தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள். எனவே தான் தமிழரின் சமய மரபு வானாய், மண்ணாய், வளியாய், ஒளியாய், ஊனாய், உயிராய், உண்மையுமாய், இன்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவனே என்பதாய் அமைந்தது. அத்தகைய மரபின் அடிப்படையிலே ஒரு மாதத்தில் உள்ள நாட்களை வானில் தோன்றிய 27 நாள்மீன்களின் (விண்மீன்) பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்விண்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை என்பதாகும். ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் சிறப்பிற்குரிய நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வந்தது.

The Pleiades or the seven sisters (karthigai naskthram in Tamil astrology) is about 400 light-years away from us.

கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் மிகச்சிறந்த ஒளி பொருந்தியவை ஆகும். இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது. இத்தகைய கார்த்திகை நாள் மீன் கூட்டம் மாந்தர் காதில் அணியும் ‘மகரக் குண்டலங்கள்’ போல் ஒளிநிறைந்ததாய் அமைந்திருந்தது எனப் பரிபாடல் திரட்டு தெரிவிக்கின்றது. இதனை,“கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” – (பரிபாடல் திரட்டு 10) என்பதனால் அறிய முடிகிறது. (See above picture for magara kundala reference)

மலைபடுகடாம் என்னும் பிறிதோர் சங்க இலக்கிய நூல், நிலத்தில் பூத்திருந்த முசுண்டைப் பூக்கள் கார்த்திகை விண்மீன் கூட்டம்போல் ஒளி நிறைந்ததாய் மலர்ந்திருந்தன என்று உவமை கூறுகின்றது.”அகலிரு விசும்பின் ஆஅல் போலவாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” – (மலைபடுகடாம் – 10). மேற்கண்ட பாடலில் குறிக்கப்பட்டுள்ள ’ஆஅல்’ என்னும் சொல் கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் நாள்மீன் கூட்டத்தைக் குறிப்பதாகும். ‘அழல்’ என்னும் சொல்லும் கார்த்திகை என்பதனைக் குறித்து நிற்கின்றது என்பதனை,’ஆடு இயல் அழல் குட்டத்து‘ – (புறநானூறு 229) – என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்தும். மேற்கண்ட பாடலில் ஆடு எனக் குறிக்கப்படுவது மேட ராசியைக் ( மேஷம் ) குறிக்கும். எனவே இப்பாடல் அடி சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிப்பிடுகின்றது.

மேலும் இத்தகைய சிறப்புப் பொருந்திய கார்த்திகை மாதம் தெறுகால், தேள், விருச்சிகம் என்ற சொற்களாலும் கார்த்திகை நட்சத்திரம் அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், கார்த்திகை என்ற சொற்களாலும் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதம் பரிபாடலில் ‘எரி’ என்னும் சொல்லால் குறிக்கப்படுவதனை,’விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடைஎழில் வேழம் தலை எனக் கீழிருந்து தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற்று இருக்கை‘- (பரிபாடல் 11) – என்ற அடிகள் எடுத்துரைக்கும்.கார்த்திகை நட்சத்திரத்தன்று பெளர்ணமி கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது.

இத்தகைய கார்த்திகைத் திருநாளையும் கார்த்திகைத் திருநாளில் விளக்கீடு செய்தலையும் நற்றிணை என்னும் இலக்கியம் விளக்கியுரைக்கின்றது. வீரை என்னும் ஊரிலிருந்து ஆட்சி செய்த வேளிர்குடி அரசனாகிய வெளியன் என்பவனின் மகனாகிய தித்தன் முரசில் திரி போட்டு மாலையில் விளக்கேற்றி வைத்தான். அத்தகைய விளக்கு ஏற்றப்பட்டபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விளக்கீட்டினை எடுத்துக்காட்டுகின்றது. ‘வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇயமாலை விளக்கின்வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்கையற வந்த பொழுது‘ – ( நற்றிணை – 58 ).

