சைவ சித்தாந்த அரசியல் வரலாற்றை ஆராய்வதும் பலதரப்பட்ட சைவங்களின் நிலை தென்னிந்தியாவில் எப்படி இருந்தது என்பதையும் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்துவது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

சைவம் எனும் ஒரு சமயத்தை மட்டும் எடுத்து அதன் தொன்மையை ஆராய்ந்தால் அது பொது ஆண்டுக்கு முன் முதல் நூற்றாண்டு அல்லது பொது ஆண்டின் தொடக்க காலத்துக்கு செல்லும். இது வரலாற்று ரீதியிலாக இன்றுவரை கிடைத்த பொதுவாக அனைவரும் ஏற்கும்படியான தரவுகள், இதுவே இலக்கிய ரீதியில் கருதினால் முதல் சங்க காலம் வரையிலும் சைவ சமயத்தின் தொன்மையானது நீளும். ஆனால் பொது ஆண்டிற்கு பின் 2-3ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் சைவமானது வடக்கே பாசுபத சைவமாகவும் தெற்கே காபாலிக சைவமாகவும் வளர்கிறது.

பாசுபத சைவத்தை பொதுவாக இதுநாள் வரையிலும் ஆதிமார்க்கமாக கருதி அதன் பிரிவுகளாக காபாலிக, காளாமுக சைவங்களை பட்டியலிடுவர். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏனெனில் காபாலிக சைவமானது மந்திர தந்திர வழியினை ஏற்று வந்த மரபு. இது கிட்டத்தட்ட பழங்குடி சடங்குகளை பெரும் சமயமாக கொண்டு வந்த மரபு. அதுபோக காபாலிகம், காளாமுக சைவத்தினை ஆராய்ந்த டேவிட் லோரின்சன் கூட காபாலிகம் தென்னிந்திய மரபில் தோன்றியதாகவே குறிப்பிடுவார்.

பாசுபத லகுலீசர் – முற்கால சாளுக்கியர் காலம் – மஹாகூடா, கர்நாடகம்.

ஆனால் பாசுபத சைவமோ குஜராத்தில் காயாரோகணம் எனுமிடத்தில் லகுலீசரை முன்னிருத்தி வளர்ந்தது, பின்னர் தெற்கு நோக்கி வந்ததில் வடக்கு கர்நாடகத்தில் சிறிது காலம் நிலைபெற்றிருந்தது. இந்த லகுலீச பாசுபதம் ஆரம்ப காலத்தில் ஆகமத்தின் வழி வந்த சமயமாகவும் ஆதி சங்கரரின் அத்வைத கோட்பாட்டிற்கு பின்னர் வேதாந்த மரபையும் ஏற்ற பிரிவாக மாறுகிறது எனவும் கூறுவர். இது எந்தளவுக்கு உண்மை என்பது விரிவாக ஆராய வேண்டியது. ஏனெனில் ஆகமங்கள் தாந்த்ரீக வழியிலும் வேதாந்த மரபானது பிராமண (Orthodox) வழியிலும் முக்தியினை வழங்கும் வெவ்வேறு வழிமுறைகள். ஆதி சங்கரர் காபாலிகர்களை வீழ்த்திய கதைகள் அவரது ‘சங்கர திக்விஜய‘த்தில் நேரடியாகவே உண்டு. ஆனால் ‘பிரம்மவித்யபாரனா‘ எனும் நூலை எழுதிய அத்வைதானந்தா என்பவர் ஆதி சங்கரரின் வேதாந்த சூத்திரங்களுக்கு உரையெழுதும்போது ஆதி சங்கரர் பாசுபத சைவர்களை எதிர்த்ததாக எழுதுகிறார். நேரடியாக சங்கரர் இவர்களை எதிர்த்த தரவுகள் இல்லை. எனினும் ஆதி சங்கரரின் அத்வைத தாக்கமானது கிபி 9-10 ஆம் நூற்றாண்டிலேயே வட இந்தியாவில் பிரபலமடைந்தது. அப்போதே பாசுபத, காபாலிக தளங்களில் ஸ்மார்த்தர்களின் தாக்கம் இருந்தது என V.S Pathak குறிப்பிடுவார்.

‘சங்கர திக்விஜய’ குறிப்பின்படி ஒரு காபாலி ஆதி சங்கரரை கொல்ல வரும் காட்சி.

