சமணர் கழுவேற்றம் – ஓர் வரலாற்று ஆய்வு
மதுரையில் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்றதாகவும் அதன் விளைவாக பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் கட்டளைக்கு இணங்க எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்பது பெரிய புராணம் மூலம் நாம் அறியமுடியும் செய்தி. உண்மையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? என்பதற்கு இதுவரை எந்தவிதமான தொல்லியல் சான்றுகளும் கல்வெட்டு சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற இடமாக மதுரைக்கு தெற்கே சாமணத்தம் எனும் ஊரை குறித்து வருகிறார்கள். அதுவும் ஒரு கருதுகோளாக மட்டுமே.
திருஞானசம்பந்தர் அவரது தேவார பதிகங்களில் சமண-பௌத்த மதங்களை அதிதீவிரமாக சாடினார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என அனைத்து சைவ அடியார்களுமே சைவத்துக்கு எதிரான சமயங்களை சாடி வந்திருப்பது கவனிக்கத்தக்கது. சைவம் மட்டுமே இதை செய்யவில்லை. பௌத்த-சமண மதங்களும் கூட புற சமயங்களை சாடிய இலக்கியங்கள் தமிழிலேயே படைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக குண்டலகேசி, நீலகேசி, மணிமேகலை போன்ற நூல்களை சொல்லலாம். அவ்வகையில் சைவ அடியார்களும் புற சமயங்களை எதிர்த்து பாடியதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படி அதிதீவிரமாக சமண-பௌத்த மதங்களை சாடிய நாவுக்கரசரோ, சம்பந்தரோ கூட எந்த இடத்திலும் சமணர்களை கழுவேற்ற வேண்டும் என்றோ அல்லது கழுவேற்ற விரும்புவதாகவோ குறிப்பிட்டு பாடவில்லை.

ஆனால் முதன்முதலில் நம்பியாண்டார் நம்பி அவர்கள் எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியில் மூன்று நாயன்மார்களின் வரலாற்றை பாடும்போது கழுவேற்றம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டு எழுதுகிறார். அந்த மூவர் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன், மங்கையர்கரசியார் மற்றும் குலச்சிறையார் ஆவர்.
முதலில் நம்பியாண்டார் நம்பியின் காலத்தை வரையறை செய்ய முயற்சிப்போம். பொதுவாக நம்பியை முதலாம் இராஜராஜன் காலத்தியவராக கருதுவர். அதற்கு காரணம் சோழ அரசர்களிலேயே முதன்முதலில் தேவாரம் பாடுவதற்கு தஞ்சை கோவிலில் ஆட்களை நியமித்தவர் இராஜராஜன் என்பதால் தான். ஆனால் நம்பியை பற்றியோ அல்லது அவரை குறிப்பிட்டோ கூட முதலாம் இராஜராஜன் காலத்தில் கல்வெட்டு தகவலோ, செப்பேட்டுத் தகவலோ கிடைக்கப்பெறவில்லை.
இராஜராஜன் காலத்தில் தான் சிதம்பரம் கோவிலில் இருந்து தேவாரம் மீட்கப்பட்டதாக சொல்லப்படும் தகவலானது கிபி 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நூலில் இருந்து தான் கிடைக்கிறது. அந்த நூலின் பெயர் திருத்தொண்டர் புராணம். அதை எழுதியதாக கருதப்படுபவர் சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் அவர்கள் தான். அதில் திருமுறைகண்ட சோழனாக ‘அபயகுல சேகரன் இராசராசன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராசராசன் எனும் பெயரை கொண்டு இது முதலாம் இராஜராஜ சோழன் என கருதியவர்கள் பலர். ஆனால் ‘அபயகுல சேகரன்’எனும் பட்டப்பெயர் முதலாம் இராஜராஜனோடது தான் என்பதற்கு எந்தவித சான்றும் அவரது காலத்திய தரவுகளில் கிடைக்கவில்லை. அதற்கு முன், பின் வந்த இடைக்கால சோழரின் பட்டப்பெயர்களில் கூட அபயகுல சேகரன் என கல்வெட்டு/செப்பேட்டு தகவல்களில் குறிக்கப்பெறவில்லை. ஆனால் பிற்கால சோழ வரலாற்றில் சாளுக்கிய சோழனாக வரும் முதலாம் குலோத்துங்கனுக்கு ‘அபயன்’எனும் பெயர் கல்வெட்டுகளிலும் அவனது கால இலக்கிய படைப்புகளிலும் காணமுடிகிறது. மேலும் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் போன்ற பிற்கால சோழர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அவர்களது கால இலக்கியங்களிலும் கூட இந்த பட்டப்பெயர்கள் காணப்படுகின்றன.

