பொதுவாக சாதிகளில் எது உயர்ந்தது? மொழிகளில் எது சிறந்தது? இனங்களில் எது மேன்மையானது? எனும் ஆய்வுகளுக்கு எல்லாம் செல்ல விரும்பாதவன் நான். அதேசமயம் தாய்மொழி பற்று என்பதை தாண்டி பிற மொழிகளையும் வெறுத்து ஒதுக்காமல் அவற்றையும் மதித்து வருபவன் என்பதால் தான் எனது புனைப்பெயராக ‘அத்யந்தகாமன்‘ எனும் வடமொழி பெயரை சூட்டியிருக்கிறேன். ஆனால் கடந்த சில நூற்றாண்டிற்கு முன்பிருந்து தமிழகத்தில் வடமொழி மோகம் அதிகரித்து விட்டதாக தெரிகிறது. ஏனெனில் சைவ சமயாச்சாரியார்களான மூவர் முதலிகள் போற்றிப்பாடிய பதிகங்களில் இறைவனை அழகான தமிழ் பெயரிலேயே பெரும்பாலும் குறிப்பிட்டு பாடியிருக்கிறார்கள். அதற்கு இணையாக முற்கால சோழர்கள் தொடங்கி நாயக்கர் காலம் வரையிலும் இந்த பெயர்கள் மாறாமல் கல்வெட்டுகளிலும் கிடைக்கின்றன. ஆனால் இன்றோ பாடல்பெற்ற 274 தலங்களில் பெரும்பான்மையான தலங்களில் இறைவனுக்கு வடமொழி பெயரே சூட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது. இதற்கு காரணம் வடமொழி என அறியப்படும் சமஸ்கிருதம் ‘தேவ பாஷா’ என சில புறச்சமயிகள் வெளிப்படையாக பேசிவந்ததால், அம்மோகத்தில் சைவ சமயத்தவர்களும் உழன்று வடமொழி மாயையால் தமிழ் பெயர்களை நீக்கி வடமொழியை புகுத்த துணிந்திருக்கிறார்கள் என அறியமுடிகிறது. அவ்வாறு கடந்த சில காலமாக வடமொழி தேவ பாஷை என்றும் பிற மொழிகள் அதற்கு கீழானது எனவும் ஆரிய மொழிக்குடும்பத்திற்கு உரிமையுடையோர் சிலர் தமிழகத்தில் பேசி வருவதால் சைவ சமய நூல்களை ஆய்ந்து அதில் வரும் தமிழ் மொழி வடமொழி குறித்து எழுதுவது எமது கடமையாகிறது.

நால்வர் பெருமக்கள் ஓவியம்- திருவையாறு

“ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலி காதலின் மொழி என்றும் கூறுவது பொருந்தும் என்றால் தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவதும் பொருந்தும்” என்பார் தமிழறிஞர் தனிநாயக அடிகளார்.

முத்தமிழின் முதற்சங்கத்திற்கு தலைமையேற்றவர் சிவபெருமான் என்பது பழங்கால நம்பிக்கை. இதனை அடியொற்றியே மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில், ‘தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை‘ (8:8:10) என்கிறார். பின்பு திருக்கோவையாரில் இதனை விரித்து கூறும்போது, ‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்துறைவாய் நுழைந்தனையோ‘ என்று குறிக்கிறார். சங்கம் வைத்து தமிழை ஆராய்ந்த நகரத்தில் ஒன்று மதுரை என்பது நாம் அறிந்த ஒன்றே!

