முதலில் சேக்கிழார் மரபினர் குறித்தும் பெரியபுராணக் காலத்தில் அரசுபுரிந்த சோழ மன்னனை குறித்தும் பார்ப்போம். சேக்கிழார் என்பது ஒரு குடிப்பெயர். அக்குடியில் இருந்து பலர் சோழ அரசாட்சியில் பங்குகொண்டிருந்தனர் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன. கிபி954-இல் கண்டராதித்த சோழனின் உடையார்குடி கல்வெட்டில் ‘சேக்கிழான்’ எனும் பெயர் முதன்முதலாக குறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. பின் இதே நூற்றாண்டில் திருச்சோற்றுத்துறையில் ஒரு கல்வெட்டும் இதற்கடுத்த நூற்றாண்டில் திருக்கழுக்குன்றத்திலும் ‘சேக்கிழான்’ எனும் பெயர் தாங்கிய கல்வெட்டு கிடைக்கின்றன. இப்படியாக கிபி 1300வரை பல கல்வெட்டுகளில் இப்பெயர் பயின்று வந்திருக்கிறது.

சேக்கிழார்

அடுத்ததாக, பெரியபுராணத்தில் இரண்டு இடங்களில் சேக்கிழார் தனது சமகாலத்திய சோழ அரசனின் பெயரை பதிவுசெய்கிறார். அவை,

திருப் பேரம் பலம் செய்ய தூய பொன் அணி சோழன் நீடுழி பார் ஆய சீர் அநபாயன் அரசவை”- பெரியபுராணம் பாயிரம்.

சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திருவெல்லைபொன்னின் மயமாக் கியவளவர்   போரே றென்றும் புவிகாக்கும்மன்னர் பெருமான் அநபாயன்”- சண்டேசுர நாயனார் புராணம்.

இவ்வரிகளில் இருந்து நமக்கு மூன்று குறிப்புகள் கிடைக்கின்றன. ஒன்று ‘தில்லை கோவிலில் பொன்வேய்ந்த சோழன்’, இரண்டாவது ‘அநபாயன்’ என்ற பட்டபெயர் கொண்டவன். மற்றோன்று ‘குலோத்துங்க சோழன்’ எனும் நேரடி அரசனின் பெயர். அதிலும் ‘புவிக்காக்கும்‘ எனும் வரி நிகழ்கால(Present tense) குறிப்பை தருகிறது. ஆனால் எந்த குலோத்துங்கன்? என்பது முக்கியமான கேள்வியாகிறது. ஏனெனில், மூன்று குலோத்துங்க சோழர்கள் பிற்கால சோழ வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். அவர்களில் யாரது காலத்தில் பெரியபுராணம் இயற்றப்பட்டது? இனி காண்போம்,

இரண்டாம் குலோத்துங்க சோழனின் – திருப்புறம்பியத்தில் 7வது ஆட்சியாண்டு(1140 AD) கல்வெட்டும், திருப்பாலையில் 11வது ஆட்சியாண்டு(1144 AD) கல்வெட்டும், “பேரம்பலம் பொன்வேய்ந்த கோவிராஜகேசரி குலோத்துங்கசோழ தேவருக்கு” என குறிப்பிடுகிறது. திருவாரூர் கோவிலில் இவனது 7ஆம் ஆட்சியாண்டு(1140 AD) கல்வெட்டு (SII Vol 7 – no.485) முக்கியமானது. அக்கல்வெட்டு நம்பியாரூரருக்கும் பரவை  நாச்சியாருக்கும் பூஜை வழிபாடு செய்யவும் மூவர் முதலிகள் திருமேனி எடுத்து 62 நாள் விழா எடுக்கவும் “அநபாயசோழ நல்லூர்” எனும் ஊரை தானமாக வழங்கியதோடு, “அநபாயனாகிய நான் நடராச பெருமானின் பாத தாமரையில் ஒட்டி இருக்கும் தேனீ” என்றும் இதே கல்வெட்டில் கூறுகிறான். ஆக இரண்டாம் குலோத்துங்க சோழனே ‘அநபாயன்’ என்பது வெள்ளிடைமலை.

பெரியபுராணம் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தான் எழுதப்பட்டது என்பதற்கு போதுமான சான்றுகளை பார்த்தோம். இனி பெரியபுராணம் இரண்டாம் குலோத்துங்கனின் எந்த ஆட்சியாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதையும் சற்று நெருக்கி பார்ப்போம். இதனை ஆராய கிபி 13ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் உமாபதி சிவாச்சாரியார் எழுதியதாக கருதப்படும் ‘சேக்கிழார் புராணம்’ எனும் நூலினை துணைக்கொள்வோம்.