ஆகவே திருத்தொண்டர் புராணம் குறிப்பிடும் ,’அபயகுல சேகரன் இராசராசன்’ என்பது இரண்டாம் குலோத்துங்கனாகவோ (கிபி 1130-1150)அல்லது இரண்டாம் இராஜராஜனாகவோ (கிபி 1150-1173) இருக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு. இவைபோக முதலாம் இராஜராஜனது (கிபி 985-1014) காலத்தில் தேவாரம் பாடினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவனது காலத்தில் திருமுறைகள் தொகுக்கப்படவில்லை. பிற்கால பல்லவர் காலத்திலும் தேவார பாடல்கள் வாய்வழி பாடல்களாக பாடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை முறையாக தொகுக்கப்பட்டது வெகு பிற்காலத்தில் தான்.
ஆகவே இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தான் திருமுறைகள் தொகுக்கப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணத்தை இரண்டாம் குலோத்துங்கனது காலத்தில் தான் எழுதுகிறார். பன்னிரு திருமுறைகள் இவனது காலத்தில் தான் தொகுக்கப்பட்டது. ஆகவே நம்பியாண்டார் நம்பி சிதம்பரம் கோவிலில் இருந்து மீட்டதாக சொல்லப்படும் கதையானது இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலோ அல்லது அதற்கு சில காலம் முன்போ (விக்ரம சோழன் காலத்தில்) நடந்திருக்கலாம். ஆகவே நம்பியாண்டார் நம்பியின் காலமென்பது பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இருந்திருக்க வேண்டும்.
அதாவது கிபி 8 ஆம் நூற்றாண்டில் சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையில் வரும் 63 நாயன்மார்களின் பெயர்களை கொண்டு அவற்றுக்கான ஒரு மேலோட்டமான தரவுகளை கிபி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியாக எழுதுகிறார். இதனை அடிப்படையாக கொண்டு அடுத்த சில வருடங்களில் சேக்கிழார் ‘பெரிய புராணம்’ எழுதுகிறார். பெரிய புராணம் சரியாக ஒரு வருடத்தில் எழுதப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது வரலாற்று தகவல்.
கழுவேற்றம் செய்யப்பட்ட தகவலுக்கு வருவோம். அதாவது தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் என யாருமே கழுவேற்றம் குறித்து குறிப்பிடவில்லை. இதனை முதன்முதலில் குறிப்பிடுபவர் நம்பியாண்டார் நம்பி. அவரது காலம் கிபி 12 ஆம் நூற்றாண்டு. அதன்பிறகு இந்த செய்தியை மிக விரிவுபடுத்தி ‘எண்ணாயிரம் சமணர்களை’ கழுவேற்றம் செய்ததாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். நிற்க..

இப்போது இதே 12ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் இருந்த சூழலை கல்வெட்டு மற்றும் இலக்கியங்களின் துணைக்கொண்டு பார்ப்போம். இன்றைய கர்நாடக மாநிலத்தின் ஹாவேரி மாவட்டத்தில் அப்ளூர் எனும் ஊரில் இருக்கும் கல்வெட்டானது சைவ துறவி ஒருவருக்கும் அவ்வூரில் இருந்த சமணர்களுக்குமான வாதப்போரை பற்றியும் அதன் முடிவையும் மிக விரிவாக தருகிறது. இந்த கல்வெட்டில் நேரடியாக ஆண்டு எதுவும் காலம் கணிக்கும் வகையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது குறிப்பிடும் பிற செய்திகளை கொண்டு ஆய்வாளர்கள் இதனை கிபி 1200 என முடிவுசெய்திருக்கிறார்கள். இக்கல்வெட்டு 104 வரிகளை கொண்டது. அதில் வரி 27 முதல் வரி 50 வரையிலும் சைவ-சமண வாதப்போரை பற்றியும் அதன் முடிவையும் கூறுகிறது. இந்த கல்வெட்டு தகவலை காண வேண்டுமெனில் எபிகிராபியா இன்டிகா தொகுதி 5-ல் பக்கம் 237-ல் காணவும். இனி கல்வெட்டு செய்தியினை மேலோட்டமாக காண்போம்.