சைவ சித்தாந்தத்தை பொறுத்தவரையில் மாணிக்கவாசகர் ஞானமார்க்கத்தை வழங்கியவர். குரு வடிவாகக் இறைவன் காட்சியளித்து, திருவடி தீட்சை தந்து மறைந்த சிவபெருமானை, மீண்டும் பெற நினைத்து, நனைந்து நனைந்து பாடியவை திருவாசகம் எனும் தேனருவி. இறைவனின் பேரன்பையும் பெருங்கருணையும் விளக்கும் தெவிட்டாத நூல் இது. “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர், இப்பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் கேட்டருளிய இறைவனே, மீண்டும் அந்தணர் உருவில் வந்து மாணிக்கவாசகரை பாடக்கேட்டு, தன் கைப்பட எழுதிமுடித்து, முடிவில் ‘திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து‘ என பதிப்பித்ததாக ஒரு பழம்பெரும் நம்பிக்கை சைவ சமயத்தவர்களிடம் இருந்து வருகிறது. இப்படியாக இறைவனே மாணிக்கவாசகரின் செந்தமிழ் சொற்களில் உருகி, அவற்றை தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டிருக்கிறார் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. திருவாசகத்தை முழுவதும் படித்துணர்ந்த ஜி.யு.போப், ‘எலும்பை உருக்கும் பாட்டு‘ என்று எழுதினார். கிருத்துவத்தை பரப்ப வந்தவராயினும் சைவ சமய நூலான திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். மாணிக்கவாசகரைப் பற்றி, “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை” என்று குறிப்பிடுவதின் மூலம் திருவாசகம் அகச்சமயிகளை மட்டுமல்ல புறச்சமயிகளையும் கவர்ந்திழுத்திருக்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் வழங்க வேண்டியதில்லை.

சைவ சமயக்குரவர்களில் வரலாற்றை பொறுத்தவரையில் காலத்தால் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவர் தனது திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில், “செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே” என்கிறார். காரைக்கால் அம்மையாரின் கூற்றுப்படி செந்தமிழில் பாடினாலே சிவகதி அடையலாம் என்பது பெறப்படுகிறது. இவர் வடமொழி குறித்து எங்கும் குறிப்பிட்டதாக தெரியவில்லை.

பதினோராந் திருமுறையில் முதன்மையாக அமைந்துள்ளது திரு ஆலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் என்பதாகும். இது இறைவனே இயற்றியது என்பதால் தான் இந்த திருமுறையின் தொடக்க பாடலாக தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையில் ஈரிடங்களில் சுந்தரருக்கு இறைவனே, பாடுவதற்கு அடியெடுத்து கொடுக்கிறார். அதேபோல் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு ,’உலகெலாம்‘ என அடியெடுத்து கொடுத்தவர் இறைவன்.

ஆக இவைகளில் இருந்து சிவபெருமான் தமிழ் சங்கத்தின் தலைவன் என்றும், அவருக்கு செந்தமிழை இலக்கண சுத்தத்துடன் எழுதவும், படிக்கவும், படைக்கவும், அடியெடுத்து கொடுக்கவும் தெரியும் என்பது பெறப்படுகிறது. ஆனால் வடமொழியாகிய சமஸ்கிருதத்தை படைத்தவர் இறைவன் என திருமுறைகளில் கூறப்பட்டிருந்தாலும் வடமொழி மந்திரங்களை உருகி கேட்டும், எழுதியும், அடியெடுத்தும் கொடுத்ததாக கூற எவ்வித தரவுகளும் கிடைக்கப்பெறவில்லை.

திருமுறைகளில் அருளாளர்கள் போற்றிய தமிழ் மொழி சிறப்பு குறித்து காண்போம். திருஞானசம்பந்தர், ‘முத்தமிழ் விரகனே, நானுரைத்த செந்தமிழ் பத்துமே” என்கிறார். திருநாவுக்கரசரோ, ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்‘ என்கிறார். சுந்தரரோ, ‘பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே‘ என்கிறார். திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவரான சேந்தனார், “பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர்” என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில் போற்றுகிறார்.

திருமந்திரம் அருளிய திருமூல நாயனார், “ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்காரிகை யார்க்குக் கருணைசெய் தானே” (65) என்று இரண்டு மொழியையும் இறைவனே படைத்ததாக கூறுகிறார். இதில் வரும் ஆரியம் என்பது முதலாகவும் தமிழ் பின்னாகவும் வருவதை சுட்டிக்காட்டி ஆரியமே முதல் என கூறுவோர் சிற்றறிவு பெற்றவர்கள் ஆவர். ஏனெனில் அதே திருமூலர் இதற்கு அடுத்தப்பாட்டில், “தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்உணர்த்தும் அவனை உணரலும் ஆமே” (66) என்கிறார். இங்கு தமிழ் முதலாகவும் வடமொழி பின்னாகவும் வருகிறது. ஆகவே வடமொழி தமிழ் மொழி என இரண்டும் முன் பின்னாக குறிப்பிடுவதால் முன் வருவதை சிறப்பு என கூற எவ்வித முகாந்திரமும் இல்லை. அப்படி கூறுவது தான் உசிதம் என்றால் அதற்கு மற்றொரு சான்றை திருநாவுக்கரசு நாயனார் வழங்குகிறார். அவரது திருமறைக்காடு பதிகத்தில்,

முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” (6:23:9) என்கிறார். எனில் முத்தமிழுக்கு பிறகு தான் நான்மறைகள் என கூறுவதும் அவ்வகையில் முறையானதாகிறது. எனவே இரண்டு மொழிகளை கூறியிருந்தாலும் அவைகளில் முதலில் வருவதைக்கொண்டு முடிவெடுப்பது தவறானது என இதன் மூலம் பெறப்படுகிறது. ஆகவே இரண்டு மொழியையும் இறைவன் அருளினான் என்பது தான் மரபே தவிர, ஆரியம் முதல் என்று கூறிவிட முடியாது. அதேசமயம் இரு மொழிகளை இறைவன் அருளியதால் இரண்டும் சமம் என்பதும் ஏற்புடையதாகாது. நிச்சயமாக ஒன்று சிறப்பு. மற்றொன்று பொது என்று தான் அமைந்திருக்கும். இதனை சற்று விரிவாக வேறு சில சான்றுகள் கொண்டு காண்போம்.

வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேதாந்தம், சித்தாந்தம் எனும் இருபெரும் பிரிவுகள் வளர்ந்துள்ளன. வேதாந்தம் என்பன வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதங்கள். சித்தாந்தம் என்பன 28 சைவ ஆகமங்கள்.  வேதங்கள் காட்டிய நெறி வைதிகம் என்றும் ஆகமங்களின் நெறி சைவநெறி என்றும் அறியப்படுகின்றன. ‘வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள், வேறுரைக்கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள்’ என்றும் “ஆரணநூல் பொது;சைவம் அருஞ்சிறப்பு நூலாம்“(சிவஞானசித்தியார் 267) என்கிறார் அருணந்தியார். வேதம் உலகவருக்குச் செய்யப்பட்டதாதலின் ‘பொது’ என்றும், ஆகமம் பிறப்பறுத்து வீடு பேற்றினை விரும்பும் சத்திநிபாதர்களுக்கு உரைக்கப்பட்டதாகலின் ‘சிறப்பு’ என்றும் கூறப்பட்டன. வேதம், ஆகமம் இரண்டும் சிவனருளிய நூல்கள் என்று திருமுறைகளில் கூறப்பட்டாலும் இவற்றைப் பின்பற்றியவர்களிடையே பிற்காலத்தில் வேற்றுமைகள் தோன்றியதாக தெரிகிறது. வேதாந்திகள் சித்தாந்திகளைப் பழித்தனர். சித்தாந்திகள் வேதாந்திகளை இகழ்ந்தனர். சித்தாந்திகள் வேதங்களைப் ‘பாசநூல்’ என்றனர். வேதியர்கள் சிவாகமங்களை ‘மயக்க நூல்கள்’ எனத் தூற்றினர். இது திருமூலர் காலத்திற்கும் முற்பட்ட பூசலாக இருத்தல் வேண்டும். ஏனெனில் வேதம், ஆகமம் என பல இடங்களில் குறிப்பிட்டு பாடும் திருமூலரே,

வேதமோடாகமம் மெய்யாம் இறைவன்  நூல்ஓதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன” (8:10:28) என்கிறார். ஆகவே இங்கு இரண்டு நூல்களும் இறைவனால் படைக்கப்பட்டிருப்பினும் ஒன்று பொது. மற்றொன்று சிறப்பு என்று சமயாச்சாரியார்களாலேயே கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதனை தான் தருமையாதீன புலவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணியாற்றிய ‘மகாவித்துவான்’ அருணை வடிவேலு அவர்கள் ‘சிவஞானசித்தியார் சுபக்க உரை’ குறித்து சொற்பொழிவாற்றும்போது, வேதம் கீழானது, சிவாகமங்கள் மேலானது என்பார். இப்படி மேல், கீழ் என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது உசிதமாக இருக்காது என்றே அவற்றை பொதுவும் சிறப்பும் என சுட்டியிருக்கிறார்கள் அருளாளர்கள் என குறிப்பிட்டிருப்பார் அவர்.

