“நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரம்!
பொதுவாக ‘நமசிவாய’ எனும் சொல் வடமொழி என்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்லை பிரித்துக்கொண்டு பொருள் கூறுவர். ‘நம’ எனும் சொல் வடமொழியில் ‘வணக்கம்’ எனும் பொருள் தரும் என்பர். கிருஷ்ண யஜூர் வேதத்தின் ஶ்ரீருத்ரத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு வரி வரும்.
नमः शिवाय च शिवतराय च
Transliterate: namaḥ: śivāya ca śivatarāya ca
இங்கு வரும் ‘நம:சிவாய‘ எனும் சொல்லானது ‘மங்களகரமானவனுக்கு வணக்கம்‘ என்ற பொருளை தருகிறது. அதாவது வடமொழியில் ‘சிவ’ என்றால் மங்களகரமான என்று பொருள். இப்போது ‘நம:சிவாய’ என்பதை விடுவோம் ‘சிவதராய’ என்று அடுத்ததாக வருகிறதே அதற்கு பொருள் என்ன என்று தேடினாலே முன்னுள்ள ‘நம:சிவாய’ எனும் சொல்லின் பொருளை எளிமையாக அறிந்துக்கொள்ளலாம். இது தவிர்த்து யஜூர் வேதத்தில் இடம்பெறும் ஶ்ரீருத்ரமானது ருத்ரர்களை போற்றி வரும் துதி தான். ருத்ரர்களை தான் ‘மங்களகரமானவன்’ என இந்த வரி கூறுகிறது. வேதத்தை பொறுத்தவரை அதில் ‘சிவன்’ என்ற சொல்லோ அல்லது சைவத்தின் தாரக மந்திரமான பஞ்சாக்கரமோ (ஐந்தெழுத்து) இடம்பெறவில்லை என்பதை உணர்க.

சைவம் ‘நமசிவாய’ என்பதற்கு எவ்வகையான பொருளை வழங்குகிறது என்பதை முதலில் காண்போம். திருமூலர் தான் சைவ சமய குரவர்களில் மூத்தவர் என்பது சித்தாந்திகளின் கருத்து. அவர் திருமந்திரத்தில் மிகத்தெளிவாக ‘ஐந்தெழுத்து’ என இதனை குறிப்பிடுகிறார். அதாவது வடமொழியை பொறுத்தவரை இது ஒரு சொல். ஆகையால் தான் ‘நம’ என்பது வணக்கம் என்றும் ‘சிவ’ என்பது மங்களகரமான என்றும் பொருளை வழங்குகிறது. ஆனால் திருமூலர் இதனை சொல் என்று எங்குமே சுட்டவில்லை. ஐந்தும் தனித்தனி எழுத்து என்று கூறுவதோடு அது வெறும் எழுத்து மட்டுமல்ல அதற்கு பொருளும் உண்டு என ஐந்து எழுத்துக்கும் பொருள் வழங்கியதோடு ஆடல்வல்லானின் திருவுருவத்துடன் இந்த ஐந்து எழுத்தையும் பொருத்தி பாடுகிறார். ஆகவே இது யஜூர் வேதத்தில் வரும் ஒரு சொல் தான் சைவத்தில் எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு இங்கு வேலையே இல்லை.
