காண்டாமிருகம் எனும் ஓர் இனத்தின் வரலாறு!
மனித இன வரலாற்றை பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியினை காலவாரியாக இதுவரை பலர் எழுதியிருக்கின்றனர். மனிதனுக்கு இணையாக பல ஆயிரமாண்டுகளாக மனிதனோடு தொடர்ந்து வந்துக்கொண்டிருந்த மற்றொரு இனம், அதே மனிதனின் மூடநம்பிக்கையால் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்பதை பற்றிய கட்டுரை தான் இது.
அப்படி மனிதனுக்கு இணையாக வரலாற்று ஆவணங்களை காலவாரியாக வைத்துக்கொண்டிருக்கும் அந்த மற்றொரு இனம் தான் காண்டாமிருகம். மனிதனை போல் பெருமைமிக்க நாகரீக- பண்பாட்டு வளர்ச்சியினை எல்லாம் காண்டாமிருகம் கொண்டிருக்கவில்லை. மாறாக மனிதனின் அந்த பெருமைமிகு வரலாற்றை தனது இரத்த கறையினால் கழுவ எத்தனிக்கிறது இந்த காண்டாமிருகம் எனும் ஒரு இனத்தின் வரலாறு. ஒருவேளை காண்டாமிருகத்திற்கும் இயற்கையானது அறிவை தந்திருந்தால், காண்டாமிருகங்கள் அதன் முன்னோர்களின் வரலாற்றை அறிந்திருந்தால் மூன்றாம் உலகப்போரானது மனிதனுக்கும் காண்டாமிருகத்திற்கும் இடையில் தான் நடந்திருக்கும்.
சில ஆயிரமாண்டுக்கு முன்பு இந்தியா முழுக்க வாழ்ந்து வந்த காண்டாமிருகங்கள் இன்று அசாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாமோ மாவட்டத்தில் அமைந்துள்ள கஜிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் வாழ்ந்து வருகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இந்த பூங்காவில் மட்டுமே இருக்கின்றன. அசாம் மாநிலத்தின் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் முதன்மையானது இந்த கஜிரங்கா தேசிய பூங்கா தான்.
உலகம் முழுக்க ஐந்து வகையான காண்டாமிருகங்கள் மட்டுமே உண்டு. அதில் ஆப்ரிக்காவிலேயே இரு இனங்கள் உண்டு. ஒன்று இரட்டை கொம்புள்ள வெள்ளை காண்டாமிருகம். இது தான் இருப்பதிலேயே பெரியது, எடை அதிகமுள்ளது. சுமார் 2400 கிலோ வரை எடையிருக்குமாம் இந்த காண்டாமிருகங்கள். அடுத்ததாக கருப்பு காண்டாமிருகங்கள். இது அளவில் வெள்ளை காண்டாமிருகத்தை விட மூன்றில் இரண்டு பங்கு எடை கொண்டது. இவை தென்னாப்ரிக்கா, கென்யா,டான்சானியா காடுகளில் மட்டும் வசிக்கின்றன. இன்றைய நிலையில் வெறும் 20000 தான் இந்த இரு இனங்களின் மொத்த எண்ணிக்கை.

அடுத்ததாக ஆசியாவில் வசிக்கும் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள். இவை ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,நேபாளம், இந்தியா, சீனா என பரவலாக வாழ்ந்து வந்தது. ஆனால் இன்று நேபாளத்தில் ஒரு பூங்காவிலும் அசாமிலும் மட்டுமே உண்டு. இதன் அளவு ஆப்ரிக்க இனத்தை விட சற்று சிறியது. ஆனால் எண்ணிக்கையில் 3000+ மட்டுமே என்பது வருத்தமான ஒன்று.

அடுத்ததாக ஜாவா சுமத்ரா தீவுகளில் இரண்டு வகையான காண்டுமிருகங்கள் உண்டு. ஜாவா காண்டாமிருகம், சுமத்ரன் காண்டாமிருகம் என்றே இவை அழைக்கப்படுகிறது. இவைகளுக்கு கொம்புகள் பெரிதாக இருக்காது. உடல் எடையில் இந்திய காண்டாமிருகங்களை விட சற்று குறைவாக இருக்கும். இவ்வகை காண்டாமிருகங்கள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. மொத்தமாக 150+ தான் இருக்கிறதாம்.