அகநானூற்றின் பிறிதோர் பாடலில் தலைவியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்ற தலைவன் வருவேன் என்ற காலத்தில் வாராமையால் அதனைத் தாங்காமல் தலைவி துன்புறுவாளோ? என்று தோழி வருந்துகிறாள்.அதனைக் கண்ட தலைவி, தலைவன் குறித்த காலத்தில் வாராமல் இருந்தாலும் கார்த்திகைத் தீப விழாவினைத் தன்னுடன் சேர்ந்து கொண்டாடுவதற்கு வருவான் என்று குறிக்கின்றாள். தலைவி தலைவன் மேல் தான் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குறிப்பிடும் பொழுது கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்ட தன்மையினையும் எடுத்துரைக்கின்றாள். முழுமதி நிறைந்த நன்னாளில், கார்த்திகைநாள் மீன்கள் சேரும் நடுச்சாமத்தில் ஊர்மக்கள் கார்த்திகை விழாக் கொண்டாடுவர். அதனைக் கொண்டாடும் வகையில் தம் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பர். தம் வீடுகளை மாலைகளால் அலங்கரிப்பர் என்று குறிப்பிடுகிறாள். இதற்குச் சான்றாய்,’மழைகால் நீங்கிய மாக விசும்பில்குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்துஅறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றியவிழவுடன் அயர வருகதில் அம்ம‘(அகநானூறு – 141: 6 – 11) – என்ற பாடல் அடிகள் அமையும்.

Karthigai Deepam Festival Celebrated in Thiruvannamalai

சங்கப்புலவர் கண்ணங்கூத்தனார்,“நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்டதலை நாள் விளக்கின் தகை உடையவாகி,புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-தூதொடு வந்த, மழை”-(கார்நாற்பது, 26) என்கிறார். இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்று ஒப்பிடுகிறார்.

அதேபோல் ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ,”கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்” என்று வருகிறது. 

எனவே தீபம் ஏற்றுவது என்பது சங்ககால மக்களிடையே சிறப்புற்றிருந்தது என்பது தெரியவருகிறது. சமய இலக்கியக் காலத்தில் திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறையில் இக்கார்த்திகை விளக்கீடு குறித்து விளக்கியுரைப்பார். ஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மயிலை சிவநேசச்செட்டியார் வளர்த்து வந்த பூம்பாவை என்னும் பெண், பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். சிவநேசச்செட்டியார் அவளின் சாம்பலினைப் பாதுகாப்பாய் வைத்திருந்து திருஞானசம்பந்தர் திருமயிலை வந்தபொழுது அவரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி ஒப்படைக்கிறார்.அதனை அறிந்த திருஞானசம்பந்தர் இறைவன் மேல் ‘மட்டிட்ட புன்னைங்கானல்’ எனத் தொடங்கும் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பிக்கின்றார். அப்பதிகத்தில் திருமயிலையில் நடைபெறும் ஆதிரைத் திருநாள், ஓணத்திருநாள், தைப்பூசம், கடலாடல் என்பனவற்றைச் சுட்டும் பொழுது, கபாலீச்சரம் (கபாலீஸ்வரர்) என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் ‘கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கீட்டுக் காட்சியைக் காணாது செல்வது முறையோ?‘ எனக் குறிப்பிடுகிறார்.”வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” – சம்பந்தர்.

இந்த விளக்கீட்டுத் திருநாளில் விளக்கில் சிவபெருமானே ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாய் தோற்றம் தருகிறான் எனத் திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவார்.”ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?” – மாணிக்கவாசகர்.

‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய்’ இறைவன் காட்சி தந்தமை தான் ‘லிங்கோத்பவர்’ எனும் சிற்பமாக காண்கிறோம்.
இடம் – தாராசுரம் கோவில்.

