கடவுளுக்கே மதமாற்றம்!

பெரும்பாலும் வரலாற்றில் மன்னர்களை சமயவாதிகள் மதம் மாற்றிய கதைகள் இடம்பெறும். அவ்வகையில் மகேந்திர பல்லவன் வேறோரு சமயத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதாக திருச்சிராப்பள்ளி குடைவரை கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். அதேபோல் சைவ குரவரான ஞான சம்பந்தர் பாண்டியன் நெடுஞ்செழியனை சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றியதாக பெரிய புராணம் கூறும். இராமானூஜர் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பிட்டிதேவனை விஷ்ணுவர்தனன் என பெயர் மாற்றி சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாற்றியதாக குருபரம்பரை கதைகள் குறிப்பிடும்.
ஆனால் ஒரு சமயத்தின் கடவுளையே இன்னொரு சமயவாதிகள் தமதாக்கிக்கொண்ட கதைகள் நிகழ்காலத்தில் நடந்துவருகின்றன. அவ்வகையில் ஐயனார் – கருப்பசாமி – மாரியம்மன் – பேச்சியம்மன் போன்ற குலதெய்வ (சிறுதெய்வ) கடவுளர்களை இன்றைய பெருமதங்கள் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றன. அவ்வகையில் அதன் முதல்படியாக குலதெய்வ கோவில்களில் வடமொழி மந்திரங்களும் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடனாக பாமர மக்கள் நம்பிக்கை கொண்டு பலியிடுவதை தடுத்து நிறுத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதனை எதிர்த்து பலர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனால் இவ்வாறான குலதெய்வ (சிறுதெய்வ) கடவுளர்களை வரலாற்று காலத்தில் எவ்வாறு எடுத்துக்கொண்டு அக்கடவுளர்களையே மதம் மாற்றியுள்ளனர் என்பதை பற்றிதான் இந்த கட்டுரை பேசப்போகிறது.
பழங்குடிகளின் சடங்குகள் தான் பிற்காலத்தில் தாந்த்ரீகமாக ஒரு கட்டமைக்கப்பட்ட மரபாக வளர்ச்சியடைந்து வேதாந்த மரபிற்கு எதிரானதாக இருந்தது. இந்த பழங்குடி கடவுள்கள் சில அப்படியே பெருமதங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு புராணங்கள் பல படைக்கப்பட்டன. இது ஒரு மேலோட்டமான பார்வை. இதனை ஆராய்ந்து பார்க்க முற்படுவதற்கு முன் இந்த தரவுகளை இந்தியா ஒன்றியத்தின் வடக்கு – தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரித்து இதனை ஆராய்வோம்.
இந்த கட்டுரைக்கு நாம் எடுத்துக்கொள்ளப்போகும் இரண்டு முக்கியமான ஜைன நூல்களில் ஒன்று தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான “நீலகேசி” மற்றொன்று குஜராத்தின் ஸ்வேதாம்பர ஜைன துறவி விஜயமுனி என்பவரால் இயற்றப்பட்ட “குமாரபாலதேவசரித்ரா” என்பவைகள் தான்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நீலகேசி எனும் நூலானது மற்றொரு காப்பிய நூலான குண்டலகேசி எனும் நூலுக்கு Counter Part நூல் ஆகும். அதாவது குண்டலகேசி எழுதப்பட்டிருக்கும் அதே தொனியில் நீலகேசியும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒன்று பௌத்தம் சார்ந்தது மற்றொன்று ஜைனம் சார்ந்தது. இவை இரண்டும் தமக்குள்ளாகவே முரண்பட்டும் பிற சமயங்களுடனும் வாதிட்டும் தத்தம் சமயங்களை நிறுவிக்கொள்ளும். இப்போது நீலகேசி காப்பியத்தினை சுருக்கமாக காண்போம்:
பாஞ்சால நாட்டின் புண்டர வருத்தனம் என்னும் நகரில் கதை தொடங்குகிறது. இங்கு ஆட்சி செய்தவன் சமுத்திர ராசன். இந்நகரின் சுடுகாட்டுப் பகுதியே பாலாலயம் என்ற சுடுகாடு. பேய்க்கணம் சூழ இங்குக் குடி கொண்ட தெய்வமே பிடாரி. இத்தெய்வ அருளால் ஆண்மகவு பெற்ற நங்கைக்காக நன்றிக் கடன் செலுத்த நகர மக்கள் ஆட்டைப் பலி கொடுக்க வருகின்றனர். அங்குத் தவம் செய்து கொண்டிருந்த சமண முனிவர் முனிச்சந்திரன் “தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுதல் தீவினை” என அறிவுறுத்தினார். அதோடு அவர் அருளுரை ஏற்ற நகர மக்கள் அவர் ஏவல்படியே மண்ணால் ஆட்டு உருவம் செய்து பலி கொடுத்துத் தம் விரதம் முடிக்கின்றனர். இதனால் தமக்கு ஊன் உணவு கிடைக்கப் பெறாத பேய்க்கணம் முனிவரை அகற்ற வலிமை வாய்ந்த ‘நீலகேசி’ என்ற பேயை அழைத்து வருகின்றான். முனிச்சந்திரனின் தவ ஆற்றலை அறிந்த நீலகேசி புறத்தே நின்று அச்சுறுத்தியும், மாயாஜாலம் காட்டியும், கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறது. பல்வேறு உருவங் கொண்டு முனிவரை வீழ்த்தவும் முயற்சி செய்கிறது. பின் அழகிய காமலோகை என்னும் பெண் உருக் கொண்டு காமத்தால் மயக்க முற்படுகிறது. எதற்கும் சிறிதும் அஞ்சாத முனிச்சந்திரன் தன் ஞானத்தால் அவள் யார் என்பதை உணர்ந்து அவளை நல்லறப்படுத்துகிறார். மேலும் அவர், நீலகேசிக்கு மக்கள், தேவர், நரகர், விலங்கு எனும் நான்கு வகைப் பிறப்பால் வரும் தீமைகளை எடுத்துரைக்கிறார். அதோடு சமணத் தத்துவங்களை எல்லாம் அவளுக்குப் போதிக்கிறார்.

‘உயிர் முதலிய உள்பொருள்களை மனம் மற்றும் பொறிகளால் காணுதல்; நினைவு, மீட்டுணர்வு, ஊகம், கருத்து, நூல் என்னும் அளவைகளால் உணர்தல், இவை நன்ஞானம், உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் இவற்றை அழித்து, காமம், அச்சம், அவா, உலகியல், பிற சமயக்கணக்கர், போலித் தலைவர் இவற்றை நீக்கி, ஞானம், பூசை, குலம், சாதி, பலம், இருத்தல், தவம், உடல் இவற்றால் தோன்றும் எட்டுவகைச் செருக்கை நீக்கி, நிலைத்தல், நற்காட்சி. நன்ஞானம், நற்காட்சியோடு நன்றின்பால் செல்வது நல்ஒழுக்கம்.
இவ்வாறு சமண அறம் உரைத்த முனிச்சந்திர முனிவர் இந்நல் அறங்களை உலகிற்குப் பரப்புமாறு நீலகேசியைப் பணிக்கிறார். அவளும் அவ்வண்ணமே காம்பிலி நாடு சென்று பௌத்த சமயக் கொள்கையில் நிறைந்த புலமையும் சிறந்த வாதத் திறமையும் கொண்ட குண்டலகேசியுடன் சமய வாதம் செய்து, பௌத்த சமயக் கொள்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று; ஜின தருமமே உயர்ந்தது என நிலைநாட்டிக் குண்டலகேசியைத் தன் சமயக் கொள்கையை ஏற்கச் செய்கிறாள். அடுத்துக் குண்டலகேசியின் ஆசிரியர் அருக்க சந்திரனை உஞ்சை மாநகரில் சந்தித்து அவரையும் வாதில் வெல்கிறாள். பின் அருக்க சந்திரனின் ஆசிரியர் மொக்கலனைப் பதுமபுரத்தில் சந்தித்து வாதிட்டு வெல்கிறாள். அவர் நீலகேசியை ஞானாசிரியராகக் கொண்டு சமண சமயத்தைத் தழுவுகிறார். இறுதியாகக் கபிலபுரம் சென்று பௌத்த சமயத்தை நிறுவிய புத்தரையே சந்தித்து வெல்கிறாள். இவ்வாறு நூலின் பாதிக்கு மேற்பட்ட பகுதி பௌத்த சமய மறுப்பாகவே அமைகிறது. புத்த ஜாதகக் கதைகளிலுள்ள குறைபாடு, சமயத் தத்துவத்தில் காணப்படும் முரண்பாடு மற்றும் பௌத்த சமயத் துறவிகளின் ஆடம்பரமான வாழ்க்கை ஆகியவற்றைச் சுட்டியே சமய வாதம் நிகழ்கிறது.