“ஐம்ப தெழுத்து அனைத்து வேதங்களும் ஐம்ப தெழுத்து அனைத்து ஆகமங்களும் ஐம்ப தெழுத்தின் அடைவை யறிந்தபின் ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே” – திருமந்திரம்
“ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே” – திருமந்திரம்
ஐந்தெழுத்து மந்திரத்தை உடல் உறுப்புகளுடன் பொருத்துவதோடு அதனை ஐந்து பூதங்களுடனும் ஐந்து நிறங்களுடனும் தமிழின் முக்கியமான ஐந்து உயிர் எழுத்துகளுடனும் தொடர்புபடுத்தி விளக்குவர். அது பின்வருமாறு,
கால்கள் – ந கரம் – நடப்பு – நிலம் – உ – சிவப்பு
வயிறு – ம கரம் – மறைப்பு – நீர் – எ – பச்சை
தோள் – சி கரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம்
வாய் – வ கரம் – வனப்பு – விண் – ஒ – கறுப்பு
கண்கள் – ய கரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம்
“ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் கூடும் மகரம் உதரம் வளர் தோள் சிகரம் பகரும் முகம் வா முடி யப்பர்” – உண்மை விளக்கம்
(இதில் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்தை ஆடல்வல்லானின் திருவுருவ அங்கமாக பாடியிருப்பதை காணலாம்)
“பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப்பரிவினொடும் இதத்தெழு மாணி தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்தகதத்தெழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுகஉதைத்தெழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே” -அப்பர் (4.107.2)
“துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்; வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்சஉ தைத்தன அஞ்சு எழுத்துமே” -திருஞானசம்பந்தர்(3.22.1)
“அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே” – சுந்தரர் (7.83.1)
அஞ்செழுத்து என பல இடங்களில் திருமூலரும் பின்வந்த நாயன்மார்களும் சேக்கிழாரும் சிவவாக்கியரும் தெளிவாக தனித்தனி எழுத்தாக பதிவு செய்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவ்வாறாக ஐந்தெழுத்து தமிழ் மரபில் ஊன்றிக்கொண்டது என்பதிருக்க, ஐந்தெழுத்தை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள். அவை பரு ஐந்தெழுத்து (தூல பஞ்சாக்கரம்), நுண் ஐந்தெழுத்து (சூக்கும பஞ்சாக்கரம்), மீநுண் ஐந்தெழுத்து (அதிசூக்கும பஞ்சாக்கரம்), காரண ஐந்தெழுத்து (காரண பஞ்சாக்கரம்), பெருங்காரண ஐந்தெழுத்து (மகாகாரண பஞ்சாக்கரம்) ஆகும்.
எழுத்தோடு சொல்வதென்றால் ‘நமசிவாய’ என்பது பரு ஐந்தெழுத்து; ‘சிவாயநம’ என்பது நுண் ஐந்தெழுத்து, ‘சிவாய’ என்பது மீநுண் ஐந்தெழுத்து, ‘சிவ’ என்பது காரண ஐந்தெழுத்து, ‘சி’ என்பது பெருங்காரண ஐந்தெழுத்து. இந்த ஐந்தெழுத்துக்களும் எவற்றைக் குறித்து நிற்கின்றன என்பதையும் திருமூலரே விளக்குகிறார். இவ்விளக்கத்தையே சைவ சித்தாந்தமும் கூறும்.
சி – சிவன், வ – அருள்/சக்தி, ய – உயிர்/பசு, ந – திரோதானம், ம – மலங்கள்/ ஆணவம்.
“உற்ற குறி அழியும் ஓதுங்கால் பாடைகளில் சற்றும் பொருள் தான் சலியாது மற்றது கேள் ஈசன் அருள் ஆவி எழிலார் திரோதம் மலம் ஆசில் எழுத்து அஞ்சில் அடவாம்” – உண்மை விளக்கம்
இதில் ‘நமசிவாய’ எனும் பரு ஐந்தெழுத்தை விடவும் ‘சிவாயநம’ எனும் நுண் ஐந்தெழுத்தை சிறப்பானதாக சித்தாந்திகள் கூறுவர். ஏனெனில் திரோதானமும் மலமும் முன்னிருக்க பின்னால் சிவனும் அருளும் உயிரும் இருப்பது தவறானது. ஆகவே சிவனையும் அருளையும் முன்னாகவும் உயிரை இடையிலும் மலங்களை பின்னாகவும் இடுவதே சிறப்பு என்பர். ஆகவே ஶ்ரீருத்ரத்தில் வரும் ‘நம:சிவாய’ எனும் சொல்லுக்கு சைவத்தின் பிரமாண நூல்கள் கூறும் ஐந்தெழுத்தை கொண்டு பொருள் கொள்ள முடியாமலும், அதே சமயம் சைவ நூல்கள் கூறாத வேறு பொருளை தரவல்லதாக இருப்பதனாலும் அது ருத்ரர்களை போற்றி பாடும் துதி என்பதாலும் சிவபரத்துவத்தை ஏற்ற சைவர்கள் அதனை பஞ்சாக்கரமாக பொருள் கொள்வது பொருந்தாக்கூற்று. இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டினை கூற இயலும். ‘கேவலம்’ என்கிற சொல்லுக்கு தமிழில் ‘இழிவு’ என்ற பொருளும், சமஸ்கிருதத்தில் ‘தனித்த/உயர்ந்த’ என்ற பொருளும் வழங்கப்படும். ஆதி சங்கரரின் வேதாந்தத்திற்கு ‘கேவலாத்வைதம்’ என்று பெயர். இதனை தமிழில் பொருள் கொண்டால் எவ்வாறு அமையுமோ அதுபோலவே தான் இதுவும்.