காபாலிகத்திலும் ஆகமங்கள் இருந்தன. வாம மார்க்கம் போன்ற தந்திர சடங்குகள் பிரதானமாக இருந்து வந்தது. அதேசமயம் பாசுபதத்திலும் லகுலீச ஆகமம் இருந்தது. இது கல்வெட்டின் மூலமே தெரியவரும் செய்தி. ஆனால் காபாலிகத்திற்கு முற்றும் மாறுபட்ட பிரிவு தான் பாசுபதம். இந்த பாசுபத சைவத்தில் இருந்து கிபி 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் தனியே பிரிந்தது தான் காளாமுக சைவம். இந்த பிரிவு ஏற்பட்டதும் கர்நாடகத்தில் தான். கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம் தவிர்த்து பிற இடங்களில் காளாமுக சைவமானது இருந்தது என்பதை உறுதியாக கூற எவ்வித சான்றும் இல்லை. இந்த தகவலை The Kapalikas and Kalamukhas: Two lost Saivite Sects எனும் நூலில் குறிப்பிடுகிறார் David.N.Lorenzon.

அதேசமயம் காளாமுக சைவமானது கர்நாடக பகுதியில் மட்டுமே பிரபலமான ஒன்றாக இருந்தது. இந்த காளாமுகத்தில் சக்தி பரிஷத் எனும் உட்பிரிவு தான் பெண் தெய்வமான அம்மனுக்கு தனி சந்நதியை முன்மொழிகிறது. அதற்கு முன்பு வரை சிவனுடன் மாதொருபாகனாக சக்தி இருப்பாள். காபாலிக முறையில் உக்கிர தெய்வங்களாக காளி , சாமுண்டி போன்ற தெய்வங்களுக்கு தனியே கோவில்கள் எடுக்கப்பட்டிருக்கும். அது சிவன் கோவிலுக்குள் பெரும்பாலும் அமைந்திருக்காது. இதெல்லாம் ஆரம்ப கால அமைப்பு.

இவ்வகை பிரிவுகள் இருந்த சமயத்தில் சைவ சித்தாந்தம் என ஒன்று தனியே இருந்திருக்கவில்லை. இது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் சிலர் பல்லவ அரசனான இராஜசிம்மனின் கல்வெட்டினை சுட்டிகாட்டி, ‘சைவ சித்தாந்த மார்கே’ என்பதை இப்போதைய சைவ சித்தாந்தமாக கூறுவர். ஆனால் இராஜசிம்மன் காலத்தில் சமண,பௌத்த, ஆசீவக சமயங்கள் செழித்து வளர்ந்த காரணத்தினால் அவன் தன்னை சைவன் என்பதை வெளிப்படுத்த தன்னை ‘சைவ சித்தாந்த மார்கேய’ என கூறிக்கொள்கிறான். ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த வகை சைவ பிரிவில் அவன் இருந்தான் என்பது ஆய்வுக்குரியது. இதேபோல் கழுகுமலையில் கிபி 8ஆம் நூற்றாண்டு சமண கல்வெட்டில் ,’சமண சித்தாந்தம் பாட‘ நிவந்தம் தந்த செய்தி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த கல்வெட்டில் வரும் சமண சித்தாந்தம் என்பதை Jain Philosophy என்றே கூறுவர். அதாவது சமணத்தில் அது எவ்வகை பிரிவையும் குறிப்பிடாமல் பொதுவாக சமண சித்தாந்தம் என குறிப்பிடுவதைபோல தான் சைவ சித்தாந்த மார்கே என்பதையும் கருத வேண்டும். ‘சித்தாந்தம்’ என்பது சித்தத்தின் அந்தம் என்றே பொருள் கூறப்படுகிறது. இன்றைய சைவ சித்தாந்தம் என்பதற்கும் கூட நாம் இந்த பொருளையே மிகச்சரியானதாக அமைந்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

