தீபாவளி அல்லது தீப ஒளி அல்லது தீப ஆவளி என பல்வேறு வகையாக இதனை சீர்பிரித்து ஒவ்வொரு வருடமும் பல்வேறு புராணங்கள்/கதைகள்/ தொன்மை மரபுகள் இப்பண்டிகையின் மீது ஏற்றி கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முதலில் பல்வேறு சமய தொடர்புகளுடனும் பின் பிராந்திய மரபுகளுடனும் அதன் நாள் கணக்கீட்டு முறைகளுடனும் புரிந்து கொள்வதோடு அவையனைத்தும் ஒரு புள்ளியில் அடங்கிய சில ஆண்டுகால இந்திய அரசியல் வரலாற்றையும் இணைத்து பார்ப்பது காலத்தின் தேவையாக கருதுகிறேன்.

முதலில் தீபாவளி குறித்த தகவல்கள் ஜைன சமய நம்பிக்கைகளில் இருந்து கிடைக்கிறது. அதாவது மகாவீரர் பாவாபுரி நகரிலே அம்மன்னனின் அரண்மனை வளாகத்தில் மக்களுடன் நீண்ட நேரம் உரையாற்றினார். இரவு நெடுநேரம் இந்த உரையாடல் நிகழ்ந்ததால் மக்கள் அங்கேயே அந்த இரவை கழித்து மறுநாள் காலையில் விழித்தபோது மகாவீரர் பரிநிர்வாண நிலை என்று சொல்லக்கூடிய முக்தி நிலையை அடைந்தார். இச்சம்பவம் கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று விடியலில் நிகழ்ந்ததால் ஜைனர்கள் அந்நாளை ‘தீபாவளிகா‘ என்று கூறுகிறார்கள். இத்தகவலை தரும் ஜைன மூலநூல் Yativrsabha by Tilyapannatti. மகாவீரரின் சொற்பொழிவு இருளை அகற்றி ஞான ஒளியை ஊட்டியதால் அந்நாளினை ‘தீபாவளிகா’ என்கிறார்கள் ஜைனர்கள்.

இதிலும் திகம்பர ஜைனர்கள் அந்நாளில் விளக்கிடுதல், கோவிலில் பிரத்யேக ஆராதனைகள் செய்தல், பலகாரங்கள் படைத்தல் போன்ற நிகழ்வுகளோடு ஒரு சராசரி இந்து சமயங்களின் மரபோடு முடித்துக்கொள்வதாக தெரிகிறது. ஆனால் வட இந்திய பெங்கால்/நேபாள சந்திரமான நாட்காட்டி கொண்டு பார்த்தால் அவர்களின் கார்த்திகை சதுர்தசி October-November ல் வருகிறது. நமது மரபான சூரியமான நாட்காட்டியில் வரும் ‘கார்த்திகை’ November-December ல் வருகிறது. அதாவது சந்திரமான நாட்காட்டி வழி (இவ்வருடம்) March 25ல் உகாதி தொடங்கியது. நமக்கு புத்தாண்டு April 14ல் தொடங்கியதால் இந்த வேறுபாடு. பொதுவாக வடக்கே அமாவாசை தான் கணக்கு. ஆனால் திகம்பர ஜைனர்களாக இருக்கும் தமிழ் ஜைனர்கள், திதி (சதுர்தசி அந்திமம்) கணக்கை பார்ப்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ் ஜைனர்கள் தங்களின் மரபை ஏறத்தாழ கைவிட்டிருக்கிறார்கள் அல்லது இழந்திருக்கிறார்கள். ஏனெனில் வடநாட்டு மரபு வழியே தமிழகத்தில் சூரியமான நாட்காட்டியுடன் குழப்பி ஐப்பசி சதுர்தசியில் அவர்களும் இங்குள்ள இந்துக்களை போலவே கொண்டாடுகிறார்கள் போல.)