ஆக சுடுகாட்டில் உறையும் ஒரு பிடாரி (சிறுதெய்வம்)தெய்வத்திற்கு அவ்வூர் மக்கள் ஆட்டை பலிகொடுக்க வருவதை தடுத்து பொம்மை ஆடு ஒன்றை செய்து ஒரு சமய சடங்கினை முற்றிலுமாக ஒழித்ததை, சம்மந்தப்பட்ட தெய்வமே பொறுத்துக்கொள்ளமுடியாமல் கோபத்தில் ‘நீலகேசி’ எனும் அணங்கை தமக்கு ஆதரவாக வாதம் செய்ய அழைத்து வருகிறது. ஆனால் அந்த அணங்கையும் சமண முனிவர் மாயத்தால் வென்று சமண தத்துவங்களை போதித்து பின் தனதாக்கி கொண்டு அதன் மூலம் பிற சமயவாதிகளையும் பௌத்தவாதிகளையும் வெல்கிறார்.
இப்போது குஜராத்தில் கிபி 12 ஆம் நூற்றாண்டில் நடந்த மற்றொரு நிகழ்வினை அதன் சமகாலத்து நூலான ‘குமாரபாலதேவசரிதா’வில் இருந்து காண்பதற்கு முன்னர் அதனை பற்றிய ஒரு சிறிய முன்னுரை.
கிபி 1143-1171 வரை குஜராத்தின் தற்போதை பதானை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த அரசர் சாளுக்கிய கிளை மரபில் வந்த குமாரபாலதேவர். இவர் ஒரு தீவிர சைவராக இருந்து பின் ஜைனத்திற்கு மாறியவர் என்பது பல இலக்கியங்களின் மூலம் அறியப்படும் தகவல். இவரது காலத்தில் வாழ்ந்த ஸ்வேதாம்பர ஜைன துறவி தான் ஹேமசந்திரர். தற்போது பதான் நகரில் இருக்கும் Hemachandracharya North Gujarat University இவரது பெயரில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘குமாரபாலதேவசரிதா’ என்பது இவரது சமகாலத்தில் எழுதப்பட்ட குமாரபாலதேவரை பற்றிய ஒரு முழு இலக்கிய ஆவணம் என்றே சொல்லலாம். இதில் தான் குமாரபாலர் சைவத்தில் இருந்து ஜைனத்திற்கு மாறிய தகவலும் இப்படி அவர் மாறியதற்கு காரணம் ஹேமசந்திரர் தான் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது ‘குமாரபாலதேவசரிதா’வில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகளில் ஒரு பகுதியை மட்டும் சுருக்கமாக காண்போம்:

சாளுக்கிய கிளை வழியில் குஜராத்தில் ஆட்சிபுரிந்த குமாரபாலரின் குலதெய்வமான காந்தேஸ்வரி தெய்வத்திற்கும் அதன் உபதெய்வங்களுக்கும் நவராத்திரி பெருவிழாவில் ஒன்பது நாட்களும் பல ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதில் நவராத்திரி முதல் நாளில் 100 ஆடுகளும் ஒரு எருமை மாடும் பலி கொடுக்கப்படும். இரண்டாவது நாள் 200 ஆடுகள் இரண்டு எருமைகள், மூன்றாவது நாள் 300 ஆடுகள் மூன்று எருமைகள்.. இப்படியாக ஒன்பதாவது நாள் 900 ஆடுகள், 9 எருமைகள் பலிகொடுக்கப்படுவது வழக்கமான சடங்கு. ஆனால் குமாரபாலர் சைவத்தில் இருந்து ஜைனத்திற்கு மாறிய பின்னர் 14 ஆண்டுகள் இந்த பலி கொடுக்கும் சடங்கு முற்றிலும் கைவிடப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த காந்தேஸ்வரி தெய்வமும் அதன் உபதெய்வங்களும் மன்னனின் முன் தோன்றி,”ஏன் எங்களுக்கு பலி கொடுக்கவில்லை?” என கேட்கின்றன. அதற்கு மன்னன் தான் இப்போது ஜைனத்திற்கு மதம் மாறிவிட்டதாகவும் ஜைன மரபில் பலி கொடுக்கும் வழக்கம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத தெய்வம் கோபமுற்று சூலத்தால் மன்னனின் தலையில் ஓங்கி அடிக்கிறது. இச்சம்பவத்தினால் மன்னனுக்கு அம்மை நோய் தாக்கியது. உடனே ஸ்வேதாம்பர ஜைன துறவியான ஹேமச்சந்திரர் வருகிறார். தனது மந்திர சக்தியினால் மன்னனை குணமடைய செய்கிறார். காந்தேஸ்வரி தெய்வம் வருகிறது. அத்தெய்வத்துடன் அறிவார்ந்த முறையில் வாதிட்டு உயிர் பலி தவறு என எடுத்துரைத்து பார்க்கிறார். தெய்வம் இவரது பேச்சிற்கு இணங்குவதாக தெரியவில்லை. உடனே தனது மந்திர சக்தியை உபயோகித்து தெய்வத்தினை கட்டி போடுகிறார்.