வேதத்தில் பதினொரு ருத்திரர்கள் குறிக்கப்படுகிறார்கள். எனவே ருத்ரன் என்பது ஒருவரை குறிப்பதல்ல. அது பல ருத்ரர்களை சேர்த்து குறிப்பது. சிவன் என்பவர் சைவ சமயத்தை பொறுத்தவரையில் ஐந்தொழில் செய்பவர். ருத்ரர்கள் அழித்தல் எனும் ஒரு தொழிலை செய்பவர்கள். வேதத்தில் வேள்விகளை அழிக்காமல் காக்கும் பொருட்டு ருத்ரனை போற்றி துதிக்கிறார்கள். சம்பந்தர் திருமறைக்காட்டு பதிகத்தில் மிகத்தெளிவாக ருத்ரனையும் சிவனையும் தனித்தனியாக பிரித்து பாடுவதோடு பலகோடி ருத்ரர்களை குறிப்பிடுகிறார்.
‘கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றும் தேன்ம் பொழில்சூழ் மறைக்காட்டுறை செல்வாஏனம் கழுகானவர் உன்னை முன் என்கொல்வானம் தலம் மண்டியும் கண்டிலாவாறே’ – சம்பந்தர்(2.37.9)
இப்பாடலில் சிவனை “கோன்” என்று பலகோடி உருத்திரர்கள் போற்றுவதாக கூறுகிறார். சம்பந்தரே உருத்திரர்களையும் சிவனையும் தனித்தனியாக குறிப்பிட்ட பின் ருத்ரனும் சிவனும் எங்ஙனம் ஒன்றாவர்? ருத்ரனை போற்றி பாடும் யஜூர் வேதத்தின் ஶ்ரீருத்ரம் எப்படி ஐந்தெழுத்துக்கானதாக அமையும். வடமொழியில் இருந்து தமிழுக்கு வரும் சொல்லானது இரு மொழியிலும் ஒரு பொருளை குறிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அவ்வாறிருக்க ஶ்ரீருத்ரத்தில் வரும் ‘நம:சிவாய’ என்பது வேறு பொருளையும் திருமுறைகளில் வரும் ‘நமசிவாய’ என்பது தனித்தனி எழுத்தாக வேறு பொருளையும் வழங்கும்போது இரண்டும் எவ்வாறு ஒரு பொருளை தரமுடியும்? இலக்கணப்படியே இது பிழையான கூற்று தானே! ஆகவே வேதத்தில் வரும் சொல்லும் திருமுறைகளில் பயின்று வரும் ஐந்தெழுத்து மந்திரமும் வேறு வேறு என்றறிக.
சிலர் உருத்திரபசுபதி நாயனார் ஸ்ரீருத்திரம் ஓதி முக்திபெற்றதாக கூறி அதனை பஞ்சாக்கரமாக சாதிப்பர். இதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் உருத்திரபசுபதி நாயனார் புராண சூசனத்திலே எழுதியமையை காண்போம்,
“வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது; இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியிற் கூறப்பட்டது. வேதபுருஷனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம். இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்திற் காண்க. இவ்வுருத்திரத்தில் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதல் ஏற்றுக்கெனின்; எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி – யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் – பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி – நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே” என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க. சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓதுக.” என்று வலியுறுத்துகிறார்.