ஜைனம் – பேசப்படும் புராணமும் பேசாத வரலாறும்!
பொதுவாக தென்னிந்திய வரலாற்றாளர்கள் தென்னிந்தியாவில் ஜைனம் பரவிய கதையை பின்வருமாறு கூறுவர். அதாவது சந்திரகுப்த மௌரியர் கிமு 300இல் தனது நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக ஜைன துறவிகளுடன் தென்னிந்தியா நோக்கி வந்ததாகவும் , பின் கர்நாடகத்தின் சரவணபெலகொலா பகுதியில் வடக்கிருந்து மோட்சம் அடைந்துவிட்டதாகவும் தெரிவிப்பர். இந்த நிகழ்வின் மூலமாகவே ஜைன மதம் தென்னிந்தியாவிற்கு வந்ததாகவும், பின் கர்நாடகத்தின் வழியே மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்து பல தமிழ் இலக்கியங்களை படைத்து தமிழை வளர்த்ததாகவும், ஆதலால் தான் தமிழ் அரசர்கள் தமிழகத்தின் மலைகளில் ஜைனர்களுக்கு படுக்கைகள் அமைத்து கொடுத்ததாகவும் வரலாறு எழுதி வந்தார்கள்.

ஆனால் இவை அனைத்தும் முடிவுகட்டப்பட்டது கிபி 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமஸ்கிருத நூல் ஒன்றை கருத்தில் கொண்டு மட்டுமே. அந்நூலின் பெயர் “பிரகத்கதகோசா”. எழுதியவர் ஹரிசேனர். எழுதப்பட்ட ஆண்டு கிபி 931. ஆக இதன் தொடர்ச்சியாக சரவணபெலகொலாவில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது. அங்கே மிகப்பெரிய அளவில் பாகுபலி சிலை எழுப்பப்பட்டது. அதாவது கிமு 300 இல் சந்திரகுப்த மௌரியர் தென்னகம் நோக்கி வந்ததாக ஒரு கதை 1200 ஆண்டுகளுக்கு பின் முதல் முதலாக எழுதப்படுகிறது. இத்தனைக்கும் கிபி 700களில் எழுதப்பட்ட சந்திரகுப்தர், சாணக்கியர் பற்றிய நாடக நூலான விசாகதத்தரின் ‘முத்ரராட்சஷா’வில் கூட அவர் தென்னகம் வந்த கதை ஒரு சிறுகுறிப்பாக கூட இடம்பெறவில்லை.
ஹரிசேனரின் “பிரகத்கதகோசா”வை தொடர்ந்து பின்னாளில் இரத்னநந்தி என்பவரால் கிபி 1450ல் “பத்ரபாகு சரித்ரா” எனும் நூலும் அதன்பின் பல நூல்களும் இக்கதையை எழுதியிருக்கின்றன.ஆக தமிழகத்திற்குள் ஜைனம் வந்தது கிமு 300ல் அல்ல. பிறகு எப்போது?
கிபி 300 முதல் கிபி 550 வரை யிலும் தமிழகம் களப்பிரர்களின் பிடியில் இருந்ததாக கூறுவர். அக்காலத்தில் தான் சமண மதங்களான ஜைனமும் பௌத்தமும் தென்னகத்தில் செழித்து வளர்ந்ததாக கூறுவர். இங்கு சமண மதங்கள் என குறிப்பிட்டிருப்பது சரியே. ஏனெனில் அம்பேத்கர் கூட புத்தரை ‘The Great Shramana’என்றே குறிப்பிடுகிறார். மேலும் புத்தர் காலத்தில் 60க்கும் மேற்பட்ட சமண மதங்கள் இருந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். யார் இந்த களப்பிரர்கள்?
