக்கூடாது. சமஸ்கிருதம் வரலாற்று காலத்தில் அனைத்து மதங்களுக்குமான பொதுவான மொழியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் சமஸ்கிருதத்திற்கு தேவநாகரி முறையில் எழுத வாய்ப்பிருந்தும் தமிழர்கள் கிரந்த முறையிலேயே ஆகமங்களை எழுதி வந்துள்ளார்கள். கடந்த இரு நூற்றாண்டுகளாக பல வரலாற்று ஆய்வாளர்கள் சமஸ்கிருத நூல்களான வேதம், வேதாந்தம், உபநிடதம்,ஸ்மிருதி போன்ற அனைத்தையும் மொழிபெயர்த்தார்கள். அவற்றை விளக்கி நூல்கள் எழுதினார்கள். ஆனால் ஆகமங்களை பற்றி அவர்களில் யாருமே பேசவும் இல்லை. எழுதவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றை பற்றி அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.
ஏனெனில் தமிழக எல்லையை தாண்டி வடக்கே இதுவரை எந்த மூலையிலும் ஆகமங்கள் இன்று வரை கிடைத்ததில்லை என்பது ஆச்சரியமான செய்தி. ஆகமங்களை பற்றி தேடி படித்து, அவற்றை பதிவு செய்த ஒரே வட இந்திய ஆய்வாளர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா தான். அவர் எழுதியதில் மிக முக்கியமான நூல் A History of Indian Philosophy (5Vol)எனும் நூல் தான். அதில் அவர் குறிப்பிடுவது பின்வருமாறு,
ஆகமங்களின் காலங்களை சரியாக கணிக்கமுடியவில்லை என்றாலும் இவற்றை கிபி 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரையிலும் கணித்து, அவை தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக இருந்திருப்பதாகவும் (இப்போது பல மாதிரியாக திரிந்திருக்கிறது என அறிக) தென்னிந்தியா தவிர்த்து இது வடக்கில் எங்கேயும் வழக்கிலும் இல்லை. ஆகமத்தை பற்றிய சான்றுகள் கிடைத்ததும் இல்லை. உலக புகழ்பெற்ற காசியில் (வாரணாசி) பல சமஸ்கிருத நூல்கள் கிடைத்திருக்கிறதாம். ஆனால் அங்கேயும் கூட ஆகமங்கள் கிடைக்காமல் போனது ஆச்சரியமளிக்கிறது எனவும் தெரிவிக்கிறார்.
ஏன் ஆகமத்தினை பல ஆய்வாளர்களும் படிக்கவில்லை? என கேட்டால், பெரும்பான்மை ஆய்வாளர்கள் வட இந்திய வரலாற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால் சமஸ்கிருதத்தை படிக்க அவர்களுக்கு தேவநாகரி மட்டுமே போதுமானதாக இருந்தது. அதேபோல் அவர்களுக்கு நாகரி எழுத்திலேயே அனைத்து சமய நூல்களும் கிடைத்தது. வட இந்தியாவில் கிரந்தம் எனும் எழுத்துக்கு வேலையே இல்லாமல் போனது. அதேபோல் தேவநாகரி தென்னிந்தியாவுக்குள் ( பல்லவ இராஜசிம்மனின் கல்வெட்டை தவிர்த்து, அதுவும் கூட கிரந்தம் + நாகரி என இரண்டு scriptலும் உண்டு) நுழையவே இல்லை. ஆகையால் ஒரே மொழியான சமஸ்கிருதத்தை படிக்க இரண்டு எழுத்துமுறைகளை கற்க அவர்கள் முன்வரவில்லை. அதே சமயம் கிரந்தம் என்பது சமஸ்கிருத மொழியை தமிழுடன் கலந்து எழுதுவது. பெரும்பான்மை வார்த்தைகள் சமஸ்கிருதமாக இருந்தாலும் சில தமிழ் வார்த்தைகளும் உண்டு. அதே சமயம் சமஸ்கிருத சொல்லானது தமிழ் எழுத்தில் பெரும்பான்மையாக எழுதப்பட்டிருக்கும் அதில் சில மட்டுமே சமஸ்கிருத எழுத்தாக அமைந்திருக்கும். இது ஒரு காரணம்.