நன்றி: Helpingrhinos.org
இந்திய ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் தனித்துவமானவை. அவைகளின் உடலில் போர்வை போன்ற அடர்த்தியான தோல் போர்த்தப்பட்ட சாயலில் காணப்படும்.
இந்தியா முழுக்க கிடைக்கும் பாறை ஓவியங்களில் பல இடங்களில் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மத்திய பிரதேசத்தின் பிம்பேத்காவிலும் மகாராஷ்டிரா, ஆந்திராவிலும் கூட காண்டாமிருகங்களின் உருவங்கள் காணக்கிடைக்கின்றன. இதேபோல் உலகம் முழுக்கவும் பாறை ஓவியங்களில் காண்டாமிருகங்கள் கிடைத்திருக்கின்றன. அவைகள் பழைய கற்காலம் முதல் இடைக்காலம் வரை காலக்கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியான இரத்னகர் மற்றும் இராஜாபூர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை கீறல் (Petroglyph) ஓவியத்திலும் பெரிய அளவு காண்டாமிருகம் காணப்பட்டது. அது நுண்கற்காலத்தை (Mesolithic) சேர்ந்தது என்றும் அதன் காலம் 20000 முதல் 30000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் மகாராஷ்டிரா வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இப்படி வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (Prehistoric Period) என சொல்லக்கூடிய மனித இன வரலாற்றின் தொடக்கம் முதலே பின்தொடர்ந்துகொண்டிருக்கும் காண்டாமிருகத்தின் வரலாறானது, வரலாற்றுக்கு சற்று நெருங்கிய காலமாக கருதப்படும் Proto Historic காலத்திலும் மிக வலுவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆம்! இன்று இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் சிந்துசமவெளி முத்திரைகளில் கூட காண்டாமிருகங்கள் இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா உட்பட 63 காண்டாமிருக முத்திரைகள் இதுவரை சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதுபோக இந்த காண்டாமிருக முத்திரைகள் அதிகம் கிடைத்தது கடற்கரை பகுதிகளில் தான் என சுவீரா ஜெஸ்வால் போன்ற அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் வணிக சின்னமாக காண்டாமிருக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது அவரது கருத்து.தொடர்ந்து சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பல ஆயிரம் சுடுமண் பொம்மைகளில் 6.3% சுடுமண் பொம்மைகள் காண்டாமிருகத்தை கொண்டது.

சிந்துவெளியில் கிடைத்த சுடுமண் பொம்மைகளை கொண்டே காண்டாமிருகங்கள் மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த சடங்குகளில் இடம்பெற்று இருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் சிந்துவெளியை தொடர்ந்து வரலாற்று காலங்களில் தாந்த்ரீகம் சம்மந்தப்பட்ட சடங்குகளில் காண்டாமிருகங்கள் பெரும்பங்கு வகித்தன என்பதை மறுக்கமுடியாது. நேபாளம், சீனா போன்ற நாடுகளில் காண்டாமிருக பலி என்பது நன்மை தரும் சடங்காகவும், அதன் கொம்பானது பழங்கால சீன மருத்துவத்திலும் மிக முக்கிய பங்கு வகித்தது.
சீனர்களின் பழங்கால மருத்துவத்தில் சூட்டை தணிக்கும் மருந்தாக காண்டாமிருகங்களின் கொம்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் கடந்த ஈராயிரம் வருடங்களாக சீனர்களின் பழங்கால மருத்துவத்தின் நம்பிக்கைக்காக தொடர் காண்டாமிருக வேட்டைகள் நடந்தேறியிருக்கின்றன. சீன தாந்த்ரீக முறையில் பேயோட்டும் மந்திரக்கோலாகவும் இந்த கொம்புகள் இருந்திருக்கின்றன என்பதை சீன புராதன நூல்களில் இருந்து அறியமுடிகிறது.