ஆனால் ஸ்வேதாம்பர ஜைனர்கள் (பனியா) தீபாவளிக்கு முன்பிருந்து மூன்று நாட்கள் நோன்பிருந்து தங்களது புதிய வருட கணக்கை (Business account) தீபாவளி அன்று தொடங்குகிறார்கள். இவர்கள் வழக்கப்படி மகாவீரர் இந்திரலோகம் சென்றடைந்த கணக்கு தான் தீபாவளி. முக்தியடைந்த நேரம் அல்ல. ஆதலால் திதி கணக்கு இல்லை போலும். கர்நாடகத்தில் மட்டுமே சிறப்பாக மற்றும் தனித்த ஜைன பிரிவாக அறியப்படும் யாப்பனிய ஜைனர்கள் மற்ற இரு பிரிவுகளுக்கும் முரண்பட்ட விவசாய சார்புநிலையிலும் யட்சியை சிறப்பாக முன்னிருத்தும் தாந்த்ரீக வழி மரபாகவும் இருப்பதால் அவர்கள் நோன்பு போன்றவற்றை தவிர்த்தும் அதே சமயம் செல்வம் வேண்டி யட்சியை(லட்சுமி) வழிபடுவதாக தெரிகிறது. கர்நாடகத்தில் கிபி 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராஷ்ட்ரகூட இரண்டாம் கிருஷ்ணனின் Saundatti ஜைன பலகை கல்வெட்டில் தீபாவளியை முன்னிட்டு எண்ணெய் தானம் வழங்கிய தகவல் கிடைக்கிறது. ஆக இது ஒரு மதத்திற்குள்ளாகவே பல்வேறு பிரிவுகளில் அதன் பிராந்திய வேறுபாடுகளில் இருக்கும் மாற்றமும் அவற்றுக்குள்ளான சித்தாந்த முரண்பாடுகளும்.

Saundatti Inscription, Karnataka

இதேபோல் சீக்கியர்கள் தங்களின் ஆறாவது குருவான அர்கோபிந் அவர்கள் தன்னுடன் சேர்த்து 52 இளவரசர்களையும் சிறையில் இருந்து மன்னன் ஜஹாங்கீரால் (கிபி 1619) விடுதலை செய்யப்பட்ட நாளினை பொற்கோவிலில் தீபம் ஏற்றி கொண்டாடுகிறார்கள். ஜைனர்களின் பண்டிகைக்கு வெகு பல நூற்றாண்டுகளுக்கு பின் இந்த சம்பவம் எதேச்சையாக அதேநாளில் நிகழ்ந்ததால் தீபாவளி கொண்டாட்டத்தில் சீக்கியர்கள் பங்கு கொண்டாலும் அவர்களின் மரபும், காரணிகளும் பிராந்தியமும் வேறானது.

வைணவத்தில் பல வகையில் தீபாவளி கதைகள் கூறப்படுகிறது. அதுவும் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அயோத்திக்கு இராமனும் சீதையும் வனவாசம் முடித்து திரும்பியநாள் என்று உபி, மபி,பீகார் போன்ற பகுதிகளிலும், கிருஷ்ணன் நரகாசுரனை வென்ற நாள் என சில வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் தெற்கு பகுதி வைணவ தலங்களில் இத்திருநாள் குறித்து இரு கல்வெட்டுகள் பேசுகிறது. இரண்டுமே 16ஆம் நூற்றாண்டு விஜயநகர துளுவ சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தது. ஒன்று திருப்பதியில் இருக்கும் தமிழ் கல்வெட்டு கிபி 1542ஐ சேர்ந்தது. அதில் தீபாவளி நாளில் பெருமாளுக்கு அதிரசம் (இனிப்பு) படைக்க வேண்டி கூறுகிறது. மற்றொன்று விஜயநகர சதாசிவராயரின் காஞ்சி வரதர் கோவிலில் கிபி 1558ஐ சேர்ந்தது. அதில் 100நாட்கள் திருவிழா நடத்துவதற்காக அக்கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவையும் பட்டியலிடுகிறது. அவற்றுள் கார்த்திகை திருநாள், மார்கழி திருநாள், உகாதி போன்றவற்றில் தீவளிகை என்பதும் ஒன்று. ஆனால் அவ்விரு கல்வெட்டுகளும் தீபாவளி ஐப்பசியில் கொண்டாடப்பட்டதா அல்லது கார்த்திகையில் கொண்டாடப்பட்டதா எனும் தகவலை அளிக்கவில்லை. ஆனால் ஸ்காந்தம் – வைணவகாண்டம் – 9ஆம் அத்தியாயம்தீபாவளியை கார்த்திகை மாதத்தில் தான் குறிப்பிடுகிறது என்கிறார்கள். வைணவ கதைகளில் எதன் பொருட்டு எந்த புராணத்தின் அடிப்படையில் தீவாளிகை சடங்குகள் தென்னகத்தில் நடந்தது என தெரியவில்லை என்றாலும் தென்னக வைணவ தலங்களில் விஜயநகர காலத்தில் பிரசித்தி பெற்ற நாளாக இது அமைந்துள்ளது என்பதை மட்டும் அறியமுடிகிறது.