மற்றொரு காரணம் இங்குள்ள சிவாச்சாரியார்கள் கிபி 14-17 வரையான காலக்கட்டங்களில் ஆகம வழியினை விட்டு விலகி அத்வைத (ஸ்மார்த்த) தத்துவங்களுக்குள் மூழ்கியிருந்தார்கள். ஆகையால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஆகமத்தினை கற்றுத்தேர்ந்த சிவாச்சாரியர்கள் இருந்தனர் என மு.அருணாசலம் அவர்கள் குறிப்பிடுகிறார். இத்தனைக்கும் சைவ ஆகமங்களில் ஸ்மார்த்தர்களுக்கு கருவறையில் நுழையும் உரிமையோ, சிவனை பூஜிக்கும் உரிமையோ கிடையாது என்றும் மு. அருணாசலம் அவர்கள் தனது ‘The Saivagamas’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.இதனால் ஆகமங்கள் தொடர்ச்சியாக கிடைக்காமல் போனது, பல ஆகமங்கள் பாதி தான் கிடைத்திருக்கிறது. இன்று 9 ஆகமங்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இவை தவிர கிரந்தத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆகமம் நாகரி வடிவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை செவ்வனே செய்தவர்கள் பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனர் டாக்டர் ஃபிலியோசட் மற்றும் N.R.பாட் ஆவர். இவர்கள் இருவரும் சேர்ந்து எண்ணற்ற சமஸ்கிருத நூல்களை ப்ரெஞ்ச்சில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சாக்த ஆகமங்களும் வைணவ ஆகமங்களும் கூட பெங்கால் பகுதிகளில் பிரபலமடைந்தது சமீப காலங்களில் தான். சாக்த ஆகமங்களை கற்றுத்தேர்ந்து அதனை புத்தகமாக வெளியிட்டவர் ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய சர் ஜான் உட்ரஃப் தான். இன்று தாந்த்ரீக மரபை ஆராய்ந்து எழுதும் பலரும் மூலமாக குறிப்பிட்டுக்காட்டும் ‘மகாநிர்வாண தந்திரம்’ எனும் சமஸ்கிருத நூலை மொழிபெயர்த்தவரும் இவரே.
பௌத்த ஆகமங்களை எடுத்து பார்த்தாலும் அது தேரவாத பௌத்தத்தில் வெகுபிற்காலத்தில் தான் இடம்பெறுகிறது. ஆரம்ப காலத்தில் தாந்த்ரீக பௌத்தமான வஜ்ராயன பௌத்தத்திலும் மகாயாண பௌத்தத்திலும் மட்டுமே ஆகமங்கள் உள்ளன. இதேபோல் ஜைன மதத்தில் திகம்பர பிரிவில் வரும் ஆகமங்கள் பிற்காலம். தாந்த்ரீக ஜைனமான யாப்பனியாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆகமங்கள் இடம்பெறுகின்றன.
வேத மரபிற்கும் ஆகம மரபிற்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. அதாவது வேத வேள்வியில் கடவுளுக்கான படையலை செலுத்திவிட வேண்டும். வேதத்தினை பொறுத்தவரை நெருப்பு பிரதானமாகிறது. அதற்கு படையலை இட்டு முடித்துக்கொள்வார்கள். ஆகம மரபில் கடவுளை உருவமாக செய்து குளிப்பாட்டி, அலங்காரம் முதலியவை செய்து படையலை இலையில் போட்டு நம் வீட்டிற்கு வந்த உறவினரை உபசரிப்பதை போன்று சடங்குகளை செய்து, பின் அந்த படையலை பகிர்ந்து உண்பர். இவை இரண்டும் பண்டைய வரலாற்றில் இருவேறு முறையான வழிபாடுகள். ஆனால் இன்று இவை இரண்டையும் ஏற்று தான் சடங்குகள் நடக்கின்றன.
முதலில் ஆகமத்தின் பகுதிகளை காண்போம். ஆகமங்கள் நான்கு பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை நான்கு பாதங்கள் என முறையே சரியை, கிரியை,யோகம், ஞானம் என்பதாகும்.
இதில் சரியை எனும் பகுதி தனிநபர் ஒழுக்கம் மற்றும் அவர் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதனை பற்றியது. இதில் வேத ஸ்லோகங்கள் சில உண்டு. ஆனாலும் ஆகமத்திற்கென தனித்த சமஸ்கிருத ஸ்லோகங்கள் தான் இதில் பிரதானமானது.
கிரியை என்பது தான் கோவில் கட்டுமானம், திருவிழா, குடமுழுக்கு போன்ற காலங்களில் செய்ய வேண்டிய சடங்குகளை கூறுகிறது. ஏதேனும் தவறுகள் நேரும்போதோ அல்லது கோவில் கட்டி முடித்த பின்னர் செய்யும் பிராயச்சித்தம் போன்றவைகள் இதில் அடங்கும். இதில் கட்டிடக்கலை பெயர்கள் பெரும்பாலும் சமஸ்கிருத சொற்களாகவே இடம்பெறும்.