கடல்வாழி ‘சில்க் ரூட்’டிற்காக சீனாவிற்கு பெரிதும் உதவியது பல்லவர்கள். குறிப்பாக இராஜசிம்ம பல்லவன் சீனாவிற்கு ஆதரவாக திபெத்தியர்களை அடக்க படையனுப்பியதும். அந்த படைக்கு பெயர் வைக்கச்சொல்லி சீன அரசன் கேட்டதற்கு, இராஜசிம்ம பல்லவன் ‘ஒழுக்கம் பேணும் படை’ என பெயர் வைத்ததாக சீன வரலாற்றாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கூடவே அந்த நல்லுறவை பேண இராஜசிம்மன் சீன மன்னனுக்கு ஒரு காண்டாமிருகத்தை பரிசாக கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் சீன ஆய்வாளர்கள்.
தமிழகத்தில் காண்டாமிருகம் இருந்தது சாத்தியமா? என்பதை ஆராய்ந்தோமானால், சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை திருப்பத்தூர் மாவட்டம் பர்கூர் அருகே பையம்பள்ளி என்ற இடத்தில் நடத்திய அகழ்வாய்வில் காண்டாமிருக எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவைபோக தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்களிலும் சில இடங்களில் காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.
ஆப்ரிக்காவில் கடந்த நூற்றாண்டு வரை ஒவ்வொரு எட்டு மணிநேரத்திற்கும் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பிற்காக வேட்டையாடப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உலகநாடுகள் முழுக்க பல ஒப்பத்தங்கள் போட்டு காண்டாமிருக வேட்டையாடுதலை தடுத்திருக்கின்றன. ஆப்ரிக்க அரசு அதிதீவிரமாக நடவடிக்கை எடுத்த பின்னரே ஓரளவு கட்டுக்குள் வந்தது. மேலும் மருத்துவர்களிடமிருந்து காண்டாமிருக கொம்பின் மருத்துவத்தன்மையை விசாரித்தால் அதிர்ச்சியாகி போவீர்கள். நமது சாதாரண நகத்திலும் முடியிலும் இருக்கும் அதே Keratin எனும் புரதம் தான் காண்டாமிருகத்தின் கொம்பிலும் உள்ளதாம். மனிதர்களுக்கு முடியும் நகமும் வளர்வது போன்றே அவைகளுக்கு கொம்புகள் வளர்கின்றன என்கிறது அறிவியல் ரீதியாக வெளியாகி இருக்கும் தகவல்.
சீனர்களாவது மருத்துவ குணம் இருப்பதாக நம்பினார்கள். வேட்டையாடினார்கள். ஆனால் நேபாளிகள் இதற்கு ஒருபடி அதிகம் சென்று காண்டாமிருகத்தை தங்களது மூதாதையர்களுக்கு பலிகொடுத்தால் தான் நாடு செழிக்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என நம்பியிருக்கிறார்கள். இந்த சடங்கு கடந்த நூற்றாண்டு வரை இருந்து வந்தது தான் வேதனையான உண்மை. இது வெறும் பாமர மக்களின் நம்பிக்கையல்ல. நேபாள அரச வம்சத்தின் நம்பிக்கை. இதைபற்றி விரிவான நூல் ஒன்றை நேபாளியான ஹேமந்த் மிஷ்ரா எழுதியிருக்கிறார். நூலின் பெயர் The Soul Of the Rhino. அதில் நேபாள அரசராக முடிசூடிக்கொண்ட ஒருவர் ஒரு ஆண் காண்டாமிருகத்தை தங்களது மூதாதையர்களுக்காக வேட்டையாடி அதன் இரத்தத்தை படைக்க வேண்டுமாம். இதனால் அவர்களின் ஆத்மா சாந்தியடைந்து நாடு செழிக்குமாம். பௌத்த மகாயாணத்தில் காண்டாமிருகம் மிக முக்கியமானது. ‘காண்டாமிருக சூத்திரம்’ என தனி அத்தியாயமே இருக்கு காண்டாமிருகங்களை பற்றி. இந்த சூத்திரத்தை பாலி மொழியில் ‘Khaggavisāṇa Sutta’ என்று எழுதியிருக்கிறார்கள். இது காண்டாமிருகத்தின் கொம்பு சம்மந்தப்பட்டது.