இன்றைய கர்நாடகத்தின் வடமேற்கு பகுதியில் இருந்த ஒரு பழங்குடிகள் தான் களப்பிரர்கள் என்பது இன்று பலரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆனால் அவர்களது ஆட்சியின் அடையாளமாக நேரடியான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பல்லவர்களும் பாண்டியர்களும் களப்பிரர்களை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியதாக தங்களது செப்பேடுகளில் கூறிக்கொள்வதால் களப்பிரர்களின் ஆட்சி தமிழகத்தில் நீடித்திருந்ததை அறியமுடிகிறது. அதேசமயம் பின்வந்த பல்லவர்களில் பலரும், பாண்டியர்களில் பலரும் கூட இவ்வாறு களப்பிரர்களை வீழ்த்தியதாக கூறிக்கொள்கின்றனர். கிபி 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் செப்பேடுகளில் கூட களப்பிரர்களை வீழ்த்தியதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதை கருத்தில் கொண்டால் களப்பிரர்கள் எனும் கூட்டத்தினர் தொடர்ந்து தமிழக மன்னர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
தமிழகத்தில் நேரடியாக ஜைனத்துக்கு துணை நிற்கும் கல்வெட்டு ஒன்று செஞ்சி அருகே திருநாதர்குன்று எனுமிடத்தில் கிடைக்கிறது. அது தமிழியில் இருந்து வட்டெழுத்தாக வளர்ச்சியடைந்த காலத்தை சேர்ந்தது. அதன் காலம் கிபி 5-6 ஆம் நூற்றாண்டு என்பர்.

கல்வெட்டு செய்தி: ஐம்பத்தேழன சனந்நோற்ற சந்திர நந்தி ஆசிரிகரு நிசீதிகை.
அதாவது 57 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இறந்த சந்திரநந்தி எனும் துறவிக்கு எடுக்கப்பட்ட நிசீதிகை கல். இந்த நிசீதிகை என்பது கிமு 150 இல் கார்வேலனின் அத்திகும்பா கல்வெட்டிலேயே இடம்பெறும். ஜைன மதத்தில் இறந்தவர்களுக்காக எடுக்கப்படும் கல்லின் பெயர் தான் நிசீதிகை. இந்த கல்வெட்டில் தான் நிசீதிகை எனும் பெயர் இடம்பெறுகிறது. தமிழகத்தில் உள்ள தமிழி கல்வெட்டுகள் பொறித்துள்ள எந்த படுக்கைகளிலும் தீர்த்தங்கரர் பெயரோ, ஜைன ஸ்லோகமோ,நிசீதிகை எனும் சொல்லோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக வட இந்தியாவிலோ, கர்நாடகத்திலோ ஜைனர்களுக்கு படுக்கைகள் எடுத்ததாக எந்தவித தகவலும் வரலாற்றில் இல்லை. ஆனால் கலிங்க அரசன் கார்வேலனின் அத்திகும்பா கல்வெட்டில் நிசீதிகை எடுத்த தகவலும், ஜைன ஸ்லோகமும் இடம்பெற்றுள்ளது. அசோகனின் கல்வெட்டுகளில் கூட பௌத்த குறியீடுகள் இடம்பெறும். தமிழக படுக்கைகளில் எங்கேயும் மேற்குறிப்பிட்ட எந்த அடையாளங்களும் இல்லை.
இப்போது ஜைன மத பிரிவுகளை சற்று மேலோட்டமாக ஆராய்ந்து ஒவ்வொரு பிரிவும் எதை வலியுறுத்துகிறது என்பதை கொண்டும் அந்த பிரிவின் சடங்குகளை கொண்டும் கல்வெட்டில் இடம்பெறும் பெயர்களை கொண்டும் ஒருவாறு இந்த பிரிவுகளை காலவரிசையாகவும் புவியியல் அமைப்பு ரீதியாகவும் அரசு ஆதரவை பெற்றவைகளாகவும் தனித்தனியே பிரித்து பார்ப்போம்.