இதனால் துன்புற்ற காந்தேஸ்வரி தெய்வம் தன்னை விடுவிக்ககோரி மன்னனிடம் கெஞ்சுகிறது. தன்னை விடுவித்தால் இனி உயிர்பலியை ஏற்காமல் சைவ படையலை ஏற்பதாக வாக்கு கொடுக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு பின் ஹேமச்சந்திரரால் காந்தேஸ்வரி தெய்வம் விடுவிக்கப்படுகிறது. இதன்பின்னர் நவராத்திரி பெருவிழாவில் பலி கொடுக்கும் சடங்கு நிறுத்தப்பட்டது. சைவ படையலை ஏற்ற இத்தெய்வம் இந்த சம்பவத்திற்கு பின்னர் மன்னனின் உளவுத்துறை அதிகாரியாக கூட செயல்படுகிறது. அதாவது இவனது ஆட்சிக்கு கீழிருந்த சௌராஷ்ட்ர அரசன் ஒருவன் தனது வீட்டில் ஆட்டை சமைக்கிறான் என மன்னனுக்கு தெரிவிக்க அவன் தனது படையினை அனுப்பி சௌராஷ்ட்டிர அரசனை தண்டிக்கிறான்.
ஆக இப்படியாக வரலாற்று காலத்திலேயே சமண – பௌத்த மதங்கள் பழங்குடி தெய்வங்களையும் குலதெய்வங்களையும் தந்திரமான முறையில் தமக்கு சாதகமாக மாற்றியதுடன் அவற்றை கொண்டே பிற மதங்களையும் வீழ்த்தியிருப்பது மேற்கண்ட தரவுகளின் மூலம் தெரியவருகிறது. இவைதாண்டி தற்போது ‘Vegetarian Only’ எனும் பதாகைகள் ஜைன மத பின்னணியில் வேரூன்றியதற்கு பின்னால் முடியாட்சி காலத்திலேயே அசைவ உணவை வீட்டில் சமைத்த சௌராஷ்ட்டிர மன்னனுக்கு தண்டனை வழங்குவதுவரை நீண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மன்னர்களையும் மக்களையும் அதிகாரம் படைத்தோரையும் மதமாற்றம் மூலம் சில சமயங்கள் தன்வசப்படுத்துவதை இங்கு பெரிதாக விவாதித்து வருகிறோம். நிகழ்காலத்தில் இந்து ‘சனாதன’ சமயத்திற்குள்ளாகவே சிறுதெய்வங்களையும் இழுத்துக்கொள்ள பல முயற்சிகள் நடந்தேறுகின்றன. வடகிழக்கு இந்தியாவில் வாழும் பழங்குடிகளில் பெரும்பான்மையானோர் கிருத்துவத்தை தழுவி தம் அடையாளங்களை துறந்துவிட்டனர். ஆனால் கடவுளையே மதம் மாற்றிய செயல்களுக்கு வரலாற்றில் எப்போதும் ஜைன-பௌத்த மதங்களே நமக்கு சான்றுகளாக நிற்கின்றன.