இப்படியான சடங்கு சார்ந்த பலியாகவும் நம்பிக்கை சார்ந்த மருத்துவமாகவும் மூடநம்பிக்கையில் சிக்குண்டு காண்டாமிருக வேட்டையாடிய மனித இனம் அதோடு நிற்குமா? அதன் அடுத்தகட்டமாக காண்டாமிருக கொம்புகளில் காதணிகளையும் அணிகலன்களையும் செய்துகொண்டனர். சைவத்தின் ஒரு பிரிவான காபாலிகள் தங்களது காதுகளில் காண்டமிருக கொம்புகளினால் ஆன குண்டலங்களை அணிந்திருந்தார்கள் என டேவிட் லோரின்சன் தனது Kapalikas and Kalamukhas: Two Lost Saivaite Sects நூலில் தெரிவித்திருக்கிறார்.
இதுபோக இந்திய வரலாற்றின் பொற்காலமாக கருதப்படும் குப்தர்கள் காலத்தில் புகழ்பெற்ற அரசனான முதலாம் குமாரகுப்தன் (கிபி 414-455) தனது தங்க நாணயத்தில் அவன் காண்டாமிருக வேட்டையாடுவதை சித்தரித்து இருக்கிறான். அந்த நாணயத்திலேயே ‘கத்கத்ரத குமாரகுப்தோ ஜெயதே அனிஷம்’ என குறிப்பிட்டு தான் காண்டாமிருகத்தை வென்றவன் என கூறிக்கொள்கிறான். அவனது நாணயத்திலேயே தனித்துவமானது இந்த காண்டாமிருக நாணயம். அவன் வடக்கு பீகார் பகுதியில் தான் காண்டாமிருக வேட்டை நடத்தினான் என்கிறார் DC சர்கார். தொடர்ந்து DC சர்காரின் Studies in Indian Coins நூலை படித்தபோது மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள் காண்டாமிருகங்களை பற்றி கிடைத்தது.

கங்கை சமவெளி பகுதியில் காண்டாமிருகங்கள் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக வாழ்ந்து வந்திருக்கின்றன என்பதை அல்பிரூனியின் குறிப்பில் இருந்து அவர் மேற்கோள் காட்டுகிறார். மேலும் அல்பிரூனி தனது குறிப்பில் ‘காண்டா’ எனும் விலங்கினை பிராமணர்கள் மட்டுமே உண்பதற்கு சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து கிபி 16 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற முகலாய அரசனான பாபர் காண்டாமிருக வேட்டையாடுகிறார். அவர் வேட்டையாடிய வருடம், நாள், தேதி முதற்கொண்டு அவரது பாபர்நாமா வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குறிப்பின்படி பாபர் கிபி 1525 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி தனது படையுடன் பெஷாவர் சென்று காபூல் ஆற்றின் கரையில் 3000+ காண்டாமிருகங்களை வேட்டையாடி அங்கேயே சமைத்து உண்டதுடன் அதன் தலைகளை கொண்டுவந்து அரண்மனையில் வைத்து அழகு சேர்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் கோட்டாவை ஆண்ட இராஜபுத்திர அரசன் மிர்சா இராஜாராம் சிங் காண்டாமிருக வேட்டையாடிய ஓவியங்களும் உள்ளன. பிரிட்டிஷ் அரசாங்கம் ஆரம்பத்தில் காண்டாமிருக ஏற்றுமதிகளையும் வேட்டையாடுதலையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகையால் பல பிரிட்டிஷ் கவர்னர்களே கூட பொழுதுபோக்குக்காக வேட்டையாடியுள்ளனர். ஆனால் பிற்காலங்களில் இதன் ஆபத்தை உணர்ந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு வேட்டையாடுதலுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் இதனை தடுக்கமுடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நேபாள அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இப்படியாக மனித இனத்தால் தொடர் ஆபத்திற்குள்ளாகி இன்று அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளது காண்டாமிருகம் எனும் பேரினம். இப்போது சொல்லுங்கள் காண்டாமிருகத்திற்கு அதன் வரலாறு தெரிந்தால் மூன்றாம் உலகப்போர் என்பது மனிதனுக்கும் காண்டாமிருகத்திற்கும் தானே?
மிகவும் அருமை தரவுகளை எந்த அடிப்படையில் தொகுத்துள்ளீர்கள் க்ல அடிப்படையா? படித்தவுடன் ஆச்சரியமாக இருந்தது மனிதன் அனைத்து விலங்குகளுக்கும் துரோகம் இழைத்து தான் மட்டுமே…
அருமை.
Good Article