மூன்று வகையான ஜைன பிரிவுகள் தான் பெரும்பான்மையாக இந்தியாவில் இருந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது திகம்பர ஜைனம். இது மகாவீரரே வலியுறுத்திய பிரிவு. கிமு 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே இப்பிரிவு இருந்துவருகிறது என்பர். ஆடைகளை துறந்து கடும் தவமிருந்து உயிர் கொல்லாமையை கடைபிடித்து உடலை வறுத்தி முக்தியை பெறுவது தான் இந்த பிரிவின் நோக்கம். இதில் பெண்களுக்கு முக்தி கிடையாது. அவர்கள் வடக்கிருந்து உயிர்நீத்து மீண்டும் ஆணாக பிறந்தால் தான் முக்தி. ஆகையால் இந்த பிரிவு ஆரம்பத்தில் சிலை வழிபாட்டையே ஏற்கவில்லை. பெண்களுக்கு எந்தவித பலனையும் கூறவில்லை.
இரண்டாவது ஸ்வேதாம்பர ஜைனம். இது திகம்பர ஜைனத்திற்கு போட்டியாக கிருத்து பிறப்பிற்கு பின் தான் உதித்தது என்பர். ஆனால் கிமு 150 ஐ சேர்ந்த கார்வேலனின் கல்வெட்டிலேயே ஜைன துறவிகளுக்கு வெள்ளை ஆடையையும் சீன பட்டையும் அளித்த செய்திகளையும் நந்தர்கள் காலத்தில் எடுத்து சென்ற ஜைன சிலையை கார்வேலன் மீட்ட செய்தியையும் கொண்டு இது திகம்பர ஜைனம் தோன்றிய அடுத்த சில ஆண்டுகளுக்குள் தோன்றியிருக்க வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏனெனில் ஸ்வேதாம்பரர்கள் வெள்ளை ஆடையை உடுத்துவர். சிலை வழிபாட்டை ஏற்பர். பெண்களுக்கும் முக்தி உண்டு என்பதை வலியுறுத்துவர். இந்த பிரிவை சேர்ந்தவர்கள் 24 தீர்த்தங்கரர்களில் மல்லிநாதரை பெண் தீர்த்தங்கரராக கூறி பெண்களுக்கும் இப்பிரிவில் இடம் வழங்குவர். இந்த மல்லிநாதரை தான் ஜைன இராமாயணம் சீதையாக கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பிரிவானது குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் தான் பிரசித்தி பெற்று விளங்கியது. தெற்கில் வரலாற்று காலத்தில் பிரபலமடையவில்லை என்றாலும் கர்நாடகத்தின் சில இடங்களில் மட்டும் ஓரளவு அரசு ஆதரவினை பெற்று வந்திருக்கிறது.
மூன்றாவதாக யாப்பனியா எனும் ஜைன பிரிவு. இது வட இந்தியாவில் எங்கேயும் பெரிய அளவில் பிரபலமடையவில்லை. ஆனால் முழுக்க முழுக்க கர்நாடகத்தில் மட்டும் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்கிறது. திகம்பர ஜைனர்களின் நூல்களில் இப்பிரிவு ஸ்வேதாம்பரத்தின் ஒரு கிளையாக கூறுவர். ஸ்வேதாம்பர ஜைனர்களின் நூல்களில் இப்பிரிவு திகம்பரத்தின் ஒரு கிளையாக கூறுவர். ஏனெனில் இப்பிரிவு சிலை வழிபாட்டை ஏற்கும். பெண்களை முன்னிறுத்தி சடங்குகளை செய்யும். ஸ்வேதாம்பர ஜைனத்தை விட ஒருபடி மேலே சென்று இல்லத்தரசிகளுக்கு கூட மோட்சம் வழங்கும். சமைத்து உண்பதும் விவசாயத்தை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய கொள்கைகள். மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஆடையில்லாமலும், நகரங்களில் ஒரு