வங்காளத்தில் கிருஷ்ணன் நரகாசுரனை கொன்றபின் பூதங்களாக அசுரர்கள் வரும் நாளாக சதுர்தசி இரவை இன்று சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதன் தொன்மையான மரபில் பார்த்தால், 14 தலைமுறை மூதாதையர்கள் பூதமாக வருவதாக சாக்த சமய ஐதீகப்படி பெங்காலிகள் நம்புகிறார்கள். இடங்கை தாந்த்ரீக வழக்கப்படி பில்லி/சூனியம் போன்ற அமானுஷ்யங்கள் நிறைந்த கதையை அங்கு கேட்கலாம். இதற்கு பூத சதுர்தசி என்று பெயர். அதாவது அந்த இரவில் பேய்கள்/பூதங்கள் போன்ற உருவங்களில் மூதாதையர்கள் வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்க தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் என கூறப்படுகிறது. (இதனை டாக்குமெண்டரி படமாக எடுக்கிறேன் என கடந்த ஆண்டு ‘Bhoot Chatudashi’ எனும் சுரமொக்கை படத்தை வேறு எடுத்திருந்தார்கள்).

Bengal’s own Halloween: Bhoot Chaturdashi

இதேபோல் வடகிழக்கு மாநிலங்களான ஒரிசா, வங்காளம், அசாம் போன்ற சாக்த சமயம் வலுவுற்ற இடங்களில் காளி முக்கிய தெய்வமாக இந்நாளில் வணங்கப்படுகிறார்கள். ஆனாலும் ஒரிசா, வங்காளத்தில் அவர்களும் நம்மை போன்றே சூரியமான நாட்காட்டி வழி தீபாவளியை குறிப்பதால் அவர்களும் இன்று தங்களது மரபை மாற்றி சந்திரமான நாட்காட்டி வழி கொண்டாடுகிறார்கள் போலும்.

பௌத்த மரபில் தீபாவளி உண்டென அயோத்தி தாசப்பண்டிதர் பாலி நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி, அன்றைய நாளில் ஆமணக்கு எண்ணெய்யில் பௌத்தர்கள் தீபமேற்றியதாக கூறுகிறார். சைவ மரபில் தீபாவளி குறித்து தேடியபோது யாதொரு தரவுகளும் கிடைக்கவில்லை. சிவாகமங்களில் கூட எங்குமே தீபாவளி குறித்த தகவல்கள் கிடைப்பதுபோல் தெரியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக தீபாவளிக்கு சம்மந்தமே இல்லாத வேறொரு தகவல் கிடைக்கிறது. இதனையே தொண்டை மண்டலத்து மக்களும் ஈழத்திலும் பெரும்பாலும் கடைபிடிக்கிறார்கள் என தோன்றுகிறது. கேதார கௌரி விரதம் என்ற பெயரில் புரட்டாசி சுக்லபட்ச அஷ்டமியில் தொடங்கி 21நாள் விரதம் இருந்து அது முடியும் நாள் ஐப்பசி அமாவாசை. இதை சூரியமான நாட்காட்டி கொண்டே இதுநாள் வரை கடைபிடிக்கிறார்கள். அதேநாளில் சந்திரமான நாட்காட்டி வழி தீபாவளி முட்டுவதால் தொண்டைமண்டலத்தில் தீபாவளியை அவர்கள் விருப்பப்படி ஒருநாள் முன்னாடியே வைத்து முடித்துக்கொள்வார்கள். ஆனால் மறுநாள் அதாவது ஐப்பசி அமாவாசை அன்று நோன்பின் இறுதிநாளில் விசேஷமாக பலவகையான பலகாரங்கள் (வீட்டில் செய்தது மட்டுமே) வைத்து கலசத்தில் மண்ணெடுத்து அதில் சிவ லிங்கத்தினை உருவகப்படுத்தி ஐந்து வகை மரங்களின் இலைகளை வைத்து (ஆல,அரச,மா,வில்வ,புன்னை) காலையில் இருந்து நோன்பிருந்து மாலை இருட்டிய பின்னர் படைத்து நோன்பு முடித்து, நோன்பு கயிறு கையில் கட்டுவார்கள். வழக்கமாக 21நாள் செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் ஒரேநாளில் முடித்துவிடுகிறார்கள்.