திருமூலரோ இறைவன் இத்தகைய சோதி வடிவம் பெற்றதன் காரணத்தை திருமந்திரத்தில் விதந்தோதுவார். சிவபெருமானின் திருவருளால் பிரமனும் திருமாலும் படைத்தல் காத்தல்களாகிய தொழிலைப் புரிந்து வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அதனை மறந்து தாங்கள்தான் பெரியவர்கள் என்று கருதினர். அதனால் அறத்தினை மறந்த பேதையராயினர். அச்செருக்கால் திருமாலும் நான்முகனும் தனித்தனியே தாந்தாம் முதற்பொருளென்று வழக்கிட்டனர். அவர்களின் அறியாமைக்கு இரங்கிய சிவபெருமான், அவர்கள் நடுவில் மண்ணுக்குக் கீழும் விண்ணுக்கு மேலும் இடையீடின்றி ஒன்றாய் முளைத்துத் தோன்றித் திகழும் பேரொளிப் பிழம்பாய் நின்றார். திருமாலும் பிரமனும் முறையே அடியும் முடியும் தேடித் தங்கள் முதன்மையை நிலைநாட்ட இயலாது தோற்றனர். எனவே ஒளியின் வடிவாய் நின்றது சிவபெருமானே என்பார் திருமூலர்.”பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலேபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்கஅரனடி தேடி அரற்றுகின் றாரே” – திருமூலர்.

நாயன்மார்களில் மிக மூத்தவராக வரலாற்று ரீதியாக அறியப்படும் காரைக்கால் அம்மையார் அவர்கள் தனது ‘அற்புதத் திருவந்தாதி‘யில், ‘மாலுக்கும் நான்முகற்கும் என்றும் அளப்பரியன் ஆனானை‘ என்று சுட்டுவார். முருகப்பெருமான் தீபத்தின் வடிவமாய் இருப்பதாய்,‘தீபமங்களஜோதி நமோநம’- என்ற அடிகள் மூலம் உணர்த்துவார் அருணகிரிநாதர்.

‘பெரியபுராணம்’ திருவிளக்கேற்றி இறைவனை வழிபட்ட நமிநந்தி அடிகளின் சிறப்பினை விரித்துரைக்கும். பலநாள் திருவாரூரில் புற்றிடங் கொண்ட நாதரை வணங்கிச் சென்ற நமிநந்தியடிகளுக்கு அன்று ஒருநாள் மனத்தில் மிக்க அன்பு தோன்றியது. அதன் வழியாகக் காதல் பெருகிற்று. அக்காதல் வெறும் வணக்கத்தோடு முடியாது தொண்டின்பால் பரவிச் சேர்ந்தது. அது பொழுது செல்லச் செல்லத் திருவிளக்கு எரிக்கும் கருத்தினை அவருக்கு விளைவித்தது. எனவே திருவிளக்கு ஏற்றும் செயல் மிக்க அன்புடையார் செய்யும் செயல் என்பதனை சேக்கிழார் வழி அறிக.நமிநந்தர் தம் ஊராகிய ஏமப்பேரூர் சென்று விளக்கெரிக்க நெய்பெற்று வருவதென்றால் காலம் தாழ்த்தும் என உணர்ந்து திருவாரூரிலே நெய் தேடினார். அவ் ஊரின்கண் இருந்த ஒரு வீட்டில் சென்று நெய் வேண்டினார். அது சமணரது வீடாய் இருந்தது. அவர்களோ கையில் நெருப்பை ஏந்திய பெருமானுக்கு விளக்குதேவையில்லை என ஏளனம் செய்ததுடன் விளக்குக்கு நெய் இங்கு இல்லை, நீர் விளக்கு எரிப்பீரானால் நீரை முகந்து எரிப்பீராக! என்று உரைத்தனர்.

கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகைகாணும்; நெய்யிங் கில்லை; விளக்கெரிப்பீ ராகி னீரை முகந்தெரித்தல் செய்யுமென்று திருத்தொண்டர்க்குரைத்தார் தெளியா தொருபொருளே பொய்யுமெய்யுமா மென்னும்பொருண் மேற்கொள்ளும் புரைநெறியார்”- பெரியபுராணம்.