யோகம் என்பது பொதுவாக யோகாசனம். இதை தாந்த்ரீக வழியில் பின்பற்றும் சாக்தம் போன்ற மதங்கள் குண்டலினி யோகம், ஹத்த யோகம் போன்றவைகளை சொல்லும். ஆனால் சைவ ஆகமங்களில் பதஞ்சலி யோக நிலைகள் தான் பெரும்பாலும் இடம்பெறும். யோகத்தின் மூலம் initiate செய்வது தான் இது.
கடைசியாக ஞான பாதம். இந்த மூன்று பாதத்தினையும் சரியாக பின்பற்றி வருவோருக்கு ஞானம் கிடைக்கும். இது தான் ‘பதி’யை அடையும் கடைசி படி. ஞான பாதம் என்பது தான் ஆகமங்களிலேயே தனித்துவமானது. இது பெரும்பாலும் தமிழிலேயே உண்டு. நான்கு பாதங்களுமே போதுமானது. ஆகமத்தினை விடுத்து சென்று பொது நூல்களாக கருதப்படும் வேதத்தினை ஏற்க வேண்டிய தேவையில்லை. ஏன் சைவ ஆகமங்கள் ஸ்மார்த்தர்களுக்கு உரிமை மறுக்கிறது என்றால் அவர்கள் ஆகமத்தினை விடுத்து ஸ்மிருதி வழியில் செல்வதால் தான்.
சைவ ஆகமங்கள் மற்றும் அதன் உப ஆகமங்கள் என மொத்தம் 28 ஆகமங்கள் இருக்கின்றன. அதில் காமிகாகமம், காரணாகமம், மகுடாகமம் போன்றவை தான் இன்று பெரும்பாலும் வழக்கில் இருக்கும் ஆகமங்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஆகமத்தினை சாதி ஏற்றத்தாழ்வுகளின்று யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. கடந்த நூற்றாண்டு வரையிலும் பல பெருந்தச்சர்கள் (ஸ்தபதிகள்) ஆகமங்களை படித்திருந்தனர். சில நேரங்களில் சிவாச்சாரியார்கள் ஆகமங்களில் இருந்து தவறும்போது அதனை சுட்டிக்காட்டும் அளவில் இருந்தனர் என்கிறார் திரு மு.அருணாசலம். அதேபோல் கோவிலினுள் நுழைய அனைவருக்கும் உரிமை உண்டு என்கிறது ஆகமம். எந்த ஆகமமும் சாதியையோ வர்ணாசிரமத்தையோ எந்த இடத்திலும் பேசவில்லை. இதை மு.அருணாசலம் அவர்கள் பதிவு செய்கிறார். ஆனால் சமீபகாலமாக எந்தெந்த சாதியினர் எந்தெந்த இடங்களில் நின்று கடவுளை தரிசிக்க வேண்டும் என ஆகமங்களில் இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர். இவற்றில் எதை ஏற்பது? எதை மறுப்பது? என தெரியாமல் குழம்பும் அளவிலேயே இருக்கிறோம். இதனை தெளிவுபடுத்த வேண்டுமானால் இதுவரை கிடைத்துள்ள ஆகமங்களை முழுமையாக தமிழ்படுத்தி வெளியிட வேண்டும். அதன்மூலம் ஆகமத்தின் சாராம்சத்தினை மக்களே படித்து தெளிவுபெற்று கொள்ளட்டும். அது தான் ஆகம குழப்பத்திற்கான தீர்வாக அமையும்.
இதேபோல் தமிழரின் பண்டைய கட்டிடக்கலையின் பெரும்பான்மை விடயங்கள் ஆகமங்களில் புதைந்து கிடக்கின்றன. மொத்தமுள்ள 28ஆகமங்களில் 12 ஆகமங்கள் கட்டிடக்கலை பகுதிகளை விரிவாக பேசுகிறது. அவற்றை முழுமையாக வெளிக்கொணர்வதும் காலத்தின் கட்டாயம். அதற்காக வேணும் ஆகமத்தினை தமிழ்படுத்துவது அவசியமானதாகிறது.

தற்போது பெரும்பான்மை கோவில்களில் பின்பற்றப்படும் காமிகாகமம் மட்டும் இதுவரை தமிழில் வெளிவந்திருப்பதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மற்ற ஆகமங்களையும் முழுமையாக தமிழ்படுத்தப்பட வேண்டும்.
மயமதம் ,காசியப சில்ப சாஸ்திரம், ஸாரஸ்வதியம்,ஸ்ரீ தத்துவநிதி, ஸகலதிகாரம் இவையெல்லாம் தமிழிலும் கிடைக்கிறது
உண்மையும் பொய்யும் சரியான அளவுகளில் கலந்த கட்டுரை…யார் அந்த அருணாச்சலம்…என்று அவர் ஆகம அதாரிடி ஆனார்…
ஆகமங்களைப் பற்றிய அருமையான அறிமுகக் கட்டுரை