சிறு துண்டையும் இடுப்பில் அணிந்திருக்கும். முக்கியமாக தீர்த்தங்கரர்களுக்கு யட்சிகளை சேர்த்தது இந்த பிரிவு தான். யாப்பனியா என்பது தந்திரம் சார்ந்த ஒரு மரபை ஏற்ற ஜைனம். இதில் பேய், ஏவல் போன்ற மாயாஜால, அமானுஷ்ய சக்திகள் பற்றிய நம்பிக்கைகள் அதிகம். உயிர் பலியையும் இரத்த படையலையும் சடங்காக செய்யும். இந்த பிரிவில் மூன்று தீர்த்தங்கரர்கள் தான் முக்கியமானவர்கள். அவர்கள் மூவருக்கும் மூன்று யட்சிகள் பிரதானமாக கூறப்படும். அவை
1. பார்சவநாதர் – பத்மாவதி
2. நேமிநாதர் – குஷ்மந்தினி
3. சந்திரநாதர் – ஜ்வாலமாலினி
இந்த மூவருக்காக கட்டப்பட்ட கோவில்கள் தான் கர்நாடகத்தில் ஏராளம். குறிப்பாக கர்நாடகத்தின் வட மாவட்டங்களான குல்பர்கா, பெல்காம், பிஜப்பூர் பகுதிகளில் மிக அதிகம். அதிலும் ஜ்வாலமாலினி கோவில் பிரபலமானது. ஐஹோலே வில் இருக்கும் புகழ்பெற்ற கல்வெட்டை எழுதிய சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவன் இரவிகீர்த்தி தன்னை யாப்பனிய சங்கத்தை சேர்ந்தவன் என கூறிக்கொள்கிறான். மேலும் ஐஹோலேவில் இருக்கும் வியக்க வைக்கும் மேனபாஸ்தி ஜைன குடைவரையும் இந்த பிரிவிற்கானது தான்.

ஐஹோலேவில் இருக்கும் அத்தனை கோவில்களிலும் இதுவே காலத்தால் முதன்மையானது. இதேபோல் பாதாமியில் இருக்கும் நான்காவது குடைவரையிலும் பத்மாவதியுடன் பார்சவநாதரை பார்க்கலாம். இவை அனைத்துமே கிபி 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதிலிருந்து முற்கால சாளுக்கியர்கள் பலர் யாப்பனியா பிரிவை ஆதரித்து வளர்த்திருப்பது தெளிவாகிறது. மேலும் யாப்பனியா பிரிவை சேர்ந்தவர்களின் பெயர்களில் ‘கீர்த்தி’, ‘நந்தி’ எனும் ஒட்டு அதிகம் இடம்பெற்றிருக்கிறது என்பது கர்நாடகத்தில் ‘யாப்பனியா சங்கா’ என குறிப்பிட்டு வரும் கல்வெட்டிகளிலும் யாப்பனியா இலக்கியங்களை எழுதியவரின் பெயர்களிலும் பயின்று வருவதில் இருந்து புலனாகிறது.
இந்த யாப்பனியா எனும் பெயர் முதன்முதலில் வரும் கல்வெட்டானது கிபி 420ஐ சேர்ந்தது. கடம்ப அரசன் மிருகேஸவர்மன் ஹலசி எனுமிடத்தில் கட்டிய ஜினாலயத்திற்கு நிவந்தங்கள் தரும்போது யாப்பனியர்களுக்கு உணவு வழங்குமாறு குறிப்பிடுகிறான். அவனை தொடர்ந்து அரியணை ஏறிய இரவிவர்மனும் யாப்பனியர்களுக்கு தொடர்ந்து நான்கு மாதங்கள் பூஜையின் போது உணவு வழங்க உத்தரவிடுகிறான். இங்கிருந்து தொடங்கும் யாப்பனியாவின் அரச ஆதரவானது கிபி 14 ஆம் நூற்றாண்டின் இடைபகுதி வரை இருந்துவந்திருக்கிறது எனலாம். ஏனெனில் கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து கிபி 14 ஆம் நூற்றாண்டு வரை ‘யாப்பனியா சங்கா’எனும் கல்வெட்டு தகவலுடன் வரலாற்றை தக்க வைத்திருக்கிறது இந்த பிரிவு.