ஆகவே தங்கமும் பித்தளையும் இறைவனால் அருளப்பட்டது எனினும் தங்கம் சிறப்பு; பித்தளை பொது என்று பகுத்தறிவது போலவே, செந்தமிழ் சிறப்பு என்றும் வடமொழி பொது என்றும் பகுத்தறிய பன்னிரு திருமுறைகளே பல சான்றுகளை பகர்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

திருமறைக்காட்டு தலத்தில் நான்கு வேதங்களும் கலியுகம் தொடங்கியதால் கோவிலை பூட்டிவிட்டு சென்றதாக இன்றும் தலப்புராணம் கூறும். அவற்றை மெய்பிக்கும் வகையில் திருநாவுக்கரச நாயனார் திருமறைக்காட்டு பதிகத்தில் இதனை சுட்டிக்காட்டி பெருங்கதவை செந்தமிழ் பதிகம் (5.10.1) பாடி திறப்பார். அவ்வாறு திறந்த கதவை திருஞானசம்பந்தர் பதிகம் (2.37.1) பாடி மூடுவார். இதற்கு இவ்விருவரின் திருப்பதிகங்களில் அகச்சான்றுகள் உண்டு. எனினும் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் இதனை கூறும்போது, “அருமறைகள் திருக்காப்பு செய்து வைத்த அக்கதவை திறந்திட” (திருஞானசம்பந்தர் புராணம் 580), என்று சம்பந்தர், திருநாவுக்கரசரை பணிக்கிறார். அதுவும் எவ்வாறு, “அப்பரே!…நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு, மெய்ப்பொருள் வண்டமிழ்பாடி அருளும்” (திருஞா.புரா.581) என்பது சம்பந்தரின் வாக்கு. இதில் ‘மெய்ப்பொருள் வண்டமிழ்’ என குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்க. அதாவது வடமொழி நான்மறை மூடிய கதவை தமிழ் மறை பாடி திறந்தும் மூடியும் இருக்கிறார்கள் அருளாளர்கள்.

இதுமட்டுமல்லாது, திருஞானசம்பந்தர் தனது ஒவ்வொரு பதிகத்திலும் தன்னை தமிழ்ஞானசம்பந்தன், தமிழாகரன் என பலவாறு தமிழ் மொழியுடன் இணைத்து கூறிக்கொள்கிறாரேயொழிய எங்கும் வடமொழியை பெயரளவிலும் இணைத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு திருஞானசம்பந்தரின் சைவ பணியை பின்வந்த சுந்தரமூர்த்தி நாயனார் மிக அழகாக எடுத்துரைக்கிறார்,

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்தவன்” (7.62.8) என்கிறார். அதாவது சம்பந்தர் சைவத்தை பரப்பினார் என கூறவில்லை. வைதீகத்தை பரப்பினார் என கூறவில்லை. இந்து சமயத்தினை பரப்பினார் என கூறவில்லை. இன்னிசையால் தமிழ் பரப்பினார் சம்பந்தர். அதற்காக தாளம் ஈந்தார் சிவபெருமான். இங்கு தமிழும் சைவமும் வேறு வேறல்ல என்பதாகவே கருத முடிகிறது. இவ்விடத்தில் தமிழ் எனும் சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது, தமிழ் நெறி, பண்பாடு, கலை என அனைத்தையும் சுட்டுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைவிட தமிழ் மொழி சைவ சமயத்திற்கு சிறப்பு என காட்ட வேறெந்த தரவுகளும் வேண்டா!

எனினும் மற்றொருமுறை தன் பங்குக்கு சேக்கிழார் மீண்டும் ஒருமுறை சம்பந்தரை செந்தமிழுடன் இணைத்து கொண்டாடுகிறார்.