குந்தல நாட்டை சேர்ந்த சைவ துறவியான ஏகாந்த இராமய்யா என்பவர் அபளூருக்கு வருகை தருகிறார். அப்போது அந்த ஊரின் தலைவரான சங்ககவுந்தா என்பவரின் தலைமையில் சமணர்கள் அதிகம்பேர் இருக்கின்றனர். சமணர்கள் ஒன்று சேர்ந்து ஜின மதமே உண்மையானது என கூறுகின்றனர். ஏகாந்த இராமய்யாவுக்கும் சமணர்களுக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இறுதியில் சிவனுக்கு இராமய்யாவின் தலையை காணிக்கையாக கொடுத்து சைவ பற்றை நிரூபிக்க வேண்டி சமணர்கள் சவால் விடுகிறார்கள். தான் சிவனுக்கு தலையை தந்தால் சிவன் எனக்கு மீண்டும் அதனை கொடுத்து காப்பார் என கூறுகிறார் இராமய்யா. அவர்கள் கேலி செய்கிறார்கள். உடனே இராமய்யா கூறுகிறார்,’ நீங்கள் அனைவரும் சமண கடவுளின் உருவத்தை சிதைத்து கோவிலை அழித்து சைவத்துக்கு மாறுவதாக ஓலையில் எழுதி கொடுக்க துணிந்தால், நான் எனது தலையை சிவனுக்கு காணிக்கையாக்குகிறேன்’ என்கிறார். சமணர்களும் துணிந்து ஓலையில் எழுதி தருகிறார்கள்.

வாலை எடுத்து தனது கழுத்தில் குத்துகிறார் இராமய்யா. இரத்தம் வழிந்தோடுகிறது. “எனது தலையை வெட்டி கொடுத்ததும் அடுத்த நொடியே என்மீது பற்றுக்கொண்ட சிவன் மீண்டும் அதை கொடுத்துவிட்டார்” என கூறுகிறார் இராமய்யா. சித்தாந்த ரீதியில் வெற்றிபெற்றவராக ஏற்கிறார்கள் சமணர்கள். ஆனால் தங்களது கோவிலையும் சிலையும் அழிக்க முடியாது என்கிறார்கள். இராமய்யா விடுவதாக இல்லை. சமண சிலையின் தலையை சீவிவிட்டு அங்கு சிவனை நிறுவுகிறார். ஜைன கோவிலை தரைமட்டமாக்குகிறார். சமணர்களை விரட்டுகிறார். அவர்கள் இரண்டாம் பிஜ்ஜலா மன்னனை நாடுகிறார்கள். நடந்ததை அறிந்த மன்னர் இராமய்யாவை அழைத்து விசாரிக்கிறார். மீண்டும் இந்த சாகசத்தை செய்துகாட்டுமாறு இராமய்யாவை பணிக்கிறார். மீண்டும் செய்துகாட்ட தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் மீண்டும் எனக்கு சமணர்கள் தங்களது 800 ஜைன கோவிலை இடிப்பதற்கு வாக்குறுதி அளிக்க வேண்டும் என மன்னனிடம் ஒப்பந்தம் செய்கிறார். மன்னனோ சமணர்களிடம் ஒப்பந்தத்திற்கு சம்மதமா? என கேட்கிறார். முன்னரே ஒருமுறை தோற்ற சமணர்களோ மன்னனிடம்,’ ஏற்கனவே பல ஜைன கோவில்கள் சிதைந்து இருக்கிறது. மேலும் அவற்றை முழுமையாக சிதைந்துபோக நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆகையால் இந்த போட்டிக்கு நாங்கள் வரவில்லை’ என பின்வாங்குகிறார்கள். இதனை கேட்ட மன்னர் சத்தமாக சிரித்துவிட்டு, இராமய்யாவை அழைத்து வெற்றிபெற்றதாக அறிவித்து அவருக்கு சான்றிதழ் (ஜெயபத்திரம்) ஒன்றையும் வழங்கியதாகவும் பிறகு அபளூரில் சிவன் கோவில் ஒன்றை எழுப்பியதாகவும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