சைவ சித்தாந்தம் எனும் பெயர் கிபி 13-14 ஆம் நூற்றாண்டில் தான் கட்டமைக்கப்படுகிறது. அதாவது மேற்குறிப்பிட்ட சைவ பிரிவுகள் தனித்தனியே வீழும்போது அதனை ஒன்றிணைத்து ஒரே சைவமாக கட்டமைத்தது தான் சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தம் என்பதை பிற்கால பிரிவாக எடுத்தாலும் கூட அது பண்டைய சைவ மரபையே தக்கவைத்து கொண்டு அதனையே வலியுறுத்தி வந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் தேவார, திருவாசகம், திருமந்திரம் போன்றவற்றை பன்னிரு திருமுறைகளாக தொகுத்து, முற்கால சைவ இலக்கியங்களை மூலமாக கொண்டு தான் சைவ சித்தாந்தம் உருவானது. அதில் பைரவருக்கு பிள்ளைக்கறி இட்ட காபாலியான சிறுதொண்டரையும் ஏற்கிறது. வேடுவரான கண்ணப்பரின் பன்றிக்கறியையும் பக்தி மார்கத்தில் ‘அன்பே சிவம்’ என ஏற்கிறது. இதேபோல் பாசுபத, காளாமுக சைவர்களையும் ஏற்கிறது சைவ சித்தாந்தம். ஆனால் அதன் சடங்குகளில் மட்டும் சிலதை நிராகரிக்கிறது. அதாவது காபாலிக வாம மார்கத்தை மறுக்கிறது. லகுலீச ஆகமத்தையும் மறுக்கிறது. ஆனால் பாருங்கள் திருமந்திரத்தில் ‘யாமளம்’ ஒரு சைவ ஆகமமாக சுட்டுகிறது. கிபி 14 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் தான் பலதரப்பட்ட சைவங்களையும் ஒன்றிணைக்க முடியும். அதைத்தான் சைவசித்தாந்தம் செய்தது. தனித்தனியாக இருந்த பல சைவத்தினையும் உள்வாங்கி எழுந்து ஒரே சைவ சமயமாக கட்டமைக்கிறது. காலத்திற்கேற்பவும் மக்களின் சூழலுக்கேற்பவும் அது தன்னை மெழுகேற்றி வந்தது என்பதாக இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் அது ஒருபோதும் வேதாந்தத்தினை ஏற்கவில்லை என்பது தான் இங்கு உற்றுநோக்கத்தக்கது. இதற்கு எடுத்துக்காட்டாக சிவஞானசித்தியார் பாடல் 267ஐ குறிப்பிடலாம்.

“வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்;
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதி நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும்
ஆரணநூல் பொதுசைவம் அரும்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டு உரைக்கும் நூல்சைவம்; பிறநூல் திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்” – சிவஞானசித்தியார் 267.

அதாவது “வேதாந்தத் தீதில் பொருள் கொண்டு உரைக்கும் நூல் சைவம்”. வேதமும் ஆகமங்களும் மட்டுமே சைவத்திற்கு போதும் என்பது தான் அருள்நந்தி சிவம் அவர்களின் கூற்று.

ஆகவே மேற்குறிப்பிட்ட வகையில் தான் சைவ வரலாற்றை புரிந்து கொண்டு ,வரலாற்றில் அதனை காலத்திற்கு ஏற்றவாறு அணுக வேண்டும். எடுத்துக்காட்டாக சமண- பௌத்த மதங்கள் தழைத்தபோது பக்தி இலக்கியமானது அவற்றை எதிர்கொள்கிறது. பக்தி இலக்கிய காலங்களில் தென்னிந்தியாவில் காபாலிகமும், காளாமுக, பாசுபத சைவமும் பரவியிருந்தது. ஆனால் அவை ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளவில்லை. ஆனால் கிபி 12ஆம் நூற்றாண்டுக்கு பின் சமண-பௌத்த சமயங்களின் அதிகாரங்கள் ஓரளவு ஓய்ந்த பின்னர் ஆதி சங்கரரின் வேதாந்தமான அத்வைத கருத்தினை சைவ சித்தாந்தம் எதிர்க்கிறது. இத்தனைக்கும் ‘சிவாத்வைதம்’ என்றெல்லாம் சிவனை கொண்டு அத்வைதம் எழுதியதாக சொல்கிறார்கள் ஸ்மார்த்தவாதிகள். ஆனால் பலதரப்பட்ட பிரிவுகளையும் ஏற்ற சைவ சித்தாந்தம் சிவாத்வைத பிரிவை ஏன் ஏற்கவில்லை. அவற்றினை பற்றி குறிப்பிடவும் இல்லை. ஏனெனில் வேதாந்த கருத்தினை எந்த வகையிலும் ஏற்கவில்லை சைவ சித்தாந்தம்.