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக’ (திருஞா.புராணம் 24)

அதாவது செந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறையை வெல்ல வேண்டுமாம். அயல் வழக்கு என்பது சமண-பௌத்த வழக்கு. அதனை ஆரியம் கொண்டு வெல்ல வேண்டும் என்றோ, வேதம் கொண்டும் வைதீகம் கொண்டும் வெல்ல வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. செந்தமிழ் வழக்கு என சைவத்தை செந்தமிழுடனுன் இணைத்து சம்பந்தரின் பிறப்பு குறித்த இடத்தில் சம்பந்தரை போற்றி எழுதுகிறார். திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசைக்கு வந்து ஏறவேண்டுமாம். அதாவது நான்கு திசைகள் இருந்தாலும் தென்திசைக்கு சிறப்பு வேண்டுகிறார். ஏனெனில் மாணிக்கவாசகர் போற்றித்திருவகவலில், “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!” என்கிறார். ஆதலால் இறைவனின் நாடான தென்திசைக்கு பிற திசையினை காட்டிலும் பெருமை வந்து ஏறனுமாம். நான்கு திசைகளும் சமம் தானே என்றாலும், இறைவனை உடைய நாடும், அந்நாடு இருக்கும் திசையும் சிறப்பு என்பது சேக்கிழார் வாக்கு.

இவையல்லாது இலக்கணப்படி திருப்பதிகங்களை ஆராயும்கால் மற்றுமொரு விடயம் புலனாகிறது. அதாவது ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே‘ (சொல். 91) என்கிறது தொல்காப்பியம். ஒருவினையின் பின்னொட்டாக ‘ஒடு’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு எதை சார்ந்து வருகிறதோ அதுவே சிறப்பு. (எ-கா) ‘ஆசிரியரொடு மாணாக்கன் வந்தான்’ என்பதில் ஆசிரியர் எனும் சொல்லுக்கு பின் வரும் ‘ஒடு’ என்பது ஆசிரியரை சிறப்பாக குறிக்கும். மாணாக்கன் ஆசிரியருக்கு வழியாக வருபவன். இவ்வாறு திருமூலர் ஓரிடத்தில், “தமிழொடு ஆரியம் தந்த தயாபரன்” என்கிறார். இங்கு தமிழ் என்பதின் ஒட்டாக ‘ஒடு’ வருவதை காணலாம். இதேபோல், திருநாவுக்கரசர், “செந்தமிழொடு ஆரியனை சீரியானை” (6.46.10) என்கிறார். பல இடங்களில் ‘ஆரியமும் தமிழும்’, ‘தமிழ்ச்சொல் வடச்சொல்’, ‘முத்தமிழும் நான்மறையும்’ என வந்தாலும் எங்குமே ‘ஒடு’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு ஆரியத்துடன் இணைந்து வரவில்லை. இதற்கு மாறாக ஓரிடத்தில் மட்டும் திருஞானசம்பந்தர்,

சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே” (3.39.4) என்கிறார்.

இங்கு சமண சமயத்தவர்களுக்கு ‘ஆரியத்தொடு செந்தமிழ் பயனறிகிலா’ என்று கூறுவதன் பொருட்டு இவ்விடத்தில் தொல்காப்பிய விதிப்படி ஆரியத்தை சிறப்பாக கூறுவதாக கருதினாலும் அதற்கு அடுத்த சொல்லாக ‘செந்தமிழ் பயனறிகிலா’ என்பது தமிழின் சிறப்பை சுட்டுவதாக அமைகிறது. இங்கு சமண சமயத்தை சாடுவதாலும், சுந்தரர் தமது பதிகத்தில் சமணர்களின் மொழியை கிண்டல் செய்வதாக, “ஞமண ஞாஞண ஞாண ஞோணமெண் றோதி” (7.33.9) பாடுவதாலும், சம்பந்தரும் இவ்விடத்தில் சமணர்களின் அர்த்தமகதி மொழியை தான் கேலி செய்திருக்கிறார் என்பதாக தெரிகிறது. அதுவும் ஆரிய மொழிக்குடும்பத்தில் வரும் மொழியே என்பது யாவரும் ஒப்புக்கொண்ட ஒன்று. ஆகையால் இவ்விடத்தில் ‘மந்திப்போற்றிரிந் தாரியத்தொடு’ என்பது குரங்குகள் போல ஆரிய மொழியை (அர்த்தமகதியை) போற்றுபவர்கள் ‘செந்தமிழ் பயனறிகிலா’ என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. அதுபோக இது புறச்சமயத்துடனான சான்று. அகச்சமய சான்றாக திருமூலர் மற்றும் திருநாவுக்கரசரின் பதிகத்தை கருதலாம். இவை தவிர்த்து வேறெங்கும் ‘ஆரியத்தொடு’ எனும் சொல் தமிழுடன் இணைந்து கிடைப்பதாக தெரியவில்லை.