இந்த கல்வெட்டில் இரண்டாம் பிஜ்ஜலா எனும் மன்னரின் பெயர் காணப்படுகிறது. அவரது கல்வெட்டுகளில் மெய்கீர்த்தி சேர்ப்பதற்கு முந்தைய நிலையில் மகாமண்டலேசுவரனாக இருந்த சமயத்தில் இச்சம்பவம் நிகழ்வதாக தெரிகிறது. காலச்சூரி அரசனான இரண்டாம் பிஜ்ஜலா மன்னனின் காலம் கிபி 1140- 1167 வரை ஆகும். அவன் மெய்கீர்த்தி சேர்ப்பதற்கு முந்தைய சம்பவம் என கொண்டால் கிபி 1140-50க்கு இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என கருதலாம். சரியாக இதே சமயத்தில் தான் பெரிய புராணம் எழுதப்பட்டிருக்கிறது. அதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது இரண்டாம் குலோத்துங்க சோழன் தான்.
கிபி 12 ஆம் நூற்றாண்டில் மிகதீவிரமாக சைவ சமயம் எழுச்சி பெற்று வந்தது. கர்நாடகத்தில் அரசு ஆதரவோடு கோலோச்சி வந்த ஜைன மதத்தை அதன் கோட்டையிலேயே சென்று வீழ்த்திய தரவுகள் பல கிபி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கர்நாடகத்தில் கிடைக்கிறது. கிபி 1181ஐ சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கர்நாடக மாநிலம் அன்னிகிரியில் கிடைக்கிறது. அதில் நான்காம் சோமேஸ்வரனின் சைவ ஆச்சாரியான வீர கொக்கிதேவா என்பவன் தன்னை ,’ஜைனாகம தூமகேது’எனவும் ‘ஜைன பாம்பை விழுங்க வந்த கழுகு’ எனவும் குறிப்பிட்டுக்கொள்கிறான். கிபி 13 ஆம் நூற்றாண்டில் சமணத்தை முற்றிலுமாக ஒழித்து சைவத்தை நிறுவிய பெருமை கன்னட வீரசைவ தலைவரான பசவண்ணாவின் சீடர்களையே சேரும். இந்த பசவண்ணாவும் சரியாக இதே காலகட்டத்தில் இரண்டாம் பிஜ்ஜலா மன்னனின் காலத்தில் அவனது அவையில் இருந்தவரே ஆவார். இன்றுவரை பிஜ்ஜலாவின் இறப்பிற்கு காரணமாக பசவண்ணாவையும் அவரது சீடர்களையுமே கூறிவருகிறார்கள் கன்னட ஆய்வாளர்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, வீரசைவ பசவண்ணா சமணர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்ததை கண்டித்து, சமணர்கள் எழுதிய ‘பிஜ்ஜலராயசரித்ரா’ எனும் நூலில் பசவண்ணா தனது சகோதரியை பிஜ்ஜல மன்னனுக்கு ஆசைநாயகியாக கொடுத்து தான் அரச பதவியை பெற்றார் எனவும் இறுதியில் மன்னரையே விஷம் வைத்து கொன்றார் எனவும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அவர்கள் புராணமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் ‘பசவபுராணம்’ இந்த கதைகளை கூறவில்லை. அது பசவண்ணாவை போற்றி புகழ்ந்து நல்லவிதமாக கூறுகிறது. இவை இரண்டில் எது உண்மை என்பதை அறிவது மிகவும் கடினமான ஒன்று. இதேபோல் சாளுக்கிய சத்யாசிரியனை பாட்டுடை தலைவனாக கொண்டும் சோழ மன்னன் முதலாம் இராஜராஜனை எதிரியாக சித்தரித்தும் கன்னட மொழியின் புகழ்பெற்ற கவிஞர் ரன்னா எழுதிய ‘கதாயுதா’எனும் நூல் தெரிவிக்கிறது. ஏன் இத்தனை தகவல்களை இங்கு தொடர்புபடுத்தி கூறுகிறேன் எனில் ஒரு செயலுக்கு அதனை எதிர்த்து செய்யும் எதிர்செயலும் இருக்கும். இருக்க வேண்டும்.