இந்த ‘சிவாத்வைதம்‘ எனும் பிரிவானது தமிழகத்தில் இருந்ததற்கான எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லை. ஶ்ரீகண்டர் எழுதியதாக கூறப்படும் ஶ்ரீகண்டபாஷ்யம் தவிர்த்து ஏனைய எந்த இலக்கிய தரவுகளும் சிவாத்வைததிற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஶ்ரீகண்டரின் காலமே இன்றுவரை முடிவுசெய்யப்படவில்லை. ஆனால் மத்வாச்சாரியாருக்கு பின்னான காலத்தியவராக தான் ஶ்ரீகண்டரை கூற வேண்டும். ஆகவே சிவாத்வைதம் கிபி 14 ஆம் நூற்றாண்டு நூல் என கருதுவோமானால், அதே காலகட்டத்தில் எழுந்த சைவ சித்தாந்தத்தினை கட்டமைத்த சந்தான குரவரான மெய்கண்டார் அருளிய ‘சிவஞானபோதம்‘ பாடல் ஒன்றை குறிப்பிட வேண்டியது அவசியம்.

“பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போ லெங்குமாம் – அண்ணல்தாள்
அத்துவித மாதல் அருமறைக ளொன்றென்னா
தத்துவிதம் என்றறையும் ஆங்கு” – சிவஞானபோதம் (பிராமணவியல் இரண்டாம் சூத்திரம் பாடல் 4)

அதாவது அத்வைத கோட்பாடான ஒன்று என்பது இல்லை என மறுக்கிறார் மெய்கண்டார். அதை தவறு என்பதை சில சான்றுகள் கூறி தத்துவ ரீதியில் மறுத்து எழுதுகிறார். இந்த பாடலை கொண்டு பார்க்கும்போது தான் சைவ சித்தாந்தம் அத்வைத கோட்பாட்டினை உடைத்து வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே அத்வைத கோட்பாட்டினை மறுக்கும் சித்தாந்தமானது எவ்வகையில் சிவாத்வைதத்தை ஏற்றிருக்கும்?

அதேபோல் சைவ சித்தாந்தத்தில் இணைத்து கூறப்படும் காஷ்மீரி சைவம். “காஷ்மீரி சைவத்திற்கும் தமிழக சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆகமங்கள் எல்லாம் அங்கிருந்து வந்தவை தான். திருமந்திரம் எழுதிய திருமூலரே காஷ்மீரி சைவராக இருக்க வேண்டும்” என்றெல்லாம் இதுவரை எழுதிவந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எல்லாம் திருமூலரை கிபி 4-5 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்கிறார்கள்.

உண்மையில் காஷ்மீரி சைவம் தோன்றுவதே கிபி 9-10 ஆம் நூற்றாண்டில் தான். அதிலும் 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் அபினவகுப்தர் என்பவரால் தீவிரமாக பரவியது. ஆனால் ஆகமங்கள் பற்றி தேவாரமும் தெரிவிக்கிறது. திருமந்திரமும் கூறுகிறது. திருவாசகமும் குறிப்பிடுகிறது.

“தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்” – தேவாரம் 3.23.6 (சம்பந்தர்)

“அம்மானே ஆகம சீலர்க் கருள் நல்கும்” – தேவாரம் 7.96.6 (சுந்தரர்)

“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்” – திருமந்திரம் 58.

“ஆகம மாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” – திருவாசகம் 1

இவையனைத்தும் காஷ்மீரி சைவம் என ஒன்று பிறப்பதற்கு முன்பே தமிழகத்தில் வாழ்ந்த சைவ அடியார்களால் பாடப்பட்டது. இவை இலக்கிய தரவுகள். கல்வெட்டு தகவலாக கூறவேண்டிமெனில் இராஜசிம்ம பல்லவனின் பட்டப்பெயர்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் ‘ஆகமப்பிரிய‘ என்பதை சுட்டலாம்.

இதெல்லாம் விட காஷ்மீர சைவமானது முழுவீச்சில் தாந்த்ரீக கௌல மார்க்கத்தை சேர்ந்தது. கௌல மார்க்கம் என்பது ஆண்-பெண் கூடலில் ஞானம் பெறுவது. இதனை காபாலிக சைவம் முற்காலத்தில் இருந்தே கடைபிடித்து வந்தாலும் அதே மரபில் தான் காஷ்மீர சைவமும் பிற்காலத்தில் இணைகிறது.

சைவ சித்தாந்த அரசியல் வரலாறு என்பது இந்த ஒரு கட்டுரையில் எடுத்துக்கூறிவிட முடியாத ஒன்று. எனினும் ஓரளவுக்கு சைவ வரலாற்றை புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்.