அதுபோக ஆரியம், வேதம், ஆகமம், தமிழ் சொல், வடச்சொல் என பல இடங்களில் எழுதிய திருமூலரே, “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” (10.81) என்கிறார். ஆரியம் செய்யவோ வடமொழி செய்யவோ இறைவன் படைத்ததாக எங்குமே கூறவில்லை. இவை தாண்டி வழிபாடு குறித்து கூறும்போது, “செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு” (10.4.15) என்கிறார். வடமொழி ஆதி தெரிய வேண்டும் என்றோ, வடமொழி தெரிந்து தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றோ கூறவில்லை. அதேபோல்,

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்” என்றும், “தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் தாமே” என்றும் கூறுகிறார் திருமூலர். ஆரிய மண்டலம் குறித்தோ, ஆரிய தத்துவம் குறித்தோ தேடினும் அறிகிலா!

சேக்கிழார் மேலும், “ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழாம்” (1-5) என்று தமிழை தெய்வத்துடன் ஒப்பிட்டு போற்றுகிறார். பின் சுந்தரரை போற்றும் இடத்தில்,

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவான் – (பெ.பு. 35) என்கிறார்.

அதாவது தென்திசையில் பிறந்திடவும் வாழ்ந்திடவுமே மாதவம் செய்ய வேண்டுமாம்.அவ்வாறு தென்திசையில் பிறந்து வாழ்ந்த சுந்தரர், குற்றமற்ற திருத்தொண்டத் தொகை படைத்தருளினார் என்பது சேக்கிழார் கூற்று. இதோடு பெரிய புராணம் முழுவதும் அநேக இடங்களில் செந்தமிழ், வண்டமிழ், தீந்தமிழ், இன்தமிழ், நற்றமிழ் என்றெல்லாம் தமிழை போற்றி புகழ்ந்து துதிக்கிறார் சேக்கிழார். ஆனால் ஓரிடத்திலும் இவ்வாறு வடமொழியை உயர்த்தியதாக தெரியவில்லை.

இதுபோக இப்படி ஓதவில்லை என்றால் விபரீத பலன் தருவது வடமொழி வேதம். பண்ணோடு இசைத்தாலும் வந்தவாறு பாடினாலும், பாடுவதை கேட்டாலும் பலன் தருவது தமிழ் மறைகள் என்பது சம்பந்தரின் கீழ்கண்ட பாடல் மூலமே அறியலாம்.

“அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே” (1.28.11). சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும் என்கிறார் அவர். அதோடு,

ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே” (2.106.11) எனவும் பாடுகிறார். அதாவது  ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத் திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார் அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாராது. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகாது என்கிறார் அவர்.

வடமொழி மந்திரங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதவேண்டும் என சாஸ்திரங்கள் கூறியதாக தெரியவில்லை. பல வேதியர்களும் அதனை மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்களேயன்றி, பொருள் உணர்ந்து ஓதும் அளவிற்கு அவை கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால் மாணிக்கவாசகரோ, “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிகீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து” என்கிறார். இறைவனை அடைவது என்பது வெறும் மந்திரம் ஓதுவதுமட்டுமல்ல, இறைவனை நினைத்து உருகி போற்றும் அன்பில் உடல் சிலிர்த்து கண்ணீர் மல்கி ஓதுவதே சிறப்பு. அவ்வாறு பொருளுணர்ந்து ஓதும் மொழியே சிறப்பு. அவ்வகையில் தமிழ் சைவத்தினுள் சிறப்பு.