அவ்வகையில் இராஜராஜன் சாளுக்கியனை வென்ற தகவல்கள் நம்மிடம் இருக்கிறது. அதனை எதிர்த்து இராஜராஜனை எதிரியாக பாவித்து எழுதும் எதிர்செயல் அவர்களிடம் உண்டு. அதேபோல் தான் பசவண்ணாவை பற்றி குறிப்பிடும் ஜைன புராணமும். ஆனால் மதுரையில் சமணர்களை கழுவேற்றம் செய்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த புராணமும் தமிழக ஜைன வரலாற்றில் படைக்கப்படவில்லை. இத்தனைக்கும் சம்பந்தர் காலமாக கருதப்படும் கிபி 630-650 க்குள் தான் இந்த கழுவேற்றம் நடந்திருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் கிபி 700 முதல் அதே மதுரையில் சமண சிற்பங்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கழுவேற்றத்தில் 8000 சமணர்கள் கொல்லப்பட்ட 50 ஆண்டுகளுக்குள் இந்த திடீர் குடியேற்றம் நிகழ்ந்தது எப்படி?. இதுபோக கிபி 700க்கு முன் ஜைனம் மதுரையில் இருந்தது என்பதற்கான வரலாறு/தொல்லியல் தரவுகள் எதுவும் மதுரையில் கிடைக்கப்பெறவில்லை. ( படுக்கைகளும் தமிழியும் விவாதத்திற்குரியது. அதனை ஏற்கனவே வேறொரு கட்டுரையில் விவாதித்துவிட்டோம்.)

ஆகவே இந்த 8000 சமணர்கள் எனும் எண்ணிக்கையை , கர்நாடகத்தில் நிகழ்ந்த “800 ஜைன கோவில்கள் இடிக்கபட வேண்டும்” எனும் கோரிக்கையின் வாயிலாக சேக்கிழார் எடுத்திருக்கலாம். அதாவது இதேபோன்ற ஒரு சைவ-சமண வாதப்போரானது பனை ஓலையை கொண்டு ஏற்கனவே தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டதாக காட்டவும் இதன்வாயிலாக சைவத்தை நிலைபெற செய்யவும் சேக்கிழார் நினைத்திருக்கலாம். அதாவது மக்களுக்கு தெரிந்த/ மக்களால் அதிகம் விவாதிக்கப்படும் புராணக்கதைகள், செவிவழி கதைகளை கொண்டு இலக்கியங்கள் புனையப்படுவது தான் காலங்காலமான வரலாறு. அது தான் எதார்த்தம். அவ்வகையில் இது நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டு, சேக்கிழாரால் புனையபட்டு, பிற்காலத்தில் திருவிளையாடல் புராணம் போன்றவற்றில் உண்மையென நம்பப்பட்டது. அதனை தொடர்ந்து கழுவேற்ற விழாக்கள் மதுரையில் நடைபெற்றன. இவையனைத்தும் பெரிய புராணத்திற்கு பிறகு தான் என்பது கவனிக்கத்தக்கது.
சமண கழுவேற்றம் என ஒன்று நிகழ்ந்திருந்தால் அது சில சமணருக்கும் சம்பந்தருக்குமான வாதமாக இருந்து ,அதில் தோற்ற அந்த குறிப்பிட்ட சமணர்களை கழுவேற்றம் செய்திருக்கலாம். ஆனால் அதற்குமே கூட எந்தவித சான்றும் இல்லை. ஆனால் 8000 சமணர்கள் என்பது முழுவதும் புனைவு தான். அப்படி நிகழ்ந்திருந்தால் கிபி 700ல் மிகப்பெரிய முறையில் சமண குடியேற்றம் மதுரையில் நிகழ்ந்திருக்காது. அப்படியே நிகழ்ந்திருந்தாலும் இந்த கொடுஞ்செயலுக்கு நிச்சயமாக எதிர்ப்பு எழுந்திருக்கும். கன்னடத்தில் எதிர்த்து எழுதப்பட்டதுபோலவே ஜைன புராணங்களின் வாயிலாக இந்த சம்பவம் உறுதிபடுத்தப்பட்டிருக்கும். அப்படி எதுவும் கிடைக்காததால் இதனை உளவியல் பூர்வமாக சேக்கிழார் அதே காலத்தில் நடந்த வேறோரு விவாதத்தை கொண்டே எழுதியிருக்கிறார் என கருத இடமளிக்கிறது.