பொதுவாக ஜைனம் மூன்று சங்கத்தினை குறிப்பிடும். அவை மூல சங்கம், யாப்பனிய சங்கம், திராவிட சங்கம். இவை மூன்றும் ஒரே பிரிவின் வெவ்வேறு சங்கங்கள். ஏனெனில் இதே யாப்பனியர்கள் நிவந்தம் பெறும் கோவில்களில் மூல சங்கம் என்று குறிப்பிட்டு கல்வெட்டுகள் கர்நாடகத்திலேயே கிடைக்கின்றன. அதேபோல் யாப்பனிய சங்கம் என்றும் இதுவரை 20+ கல்வெட்டுகள் கர்நாடகத்தில் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இவை ஒருபுறமிருக்க திராவிட சங்கம் என்பதும் இந்த பிரிவின் ஒரு சங்கம் தான் என இரமேந்திரநாத் நந்தி தனது Religious Institutions and Cults in the Deccan 600 AD – 1000 AD எனும் நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். மேலும் திராவிட சங்கம் என்பது வஜ்ரநந்தி தலைமையில் மதுரையில் கிபி 4 ஆம் நூற்றாண்டிலேயே நடைபெற்றது என கூறுவர். அது தவறு என்பதை ஆதாரத்துடன் சுட்டிகாட்டுகிறார் இரமேந்திரநாத் நந்தி. கிபி 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தர்ஷனசாரா’ எனும் பிராக்கிருத நூலானது வஜ்ரநந்தி நடத்திய திராவிட சங்கத்தினை பற்றி குறிப்பிடுவதாகவும். கிபி 939இல் இந்திரநந்தி என்பவரால் எழுதப்பட்ட ‘ஜ்வாலமாலினி’ எனும் நூலில் இந்நூல் திராவிட சங்கத்தின் ஐந்தாவது தலைமுறை நூல் என குறிப்பிடப்படுவதாலும், ஒரு தலைமுறை என்பது 25-30 ஆண்டுகள் என நிர்ணயித்தால் திராவிட சங்கமானது மதுரையில் கிபி 8 ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது கிபி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ நடைபெற்றிருக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
அதுபோக இந்த திராவிட சங்கத்தில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத நூல்களே என்றும் இரமேந்திரநாத் நந்தி குறிப்பிடுகிறார். திகம்பர சமணர்கள் எப்போதும் யாப்பனியர்களுடன் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனராம்.ஆகையால் இந்த திராவிட சங்கத்தின் மிக முக்கிய காரணிகளாக இரமேந்திரநாத் குறிப்பிடுவது.
1. உணவு பழக்கங்களில் மாற்றங்கள் (சமைத்து உண்பது)
2. விவசாயத்தினை ஊக்குவிப்பது.
3.மடங்களில் வாழ உறுதியேற்பது.
4. திகம்பர ஜைன ஆச்சாரியார்களின் அறிவுரையில் இருந்து தமது சீடரை காப்பது என்பவையாம்.

யாப்பனியர்கள் பேயோட்டுவதில் வல்லவர்களாக விளங்கியுள்ளனர். கிபி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராஜசிம்ம பல்லவனின் மனைவிக்கு பேயோட்டிய ஜைன ஆச்சாரியாருக்காக திருபருத்திகுன்றத்தில் சந்திரபிரபா கோவிலை எழுப்பினார் இராஜசிம்மன் என்பது இதனை மெய்பிக்கும் வரலாற்று தகவல். மேலும் இதுபோன்ற பேயோட்டும் நிகழ்வுகள் பற்றி A.K.சாட்டர்ஜி தனது நூலில் விரிவாகவே எடுத்துரைக்கிறார்.
இவையெல்லாம் தவிர இராஷ்ட்ரகூட அரசர்களின் அவைகளிலும் , கங்கர்களின் அவைகளிலும் கூட யாப்பனியர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் எடுத்து எழுதப்போனால் கட்டுரை நீளும் என்பதால் நான் இக்கட்டுரை எழுத உதவிய புத்தக தரவுகளை மேற்கோள் இடுகிறேன். வேண்டுவோர் மேலதிக தகவலை கீழ்க்கண்ட நூல்களில் இருந்து பெறலாம்.