“ஆயுமறை மொழிநம்பி யாண்டார்நம்பி அருள்செய்த கலித்துறை அந்தாதி.. தூயகதை அடைவுபடச்சொல்வீர் என்று சோழன் உரை செய்ய கேட்டு..”–  சேக்கிழார் புராணம் – 23ஆம் பாடல்.

நம்பியாண்டார்நம்பி அருளிய கலித்தொகை அந்தாதியான திருதொண்டர்தொகையை விரிவாக கூறுமாறு சோழன் சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அவரும் அதனை விரிவாக எழுதி முடித்த பின்னர் அதனை அரங்கேற்றம் செய்யவேண்டுமல்லவா? அதனை எந்த நாளில் செய்தார் என்பதையும் ‘சேக்கிழார் புராண ஆசிரியர்’ குறிப்பிடுகிறார். அவை,

நடம்புரியும் தன்மையரானுக்கிசைந்த நாளும்..ஆளுடையபிள்ளை அவதரித்தநாளும்.. அவரழுது திருஞான அமுது செய்தநாளும்.. சித்திரை ஆதிரை தொடங்கி எதிராமாண்டு சித்திரை ஆதிரையில் கதை முடிப்ப..”- சேக்கிழார் புராணம் – 79.

நடனம் புரியும் ஆடல்வல்லானுக்குகந்த நாளும் திருஞான சம்பந்தர் அவதரித்த நாளும் அவர் அழுது ஞானப்பால் பருகிய நாளுமான சித்திரை திருவாதிரை தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று அதனை முடித்தார் என கூறுகிறார். ஆகவே சேக்கிழார் எழுதியதை விரிவுரை செய்து அரங்கேற்றம் செய்யவே ஓர் ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது எனில் அதனை எழுதிமுடிக்க அவருக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும்? இப்படி சேக்கிழார் அரங்கேற்றம் செய்தபின்னர் அரசன் அவருக்கு என்னவெல்லாம் அளித்து சிறப்பித்தான் என்பதையும் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகிறது. அவை,

உத்தமசோழ பல்லவன் என்று உயர்பட்டம் கொடுத்து.. திருநாகேச்சுரத்தில் அன்பு நிறைதலில்.. தம் பதி குன்றத்தூரில் மடவளாகம் தானாக்கி.. திருநாகேச்சுரமெனவே திருப்பேர் சாற்றி”- சேக்கிழார் புராணம் 17-18

உத்தம சோழன் என்ற பட்டத்தினைக்கொடுத்து பல பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பித்தான் சோழ மன்னன். அப்பொருளைக்கொண்டு சேக்கிழார் தம் ஊரான குன்றத்தூரிலே திருநாகேஸ்வரம் எனும் திருக்கோவிலை எடுப்பித்தார். அதன் காரணம் அவர் சோழ நாட்டு திருநாகேஸ்வரம் மீது பெரும் பற்றுக்கொண்டிருந்ததே!

குன்றத்தூர் திருநாகேஸ்வரம்

இப்பொழுது பெரியபுராணம் முற்றுப்பெற்றது எப்போது என காண்பதற்கு முன்பு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோவில் கல்வெட்டுகளை காண்போம். அங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானவை இரண்டாம் குலோத்துங்கன்(1133-1150AD) காலத்திய கல்வெட்டுகள். அதில் இவனது 14வது(1147AD) ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் அம்மன் சன்னதி(கம்பவன நாச்சியார்) எடுத்தமையை குறிக்கிறது. எனில் அதற்கு முன்பே கோவில் கட்டப்பட்டுவிட்டது என புரிந்துகொள்ளவேண்டும். இவனது 16வது ஆட்சியாண்டு கல்வெட்டும் இங்கு கிடைக்கிறது. மூன்றாம் குலோத்துங்கசோழனின் இரண்டாம் ஆட்சியாண்டு(1180AD) கல்வெட்டும் இங்கு கிடைக்கிறது. சிலர் பெரியபுராணத்தில் குறிப்பிடப்படுபவன் மூன்றாம் குலோத்துங்கன் என்பர். அப்படியானால் அவனது இரண்டாம் ஆட்சியாண்டிற்குள்ளாகவே பெரியபுராணம் எழுதப்பட்டு, அதனை விரிவுரை செய்து பொன்னும் பொருளும் பெற்று கோவில் கட்டியிருக்க வாய்ப்பில்லை. அதோடு அக்கோவிலில் அவனுக்கு முந்தியவனான இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டும் கிடைப்பது கவனிக்கத்தக்கது. அதோடு விஜயநகர/நாயக்கர் காலத்து கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன.