நமது சமணர் கழுவேற்றம் கட்டுரையை படித்துவிட்டு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார்.
“பெரிய புராணம் – ஓர் ஆய்வு எனும் நூலை படித்திருக்கிறீர்களா?” என்றார்.
நான், ‘இல்லை. ஆனால் அந்நூலை பற்றி அறிந்திருக்கிறேன்’என்றேன்.
அந்நூலில் சமணர் கழுவேற்றம் பற்றி விவாதித்திருக்கும் பக்கங்களை மட்டும் படமெடுத்து அனுப்பியிருந்தார். அதிலுள்ள தகவல்களை பார்ப்பதற்கு முன் அந்நூலை பற்றி பார்ப்போம்.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (அ.ச.ஞா) 1987இல் பெரிய புராணம் – ஓர் ஆய்வு எனும் நூலை எழுத, அதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. அ.ச.ஞா அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கான தமிழக அரசின் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர். அவர் இந்நூலில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் பின்வருமாறு,
வடக்கு கர்நாடகத்தில் பனவாசி எனும் ஊரிலுள்ள கோவிலில் கிபி 11ஆம் நூற்றாண்டு வாக்கில் 63 நாயன்மார்களில் சிலரின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அவ்வூரில் காணப்படும் சில கல்வெட்டுகளில் சமணருக்கும் – வீர சைவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையினை எடுத்துக்கூறுகின்றன. அக்கோவிலிலேயே சமணர்களை துன்புறுத்திய சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆனால் இவ்வாறு வீர சைவர்கள் மட்டுமே மாற்று மதத்தினரை துன்புறுத்தியதாக எண்ண வேண்டாம். அதே இடத்தில் சமணர்கள் வீர சைவர்களை கொல்வது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. கர்நாடகத்தை பொறுத்தமட்டில் சமணர் – வீரசைவர் சண்டைகள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவருக்கு சாதக-பாதகமாக மாறிமாறி அமைந்திருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பல்லவ, பாண்டிய அரசுகளின் தொடக்க காலத்தில் சமண-பௌத்த மதங்கள் நன்கு வேரூன்றியதை அறிகிறோம். மகேந்திர பல்லவனோ, நின்றசீர் நெடுமாறனோ மதம் மாறிய பிறகு சமணர்களை துன்புறுத்தியதாக இதுவரை தமிழகத்தில் எந்தவித கல்வெட்டுகளும், செப்பேடுகளும், புடைப்பு சிற்பங்களிளும் காணப்படவில்லை. ஆனால் கர்நாடகத்தில் சமண- வீரசைவ சண்டைகள் கல்வெட்டு, இலக்கியம், சிற்பம் என தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறது.
சேக்கிழாரை பொறுத்தமட்டில் ஆதாரங்கள் இல்லாமல் எதையும் பாடமாட்டார் என பெரிய புராணத்தை நன்கு கற்றவர்களால் எளிதில் அறிய முடியும். இருந்தாலும் திருஞானசம்பந்தரின் புராணத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக பாடியுள்ளார். அதற்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் கல்வெட்டுகளிலோ அல்லது தேவாரத்திலோ கூட கிடைக்கவில்லை. தேவாரத்தில் கூட பாடப்படாத ஒரு நிகழ்ச்சியை வலிந்து சேக்கிழார் ஏன் பாடவேண்டும்?