1. A Comprehensive history of Jainism Vol 1 & 2 by Asim Kumar Chatterjee
2. Jainism in South India and some jaina epigraphs by P.B.Desai
3. History of the Jainas by A.K. Roy
4. Jainism and Karnataka Culture by Sharma
இவ்வாறாக கர்நாடகத்தில் வேரூன்றி வளர்ந்த யாப்பனியா எனும் பிரிவானது தமிழகத்திலும் ஆந்திரத்திலும் கூட பரவியிருந்தது. ஆனால் கிபி 14 ஆம் நூற்றாண்டிற்கு பின் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் யாப்பனியர்களின் கோவில்களில் பலவற்றை திகம்பர ஜைனம் ஆட்கொண்டது. அதன் பின்னர் திகம்பர ஜைனத்திலும் யட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டனர். இப்படியாக யாப்பனிய பிரிவு தென்னிந்தியாவில் சற்று வலுபெற்றிருந்தாலும் திகம்பர ஜைனமும் ஓரளவிற்கு ஆதரவினை பெற்றே விளங்கி வந்தது.
அருமை விக்கி கண்ணன்
புது புது தகவல்கள் எங்களைப்போன்றவர்களுக்கு
மிக்க நன்றி
வரலாற்று பயணம் செய்த அனுபவம்..
கொஞ்சம் கர்நாடகத்தை தெரிந்தவர்களுக்கு இயல்பா புரியும்..
ஆசிவகம் அதற்கு முன்பே இருந்தது அவர்களுடைய படுக்கைகளையே சமண படுக்கையாக சொல்கின்றனர். மேலும் சமண கல்வெட்டுகள் கர்நாடகாவில் 8 ம் நூற்றாண்டுலயே கிடைக்கிறது ஆனால் தமிழகத்தில் அதற்கு முன்பே கிடைக்கிறதே ?
எனது ஜைனம் – பேசப்படும் புராணமும் பேசாத வரலாறும் கட்டுரைக்கு எதிர்மறையான கருத்துக்கள் தான் வரும் என்பதை அறிந்து தான் எழுதினேன். ஏனெனில் இதுவரை சமண படுக்கைகள், தமிழ் இலக்கியங்களில் சமணர்கள், சமணர்களை கழுவேற்றிய சைவர்கள், பார்ப்பனீயத்தை எதிர்த்த சமணர்கள், சமணத்தை ஒழித்த பார்ப்பனர்கள் என சில பத்தாண்டுகளாக இன்றைய அரசியல் சித்தாந்த அடிப்படையில் வரலாறுகள் பேசப்பட்டன. புரிந்துகொள்ளப்பட்டன. அதனால் எளிதில் நமது கருத்தை புரியவைக்க முடியாது என தெரியும்.
முற்காலத்தில் தமிழக படுக்கைகள் அனைத்தும் சமணர்களுக்கானது என சொன்னவர்களில் சிலர் மட்டுமே அதே கருத்தில் இருக்கிறார்கள். பலர் அந்த கருத்தில் இருந்து வெளிவந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் நானுமே அதே கருத்தின் அடிப்படையில் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன்.
அந்த படுக்கைகள் எல்லாம் ஆசீவகம் என எழுதிய நெடுஞ்செழியன் ஐயா அவர்களின் புத்தகத்தையும் படித்திருக்கிறேன். இல்லை. அந்த படுக்கைகள் எல்லாம் இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டது என கூறிவரும் இராசவேலு ஐயா அவர்களின் பேச்சையும் நேரில் கேட்டு அதை விவாதித்தும் இருக்கிறேன். பூங்குன்றன் ஐயா அவர்களும் கூட அது இறந்தவர்களுக்கான படுக்கையாக இருக்கலாம் என்பதை வகுப்பில் ஒருமுறை கூறியிருக்கிறார். இவர்களை தாண்டி சில ஆய்வாளர்கள் இந்த படுக்கைகள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூட கூறியிருக்கிறார்கள். ஏனெனில் சமணம் என கூறவோ, ஆசீவகம் என கூறவோ, இறந்தவர்களுக்கானது என கூறவோ இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