இனி இரண்டாம் குலோத்துங்கனின் வேறுசில கல்வெட்டுகளை காண்போம். அவனின் 12வது(1145AD) ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று செங்கல்பட்டு தாலுகா களத்தூர் அருகே கிடைக்கிறது. அதில் களத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை, “குலோத்துங்கசோழன் திருத்தொண்ட தொகை நல்லூர்” என்றும், இவ்வுத்தரவை பிறப்பித்தவர் “தொண்டைமான்” என்றும், நிறைவேற்றியவர், ”அநபாய மூவேந்த வேளாண்”என்றும் குறிப்பிடுகிறது அக்கல்வெட்டு. எனில் கிபி 1145க்கு முன்பே திருத்தொண்டர் புராணம் முற்றுப்பெற்றிருக்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படும் தொண்டைமான் என்பவர் சேக்கிழாரின் தம்பியார் பாலறாவாயர் என்பது சில அறிஞர்களின் கருத்து. அது ஏற்புடையதாகவும் உள்ளது. ஏனெனில் சேக்கிழார் பெரியபுராணத்தினை முடித்த பின்னர் அவரது தம்பியாரான பாலறாவாயருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது என்பது சேக்கிழார் புராணத்திலே குறிப்பிடப்படுகிறது. அவை பின்வருமாறு,

பாலறாவாயரெங்குள ரெனப்பணிந்திரு..என்று சொல்ல அவர்தமை அழைத்த அரசன் இனி இவரமைச்சர் இவர் பட்டமும் மன்ற மாலைபுனை தொண்டைமானென..” – சேக்கிழார் புராணம் 97-98.

இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால் திருவாரூர் கல்வெட்டில் நம்பி ஆரூரர் மற்றும் தேவார மூவர் சிலைகளை இரண்டாம் குலோத்துங்கன் எடுத்த காலத்திலேயே(1140 AD) பெரியபுராணம் முற்று பெற்றிருக்க வேண்டும். ஏனெனில்? பெரியபுராணத்தின் தொடக்கத்திலேயே திருவாரூர் நகர் சிறப்பு மற்றும் நம்பியாரூரர் சிறப்பை விளக்கி தான் தொடங்குகிறார் சேக்கிழார். அடுத்த சான்றாக,பெரியபுராண விரிவுரை முடிவடைந்த பின் ”பெரும்பற்றப்புலியூர் பூலோக கைலாசமென்று பொலிந்து தோன்ற”-(82), தில்லையில் பெருவிழா எடுத்தான் அரசன் என்பது ‘சேக்கிழார் புராணத்தில்’ உமாபதி சிவம் கூறும் விடயம். இதனை இரண்டாம் குலோத்துங்கனின் 8ஆம் ஆட்சியாண்டு திருமாணிகுழி கல்வெட்டு (1141AD) உறுதி செய்கிறது. அதில் குறிப்பிடப்படும் வரி இதுதான், “கோராஜகேசரிவர்மரான திரிபுவனச்சக்கரவர்திகள் தில்லை திருநகர் சிறப்புடையதாக திருமுடிசூடிய குலோத்துங்கசோழ தேவர்”. (SII Vol 7 – no 780)

எனவே திருமாணிகுழி கல்வெட்டிற்கு முன்பாகவே பெரியபுராணம் விரிவுரையுடன் முற்று பெற்றது என கொள்வது ஏற்புடைய கருத்தே ஆகும். குடந்தை சேதுராமன் அவர்கள் தில்லை கோவிலில் சேக்கிழார் பெரியபுராண விரிவுரையை கிபி1139, சித்திரை 13ஆம் தேதி, வியாழக்கிழமையில் (அன்று மதியம் 12வரை திருவாதிரை) தொடங்கி, கிபி1140, சித்திரை 30ஆம் தேதி, திங்களன்று (அன்று இரவு 12வரை திருவாதிரை) முடித்தார் என்பார். இது அவரது ஆய்வு முடிவு என்றாலும் கிபி 1137 க்கும் கிபி1140 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே பெரியபுராணம் முடிந்திருக்க வேண்டும் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி கூறலாம் என்பதே நம் கருத்து. ஏனெனில் அதன்பின் அவருக்கு மன்னன் பொன்னும் பொருளும் அளித்தான். அதைக்கொண்டு குன்றத்தூரில் கோவில் எடுத்தார். அந்த கோவிலில் கிபி 1147ல் இதே அரசன் அம்மன் சன்னதி எடுப்பித்தான். எனவே அக்கோவில் இடைப்பட்ட 7,8 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம்.