சமணர்களின் இத்தகைய கூற்றினைக் கேட்ட நமிநந்தியடிகள் சிவபெருமானது திருவருளினையே சிந்தித்தபடி நல்ல நீருடைய அக்குளத்தின்நடுவில் புகுந்து அதன் நீரினை முகந்து எடுத்து கொண்டு மேல் ஏறி திருக்கோயிலினைச் சேர்ந்து விளக்கின் திரியின்மேல் அந்நீரினை வார்த்தார். நன்னீர் இறைவனருளால் தீயை வளரச் செய்ததுடன் விடியும் வரை நின்றெரிந்தது. இதனை,‘‘நிறையும் பரிசு திருவிளக்கு விடியு மளவு நின்றெரியக்குறையுந் தகளி களுக்கெல்லாங் கொள்ள வேண்டு நீர்வார்த்து,மறையின் பொருளை யர்ச்சிக்கு மனையி னியதி வழவாமல்உறையும் பதியி லவ்விரவே யணைவார் பணிவுற் றொருப்பட்டார்”எனக் குறிப்பார் சேக்கிழார்.

நமிநந்தியடிகள் புராணம்

திருவண்ணாமலை கோவிலில் கிடைத்த முதலாம் இராஜேந்திர சோழனின் 19வது ஆட்சி கல்வெட்டொன்று (S.I.I vol 8, no 66) அண்ணாமலையாருக்கு பலவகையான திருவமுது (கறியமுது, நெய்யமுது,தயிரமுது) படைக்க நிவந்தம் கொடுத்த தரவுகளுடன் ‘திருக்கார்த்திகை திருநாளில் திருவேட்டை எழுந்தருளும்போது‘ பெருந்திருவமுது படைக்கவும் தனியே நிவந்தங்கள் தருகிறார். அதோடு அக்கல்வெட்டின் இறுதியில் இரண்டு நொந்தா விளக்கு எரிக்க 192சாவாமூவா பேராடும், அதனுடன் சேர்த்து ஶ்ரீவிமானத்தை சூழ இராவை(Night) சந்தி விளக்கு 14க்கு 336 சாவாமூவா பேராடுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஶ்ரீவிமானத்தை சுற்றி ஏற்றப்படும் 14 விளக்குகள் விமானத்தின் உச்சியில் ஏற்றப்பட்டிருக்குமா? அல்லது இன்றைய கேரள கோவில்களில் ஏற்றப்படுவது போல பண்டைய தமிழ் மரபிலும் கருவறையை சுற்றிய பகுதிகளில்(அதற்கும் விமானம் என்றே பெயராம்) ஏற்றப்பட்டிருக்குமா? என்பது ஆய்வுக்குறியது. எனினும் இரண்டாவது கருத்து சற்று பொருத்தமானதாக தோன்றுகிறது. ஆனால் இவ்விளக்குகள் தினமும் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டொன்றும்(SII vol 8, no 82), மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்றும்(SII vol 8, no 147) திருவண்ணாமலை கோவிலில் ‘திருக்கார்த்திகை திருநாள் விழா‘ நடைபெற்ற குறிப்புகளை தருகிறது. ஆனால் மலையின் மீது பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றும் மரபு குறித்து பண்டைய தரவுகளில் இருந்து ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

கிபி 1753-ஐ சேர்ந்த செப்பேடு ஒன்று திருவாரூர் அருகே சித்தாய்மூர் கோவிலில் கிடைத்திருக்கிறது. அதில் இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடிய தகவல்கள் கிடைக்கின்றன. இதில் ஒரு சிறப்பான தகவல் என்னவென்றால் அந்த செப்பேடு அவ்வாண்டு டிசம்பர் 7ஆம் தேதி எழுதப்பெற்றுள்ளது. கிபி 1753ஆம் ஆண்டு ஆங்கில நாட்காட்டியை புரட்டியதில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அவ்வாண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி நடந்திருக்கிறது. இந்த செப்பேடு கூறும் ‘தீபாவளி‘ என்பது கார்த்திகை தீபமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என ஒருவாறு அறிய முடிகிறது. ‘தமிழர்கள் கொண்டாடிய தீபாவளி‘யாக கார்த்திகை திருநாளை சுட்டுவது ஏற்புடையது. எனவே விளக்கீடு செய்வது என்பது ‘மங்கலத்தின்‘ குறியீடாய் சங்ககாலம் தொடங்கி தமிழ் மரபில் இருந்தது என்பதும் அதனைத் திருவிழாவாகவே கொண்டாடும் சிறப்பும் இருந்திருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

சித்தாய்மூர் செப்பேடு

“அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்!”