நானும் கூட அந்த படுக்கைகள் சமணர்களுக்கானது இல்லை என்பதை கூறியிருக்கிறேனே தவிர அது யாருக்கானது என்பதை வலியுறுத்தி கூறவில்லை. ஆனால் நிச்சயமாக அது மத குருமார்களுக்காக எடுக்கப்பட்டதாக தான் இருக்க முடியும். ஏனெனில் மழை நீர் புகாத அளவில் குகையின் மேற்புறத்தில் ‘காடி’ எடுத்து மிக அழகாக கற்களை வழவழப்பான முறையில் தேய்த்து ‘சொகுசாக’ இறந்தவர்களுக்கு எடுத்து கொடுக்க வேண்டிய தேவை எந்த அரசனுக்கும்/ வணிகனுக்கும் இல்லை. ஆனால் அது எந்த மதத்தின் ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டது என்பது தான் வரலாறு. அதில் இத்தனை ஆண்டுகளாக சமணம் என சொன்னதற்கு ஆதாரமாக ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டிய நூல்கள் அனைத்தும் மிகமிக பிற்காலத்தில் எழுதப்பட்ட கதைகள். அதுபோக தமிழகம் தவிர்த்து இந்தியாவில் வேறு எங்குமே சமணர்களுக்கு படுக்கைகள் எடுத்து தராத அளவிற்கு மற்ற அரசர்கள் சமணத்தை வஞ்சித்தார்களா? அவ்வளவு ஏன் களப்பிரர்கள் சமணர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் காலத்திலாவது சமணர்களுக்கு படுக்கைகள் இருந்தனவா? சரி அதையும் விடுவோம். கார்வேலன் அதிதீவிர சமணன். அவனாவது படுக்கைகள் எடுத்த தகவல்கள் உண்டா? இவை எதற்குமே பதில் இல்லை. அப்படியே இவையெல்லாம் மீறி தமிழகம் மதசார்பற்ற முறையில் சமணர்களுக்கு படுக்கைகள் எடுத்து தந்ததாகவே வைத்துக்கொள்வோம். உடலை வறுத்தி கடுந்தவம் இருப்பது தானே சமணத்தின் கொள்கை. இங்கு உடல் வறுத்தாமல் இருக்க படுக்கைகள் செய்து கொடுத்தார்கள் எனில் திகம்பர சமணம் அதன் கொள்கையில் இருந்து நழுவியதா?
சரி இவ்வளவு தூரமெல்லாம் கூட வேண்டாம். சைவத்தில் திருஞானசம்பந்தர் 8000 சமணர்களை மதுரையில் கழுவேற்றினார். இச்சம்பவம் நடந்த காலமாக கிபி 630-650 க்குள் என தோராயமாகவே கணக்கிட்டு கொள்வோம். கிபி700 முதல் இதே மதுரையில் இப்போது படுக்கைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் சமண சிற்பங்கள் கிடைக்கிறதே. அப்படியானால் கழுவேற்றப்பட்டவர்கள் யார்? கழுவேற்றிய 50 ஆண்டுகளுக்குள் மதுரை முழுக்க சமணர்கள் குடியேறிவிட்டார்களா?
இந்தமாதிரி பல கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் அது சமண படுக்கையாக இருக்க வாய்ப்பில்லை என்றே எழுதினேன். அதுவும் போக தீர்த்தங்கரர்களுக்கு எப்போதிருந்து, எந்த பிரிவில் யட்சிகள் அல்லது இயக்கிகள் வருகிறார்கள். அவர்கள் இயக்கிகளாக கொண்டுவரப்பட வேண்டிய காரணங்கள் என்ன? என தேடியபொழுது யாப்பனியா எனும் ஒரு அரசு ஆதரவு பெற்று கர்நாடகத்தில் வலுவாக வேரூன்றி இருந்ததால் அதன் பின்னணியிலும் தமிழகத்தில் பிற்காலத்தில் இருந்த சமணத்தை பார்க்க வேண்டிய தேவையுள்ளது.