சேக்கிழாருக்கு நேரடியான கல்வெட்டு சான்று ஒன்றும் கிடைத்திருக்கிறது. இதனை இராசமாணிக்கனார், குடந்தை சேதுராமன் போன்ற ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவே செய்திருக்கின்றனர். கிபி1163, தை மாதம், 22ஆம் தேதி, புதன்கிழமையில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டு (ARE 1920, no95) திருமழப்பாடி கோவிலில் உள்ளது. அதில், “சயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்கச் சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன்” திருமழபாடி மகாதேவர்க்கு விளக்கு வைக்க 90 ஆடுகள் தந்தார் எனும் தகவல் பதிவாகியுள்ளது. “உத்தமசோழ பல்லவன் என்று உயர்பட்டம் கொடுத்து..”-(17)என சேக்கிழார் புராணம் கூறுவதை இதனுடன் பொருத்தி பார்த்தபோதும் மாதேவடிகள் எனும் சைவத்திற்கே சிறப்புடைய பட்டம் தரித்தும் இக்கல்வெட்டு அமைவதால் இது சேக்கிழாருக்கான நேரடி தொல்லியல் சான்றாவணமாக அமைகிறது.

சேக்கிழாரின் பெயராக ‘ராமதேவன்’ என வருவது சைவத்தில் இயல்பானது தான். 63-வரிலே ஒருவரான நரசிங்கமுனையரையர், ஒன்பதாம் திருமுறையில் புருஷோத்தம நம்பி போன்றவர்கள் வைணவ பெயர்களை சூடியிருப்பது காண்க. விஷ்ணுவையும் பிரம்மாவையும் சிவபரத்துவத்துள் ஏற்பது சைவ மரபு என்பது யாவரும் அறிந்ததே!

ஆகவே கிபி 1163வரை சேக்கிழார் வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. இரண்டாம் ராஜராஜன் இக்காலத்தில் தாராசுரம் கோவிலை எடுப்பித்து வருகிறான் என்பது கூடுதல் செய்தி. அக்கோவிலில் பெரியபுராணத்தை அடிப்படையாகக்கொண்டு 63-நாயன்மார்களின் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்று. கிபி 1167-இல் தாராசுரம் கோவிலில் இரண்டாம் ராஜராஜன் நிவந்தமளித்த கல்வெட்டைக்கொண்டு அக்கோவில் அதற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டது என அறியலாம்.

சேக்கிழார் மறைவை கணிக்கவும் ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கிபி1185 ல் சிதம்பரத்தில் “திருத்தொண்டர்சீர் உரைத்தார் நந்தவனம்” என்று வழங்கப்படுவதில் வரும் இறந்தகால (Past Tense) குறிப்பை கொண்டு அதற்கு முன்பாகவே சேக்கிழார் மறைந்தார் என கொள்ளலாம். ‘திருதொண்டர்சீர்’ எனும் பெயரை சேக்கிழாரும் உமாபதி சிவமும் குறிப்பிடும் வரிகளை கீழே இணைத்திருக்கிறேன்.

திருதொண்டர்சீர் புகலலுற்றேன்” என்று பெரியபுராணம் பாயிரத்தில் கூறுவார் சேக்கிழார். “திருதொண்டர்சீர் பரவும் குன்றையாதிபதி சேக்கிழார்” என்று சேக்கிழார் புராணத்திலே கூறுவார் உமாபதி சிவம்.

மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே(1203AD) திருவாஞ்சியம் அருகே செவ்வூர் சிவன் கோவிலில் சேக்கிழார் படிமம் எடுக்கப்பட்டு நாள்தோறும் வழிபாட்டிற்கு நிலங்கள் அளிக்கப்பட்டதை திருவாஞ்சியம் கல்வெட்டு கூறுகிறது. எனவே சேக்கிழார் கிபி 1185க்கு முன்பாகவே மறைந்திருக்கிறார் என்பது ஏற்புடையதாகிறது. அவரது மறைவிற்கு பின்பும் பாலறாவாயர் அரசவையில் இருந்தமை இரு கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. அவை, “குன்றத்தூர் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்” –  கி.பி. 1164 – திரு அரத்துறை – இரண்டாம் ராஜராஜன்.

குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்” – கி.பி. 1179 – கோட்டூர் தஞ்சை- மூன்றாம் குலோத்துங்கன்.