தமிழகத்தை பொறுத்தமட்டில் சமயப்போர்கள் நிகழ்ந்ததுண்டு. மன்னனது செல்வாக்கை பெற்றிருந்தமையால் சமணர்கள் நாவுக்கரசருக்கு இழைத்த துன்பங்கள் பல. சமணர்கள் நாவரசருக்குக் கொடுமை இழைத்தனர் என்பதற்கு அவருடைய பாடல்களிலேயே அகச் சான்றுகள் உண்டு.
‘வஞ்சனைப் பாற் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே.’
‘கல்லினோடு எனைப்பூட்டி அமண்கையர் ஒல்லைநீர்புக தூக்க என்வாக்கினால் நெல்லுநீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனே’
என வரும் அகச் சான்றுகளை வைத்துக்கொண்டே காப்பியப் புலவர் நாவரசர் புராணத்தில் அவர்கள் செய்த கொடுமைகளை விரிவாகப் பாடியுள்ளார். ஆனால் சமணர் கழுவேறிய செய்தி பற்றி நம்பி, சேக்கிழார் பாடல்கள் தவிர வேறு எங்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படியானால் சேக்கிழாருக்கு இப்படிப் பாடுவதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா என்ற வினாத் தோன்றுவது இயல்பே. தமிழகத்தைப் பொறுத்தவரை இச்சமய போர்களில் இத்துணைப் பெரிய கொடிய நிகழ்ச்சி நிகழ்ந்தாக எவ்வித பிற ஆதாரமும் இல்லை என்றாலும் கருநாடகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன.
சமணர்கள் கை ஓங்கியபொழுது வீரசைவர்களை கொல்வதும், வீரசைவர்கள் கை ஓங்கியபொழுது சமணர்களை கொல்வதும் சகஜமாக அங்கு நிகழ்ந்துவந்த ஒன்று. அதனை சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராணத்தில் இணைத்து பாடிவிட்டார் என கொள்வதில் தவறேதுமில்லை.
இவை தான் அந்நூலில் உள்ள தகவல். அவர் எழுதிய நூலை இதுவரை படித்திருக்கவில்லை என்றாலும் கர்நாடக ஜைன வரலாற்றை தேடிபடித்த பொழுது கிடைத்த கல்வெட்டு தகவலின் மூலத்தை எடுத்து பார்த்து அதனுடன் தொடர்புபடுத்தி சமண கழுவேற்றம் பற்றி நாம் எழுதிய கட்டுரையிலிருக்கும் தகவலும் இதுவே.
திருஞானசம்பந்தரின் இறப்பு குறித்து ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கக்கூடும். புராண கதைப்படி திருஞானசம்பந்தர் திருமணத்தன்று அவரையும், அவரது பெற்றோர்கள், மணப்பெண், அவரது பெற்றோர்கள் உட்பட்ட திருமணத்திற்கு வந்திருந்த அணைவரையும் அக்னியால் இறைவன் ஆட்கொண்டு முக்தி அளித்ததாக கூறுகிறது. இதில் பக்தியை தவிர்த்து ஏதேனும் பொதுஅறிவுக்கேற்ற வகையில் நம்ப முடிகிறதா? சற்று சிந்தித்தால், இது ஒரு தீ விபத்து என்பது தெளிவாக தெரிகிறது. இந்த தீ விபத்தை மறைத்து பக்தியை வளர்க்க இறைவன் ஆட்கொண்டதாக எழுதப்பட்டுட்ளது. நீ விபத்து ஏற்பட காரணம் என்ன? எதற்காக நீ விபத்தை மறைக்க வேண்டும். ஏன் சமணர்கள் கழுவேற்றத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த தீ விபத்தை உண்டாக்கி இருக்கலாமே????
இராமய்யா- தலையை வெட்டி மீண்டும் உயிர்பிழைத்த – சித்தாந்த ரீதியில் வெற்றி பெற்றது புரியவில்லை சகோ????
நல்லதொரு ஆய்வுக்கட்டுரை
அருமையானதொரு கட்டுரை
ஒரு பனிரெண்டு வயது பாலகனை எட்டாயிரம் பேர் வாதத்திற்கு அழைத்த்னர். வாதிட்டனர் என்றால் அதிலும் அவர்கள் தோற்றனர் என்றால்….
அதில் இருக்கும் கொடூரத்தை ஏன் யாரும் பார்ப்பதில்லை?