இதையேதான் நானும் சொல்கிறேன், வற்கடம் ஏற்பட்டால் ஒரு மன்னன் தன் நாட்டு மக்களின் துயர் துடைப்பானா அல்லது மத பெரியோர்களை அழைத்து கொண்டு வேறு நாட்டிற்கு செல்வானா? அதேபோல் சமண படுக்கையிலும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன், என் பார்வையில் அது நோயாளிகளுக்கான படுக்கையாக இருக்கலாம். சமணத்தில் இருந்த இயக்கிகள் போலவே சைவத்தில் கொண்டு வரப்பட்டதின் அவசியம் என்ன ? அம்பிகாவின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒத்து போகிறதே. இது சமணம் பெரிதா,சைவம் பெரிதா என்ற போட்டியில் வந்து இருக்குமா ?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜ கோபுரத்தில் கழுவேற்றம் ஏன் புடைப்பு செய்யப்பட்டது? இது கிருஷ்ண தேவராயர் காலம் வரையும் நம்பப்பட்டுஇருக்கிறதே ?
சமணத்தில் இயக்கிகளை கொண்டுவருவது கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, அதுவும் யாப்பனியா எனும் பிரிவு தான் முதலில் யட்சிகளை குறிப்பிடுகிறது. சைவத்தில் ஏறத்தாழ அதே காலத்தில் காரைக்கால் அம்மையார் வந்துட்டாங்க. முற்கால சாளுக்கியர்களின் சைவ குடைவரைகளிலேயே பேயுரு கொண்ட சிற்பங்களை காணலாம். ஏகாம்பரநாதர் கோவில் கோபுரத்தில் இருக்கும் கழுவேற்ற சிற்பமானது பெருங்குற்றமிழைத்தவர்களுக்கான தண்டனையாக நாயக்கர் காலத்தில் இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. அது சமய கழுவேற்றத்தை குறித்து வரவில்லை.
மிக நன்று. அருமையான கட்டுரை எனது கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தமிழி கல்வெட்டுகளுக்கும் சமணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை 25 ஆண்டுகாலமாக நான் எனது ஆய்வுகளில் சொல்லி வருகிறேன். இது பற்றி ஐராவதம் மகாதேவன் அய்யாவிடம் பலமுறை விவாதித்தும் இருக்கின்றேன்.ஆனால் இங்கிருக்கும் சில கல்வெட்டு ஆய்வாளர்கள் எவ்வித ஆதாரமும் இன்றி ஐராவதம் கருத்தையே முன்மொழிந்து வருகின்றனர். திரு பூங்குன்றன் கூட அன்மையில்தான் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். இங்கிருப்பவை இறந்தவர்களுக்கான படுக்கைகள் இவை பாழி என வழங்கப்பட்டதை தாலாட்டி நடுகல் உறுதி செய்துள்ளது. சமன் சங்கங்கள் குறித்த கல்வெட்டுகள் தொண்டை மண்டலத்தில் தான் கிபி 400 லிருந்து கிடைக்கின்றன. சீடர்கள் பல்லவர் தலைநகர் ஒட்டிய பகுதிகளில் முதலில் வாழ்ந்தனர். இப்பொழுதும வாழ்கின்றனர். எண்ணாயிரம் என்ற ஊரில் கழுவேற்றியதாக சொல்வர். எண்ணாயிரம் வேத கல்லூரி இருந்த இடம் இதில் இருந்த பிராமணர் பிரிவினர் அஷ்டசகஸ்ர கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் எனவே எண்ணாயிரம் என பெயர் வழங்கப்பட்டது. இது சதுர்வேதி மங்கலம். ராஜேந்திர சோழன் காலத்தில் 420 மாணவர்கள் தங்கிப் படித்த கல்லூரி இதற்கும் எண்ணாயிரம் சமணர் கழுவேற்றியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது மிகைபடுத்தப்பட்ட ஒன்று. மேலும் கி. பி 7 ஆம் நூற் சமயம் தமிழகத்தில் பரவலாக வந்துவிட்டது. இதனை வைத்து. கி. மு 300 இல் சமணம் வந்துவிட்டது என சொல்வது தவறு.
சு. இராசவேல்
very interesting reading.I have heard series of lectures by Dr R.H Kulkarni about the badhami chalukyas.
Janism’s influence in Thamilakam.
சிறப்பான வரலாற்று புதிய வெளி ஆவணபதிவு, வாழ்த்துகள், நன்றிகள்