1500 ஆண்டுகட்கு முன்பு சமண-பௌத்த சமயங்கள் அந்நிய நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்தபோது அவற்றை தமிழ் கொண்டு விரட்டினார்கள் அருளாளர்கள். கிபி 6-7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வேறெந்த பகுதியிலும் மொழியை முன்வைத்து இப்படி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. தமிழை முன்னிருத்தி தான் பக்தி இலக்கியங்கள் கோலோச்சினவே ஒழிய வடமொழியை கொண்டல்ல. அவ்வளவு ஏன் ‘ஆரியமும் தமிழும்’ என்று இரண்டையும் குறிப்பிட்டு பாடிய அருளாளர்கள் கூட வடமொழியில் எதுவும் இறைவனை போற்றி இயற்றியதாக தெரியவில்லை. பன்னிரு திருமுறைகளிலும் தமிழை தான் சிறப்பாக போற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார்களே தவிர வடமொழி ஒரு பின்னொட்டாக மட்டுமே வந்து ஒட்டிக்கொண்டது. வடமொழியை தமிழுக்கு சமமாகவோ, தமிழை காட்டிலும் உயர்ந்ததாகவோ எந்த சமயாச்சாரியார்களும் கூறவில்லை. வடமொழிக்கான மதிப்பினை தந்து அவற்றை தமிழுக்கு பின்னாக நிறுத்திக்கொண்டனர். பன்னிரு திருமுறைகளில் எத்தனை வடச்சொற்கள் கிடைக்கின்றனவோ அவ்வளவிலே தான் வடமொழியை சைவம் கொண்டிருந்தது. சைவத்தில் வடமொழியும் ஒரு அங்கமாக இருந்ததேயன்றி அது தமிழுக்கு இணையாகவோ, தமிழைக்காட்டிலும் உயர்ந்ததாகவோ கூற எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.

அதேசமயம் பிற்கால சைவ சமயாச்சாரியார்கள் சிலர், ‘இந்தோ- ஆரிய மொழிக்குடும்பத்துக்கு சொந்தக்காரர்கள் பலர் சைவத்தை ஏற்று போற்றி வந்ததால் அவர்களின் மனம் புண்பட்டுவிடக்கூடாது எனும் உயரிய நோக்கத்தில் இவ்விரு மொழியும் சமமானதே’ என கூறி வந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. அந்த சமயாச்சாரியார்களும் இக்காலகட்டத்தில் வாழ்ந்திருப்பார்களானால் நிச்சயம் திருமுறைகளில் இருந்து எடுத்துக்காட்டி ‘ஆகமம் சிறப்பு, வேதம் பொது’ என்பதனை சுட்டியது போலவே , ‘தமிழ் சிறப்பு, வடமொழி பொது’ என்று கூறியிருந்திருப்பார்கள் என ஊகிக்கமுடிகிறது.

மௌனவைப்பாகிய இறைவனுக்கு தன்னால் படைக்கப்பட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளும் சமம் தான் என்றாலும் அந்த இறைவனே தன் கைப்பட எழுதியும், இயற்றியும், பேசியும், உருகியும், அடியெடுத்து கொடுத்தும் தமிழ் சங்கத்திற்கு தலைவனாக அமர்ந்தும் ஆனந்தக்கூத்தாடியவனுக்கு, செந்தமிழே சிறப்பு என்பதாக நற்சைவர்கள் கருதுவதில் தவறேதுமில்லை என்றே தெரிகிறது.

இவ்வாறான சைவ நூல்களில் இருந்து ஒருபுறம் தமிழின் சிறப்பை அறிய முடிகிறது என்றாலும், சைவத்தை போற்றி பின்பற்றிய இடைக்கால சோழர்களின் கல்வெட்டுகளிலும் கோவில்களில் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய பிடாரர்களை நியமித்த தகவல்கள் தான் பல்லவர்கள் காலந்தொட்டு பல ஊர்களிலும் கிடைக்கின்றனவே ஒழிய, கோவிலில் தேவரடியார்கள் நடனம் ஆடும் இடங்களில் தான் ‘ஆரியம்’ பாட நிவந்தங்கள் தந்ததாக தெரிகிறது. இது தவிர்த்து கோவிலில் கூட வேறெங்கும் ஆரியம் பாடியது போல் தெரியவில்லை.

ஆகவே சைவத்தில் உழலும் புறச்சமயத்தார்கள் சிலர் இனி, “வடமொழி தேவ பாஷா” என கூறினால், “தென்தமிழ் மகாதேவனின் பாஷா” என விடையளித்து அச்சிற்றறிவு படைத்தோரை கடந்து செல்க!