கேதார கௌரி விரதம்

இதற்கான legend சற்று சுவாரஸ்யமானது. சிவனும் சக்தியும் சேர்ந்திருக்கும் (மாதொருபாகன்) விரதமே கேதாரகௌரி விரதம். கேதாரம் என்பது மலைசார்ந்த வயல் பகுதி. (இமயத்தின் கேதாரத்திலும் மாதொருபாகன் தான் இருந்ததாக சிலம்பு கூறும்). கௌரி என்பது உமை. ஆணுக்கு பெண் சரிநிகர் என்பதாக கூட இதனை புரிந்துக்கொள்ளலாம். சைவத்தை தவிர்த்த வேறு சமயங்களில் ஆணும் பெண்ணும் சமம் எனும் கருத்தோட்டம் இருப்பதாக அறியமுடியவில்லை. காஞ்சி ஏகாம்பரநாதர் தலப்புராணமும் இது தான். இந்த விரதம் குறித்த முழுநீள தகவலை ‘ஸ்காந்தபுராணம் – உபதேச காண்டம் – அத்தியாயம் 31‘ ல் காணலாம். ஆக சைவர்களுக்கு இந்த விரதம் முடியும் நாளில் தீபாவளி வருவதால் இரண்டு விதமான நாட்காட்டிகள் ஒன்றாகியும் ஆகாமலும் இரண்டாங்கெட்டானாக தொக்கி நிற்கிறது.

அதே தமிழகத்தின் தெற்கே பார்த்தால் மூதாதையர் வழிபாடாகவும் தீபாவளியை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆடு, கோழி என அதகளமாக கடக்கிறது இந்த தீபாவளி. ஆக எங்குமே வழக்கமான நரகாசுரன் legend இல்லை. அதேசமயம் தென்னகத்தில் விஜயநகர காலத்திலும் அதற்கு பிந்தைய மராத்திய குடியேற்றத்தாலும் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது. அதே சமயம் கிபி 1753-ஐ சேர்ந்த செப்பேடு ஒன்று திருவாரூர் அருகே சித்தாய்மூர் கோவிலில் கிடைத்திருக்கிறது. அதில் இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடிய தகவல்கள் கிடைக்கின்றன. இதில் ஒரு சிறப்பான தகவல் என்னவென்றால் அந்த செப்பேடு அவ்வாண்டு டிசம்பர் 7ஆம் தேதி எழுதப்பெற்றுள்ளது. கிபி 1753ஆம் ஆண்டு ஆங்கில நாட்காட்டியை புரட்டியதில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அவ்வாண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி நடந்திருக்கிறது. இந்த செப்பேடு கூறும் தீபாவளி என்பது கார்த்திகை தீபமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என ஒருவாறு அறிய முடிகிறது. சைவ கோவிலாக இருப்பதால் அதுவே சாத்தியம் என்றும் புலனாகிறது. ஏனெனில் சைவத்தை குறித்து கேதாரகௌரி நோன்பை சொல்லும் ஸ்காந்தபுராணம் தீபாவளி குறித்து சொல்லாததும், அதே புராணம் வைணவத்தை பற்றி கூறும்போது கார்த்திகை மாத தீபாவளியை சுட்டுவதும் நோக்கத்தக்கது.

மேலும் உலகளாவிய அளவில் தீபமேற்றி வழிபடும் திருநாள் என்பது குளிர்காலத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. அவற்றுள் சில,

1.கிறிஸ்துமஸ் – உலகெங்கும் (Christmas)

2.யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)

3.குவான்சா – ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa – African)

4.செயிண்ட் லூசியா நாள் – சுவீடன் (St. Lucia’s Day – Sweden)

5.ஹாக்மானே – ஸ்காட்லாந்து (Hogmanay – Scotland)

6.தசங்காடய்ங் – மியான்மர் (The Tazaungdaing Festival – Myanmar)

7.செயிண்ட் மார்ட்டின் டே – ஹாலந்து (St. Martin’s Day – Holland)

8.லோய் குர்தாங் – தாய்லாந்து (Loi Krathong – Thailand)

9.லியோன் – ஃபிரான்ஸ்(Lyon – France)

இதுபோல் தமிழருக்கு பழந்தமிழ் இலக்கியங்கள் ஊடே ஆராய்ந்தால் கார்த்திகை விளக்கீடு நாள் தான் தொன்மையானதாக கிடைக்கிறது.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்டதலை நாள் விளக்கின் தகை உடையவாகி,புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-தூதொடு வந்த, மழை” என்கிறார் புலவர் கண்ணங்கூத்தனார் (கார்நாற்பது, 26).

இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்று ஒப்பிடுகிறார்.

அதேபோல் ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ,”கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்” என்று வருகிறது. இது நாம் ஏற்கனவே பார்த்த திகம்பர ஜைன தீபாவளி திருநாளை சுட்டியிருக்கவும் வாய்ப்புண்டு அல்லது பண்டைய தமிழ் வழக்கத்திலும் சுட்டியிருக்கலாம். இதைதொடர்ந்து அகம் -141 வது பாடலில் நக்கீரனார்,

மழை கால் நீங்கிய மாக விசும்பில்குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,பழவிறல்மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர, வருகதில் அம்ம!” என்று பாடுகிறார்.

இதன் விளக்கம் : வானத்தில் மழை இறங்கும் காலும் இல்லை. முழுநிலா தன் உடம்பிலுள்ள களங்கத்தைக் காட்டிக்கொண்டு வானத்தில் கார்த்திகை மீனை நெருங்கும் நள்ளிரவு நேரம்.தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் (பழவிறல்மூதூர் என்பது இன்றைய திருவண்ணாமலை) எல்லாரும் கார்த்திகை விழாக் கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரம் கூடும் நிகழ்வினை மலைபடுகடாம் -10, நற்றிணை-58, புறம்-229 போன்ற பல சங்க இலக்கியங்கள் சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த நாளினை புராண சிறப்பாக ஒப்புமைபடுத்தி பக்தி இலக்கிய காலத்தில்,ஞானசம்பந்தர் தேவாரத்தில் மயிலை பதிகத்தில்,”கார்த்திகை நாள்… விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்” (2-47) என்று பாடுகிறார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?” என்று திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். திருமூலரும், காரைக்கால் அம்மையாரும் இறைவன் இத்தகைய சோதி வடிவம் பெற்றதன் காரணத்தை விதந்தோதுவர்.

திருவண்ணாமலை – கார்த்திகை தீபம்

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலேபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்கஅரனடி தேடி அரற்றுகின் றாரே.முருகப்பெருமான் தீபத்தின் வடிவமாய் இருப்பதாய்,‘தீபமங்களஜோதி நமோநம“- என்ற அடிகள் மூலம் உணர்த்துவார் அருணகிரிநாதர்.

ஆகவே தீபம்+ஆவளி எனும் வரிசையாக விளக்கேற்றும் தமிழர்களுக்கான திருநாள் என்பது தமிழ் இலக்கியம் மற்றும் அதனை அடியொற்றி வந்த சைவ பக்தி இலக்கியம் மற்றும் சீவகசிந்தாமணி போன்ற தமிழ் ஜைன இலக்கியம், ஸ்காந்தபுராணம் போன்ற வடமொழி இலக்கியம், தமிழர்கள் கடைபிடிக்கும் சூரியமான நாட்காட்டி போன்றவைகளில் இருந்து கார்த்திகை நாளே என அறிய முடிகிறது. விஜயநகர காலத்தில் அவர்களது வழக்கப்படி சந்திரமான நாட்காட்டி வழியே அவர்கள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் தீபாவளி நாளில் அளித்த நிவந்தமாகத்தான் திருப்பதி மற்றும் காஞ்சி வரதர் கோவில் கல்வெட்டுகளை பார்க்க முடிகிறது. இவ்வாறு விஜயநகர காலத்திய தீபாவளி நாளினை நாம் இன்று அப்படியே நமது நாட்காட்டியுடன் இணைத்து குழப்பிக்கொண்டாலும் 18ஆம் நூற்றாண்டு வரை தமிழக மக்கள் தெளிவாகவே இருந்துள்ளனர் என்பதும் தீபாவளியின் பெயர்க்காரணம் அறிந்து கார்த்திகை தீபத்தை தீபாவளியாக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதும் திருவாரூர் அடுத்த சித்தாய்மூர் செப்பேடு மூலம் அறியமுடிகிறது.