பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டை மண்டலத்தின் பூர்வகுடி அரசர்களா? அல்லது ஆந்திர பகுதியில் இருந்து பிற்காலத்தில் காஞ்சியை கைப்பற்றியவர்களா? அல்லது பார்சியாவில் இருந்து வந்தவர்களா? பல்லவர்கள் பிராமணர்களா? என பலதரப்பட்ட கேள்விகளும் கருதுகோள்களும் இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் விடை காணும் வகையில் இக்கட்டுரை பல்லவர்கள் பற்றிய வரலாற்று தரவுகளை கொண்டு எழுதப்படுகிறது.

பார்சியாவில் இருந்த பஹலவ அரச வம்சத்திற்கும் தமிழகத்தில் இருந்த பல்லவ அரச மரபிற்கும் பெயர் ஒற்றுமையை தவிர்த்து வேறு ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவில்லை. ஒற்றைக்கல் இரதங்கள் எடுப்பித்தவர்கள் பல்லவர்கள். அதேபோல் சிறிய அளவில் பார்சிய மரபும் ஒற்றை கல் கட்டுமானங்களை செய்திருப்பதாக கூறுவர். ஆனால் இந்தியாவில் பல்லவர்கள் மட்டுமே இதனை செய்யவில்லை. பாண்டியர்களும் செய்திருக்கிறார்கள். எல்லோராவிலும் ஒற்றைக்கல் கோவில்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல்லவர்கள் எடுப்பித்ததற்கும் பாண்டியர்கள் எடுப்பித்ததற்கும் ஏறத்தாழ சில ஆண்டுகள் இடைவெளி தான். இவை தவிர்த்து பார்சியாவில் இருந்து பல்லவர்கள் வந்ததற்கான எவ்வித தரவுகளும் இல்லை. காஞ்சி பல்லவர்களை பார்சிய பஹலவ மரபுடன் இணைத்து முதன்முதலில் எழுதிய டாக்டர் ஸ்மித் கூட தனது இரண்டாவது பதிப்பில் இக்கூற்று தவறானது என கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அதேசமயம் பல்லவர்களின் செப்பேடுகளிலும் சில கல்வெட்டுகளிலும் இருந்து அவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது. இதைக்கொண்டு கோத்திரம் என்பதே பிராமணர்களுக்கு மட்டுமானதாக கருத இயலாது. ஏனெனில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை பறவை இனங்களின் மரபினராக அழைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்குள்ளாகவே சிறு இனக்குழுக்களாக பறவை கூட்டங்களை அடியொற்றி பிரிந்திருக்கின்றனர். இந்த ‘பரத்வாஜ‘ என்பதும் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் மைனா குடும்பத்தின் ஒருவகையை சேர்ந்தது. இதனை ‘செம்போத்து‘ என அழைக்கின்றனர். மேலும் சைவ ஆகமத்தில் ஒன்றான ரௌரவ ஆகமத்தின் கிரியா பாதம் 14வது வசனம், பரத்வாஜ ரிஷியை சூத்திரர் என குறிப்பிடுகிறது. இவ்வாறு பரத்வாஜ ரிஷியின் வழிவந்தவர்களாக தங்களை கூறிக்கொண்ட பல்லவர்கள் பிற்காலத்தில் ஹிரண்யகர்பம் போன்ற பிறப்பை தூய்மைசெய்துக்கொள்ளும் வேள்விகள் செய்து தான் சத்திரிய பட்டத்தினை பெற்றனர். ஆகையால் கோத்திரத்தால் மட்டுமே அவர்களை பிராமணர்களாக கருதுவது ஏற்புடையதல்ல. இதேபோல் மூவேந்தர்களும் கோத்திரத்தை குறிப்பிட்டுக்கொண்டுள்ளனர். இது ஒரு மரபுவழியாக தங்களை முன்னிருத்தி கொள்ள செய்யப்பட்டதே ஒழிய இனரீதியான அடையாளங்கள் அல்ல என்பதை உணர்க.
பல்லவர்களின் ஆரம்ப கால செப்புப்பட்டயங்கள் பிராக்கிருத மொழியிலும் பின் சமஸ்கிருதத்திலும் இருப்பது கிபி 3 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் இருந்த பௌத்த-ஜைன மத தாக்கங்கள் தான். இதனை இன்னும் விரிவாக புரிந்து கொள்ள பௌத்த மத பரவலையும் அதன் பிரிவுகளையும் மேலோட்டமாக புரிந்து கொள்வது அவசியம். அசோகனது காலத்திலேயே இந்திய துணைக் கண்டம் முழுவதும் பௌத்தம் பரவியது அறிந்த ஒன்றே. எனினும் மௌரிய பேரரசுக்கு பின்னான காலத்தில் பௌத்த மதம் இரண்டாக பிரிந்தது. அதில் மகாயாண பௌத்த சமயமானது தென்னிந்தியாவில் குறிப்பாக நாகர்ஜூனகொண்டா, அமராவதி போன்ற இடங்களில் தான் தோன்றியது. கிபி முதலாம் நூற்றாண்டிலேயே பரவலாக அறியப்பட்ட இந்த மகாயாண பௌத்தமானது அடுத்த இரு நூற்றாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி கிழக்காசிய, தென்கிழக்காசிய போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இதன் தொடர்ச்சியாக தான் பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீனப்பயணிகள் இந்தியாவை நோக்கி பயணித்தனர். அதிலும் குறிப்பாக பாஹியான் சமஸ்கிருதம் கற்கவும் திரிபிடகத்தை படியெடுக்கவும் தான் சீனாவில் இருந்து பயணப்பட்டதாக தனது குறிப்பில் தெரிவிக்கிறார். பௌத்த சமய வளர்ச்சியில் சமஸ்கிருதம் முக்கிய பங்கு வகித்தது என்பதை மறுத்துவிட முடியாது. இதன் தாக்கத்தில் தான் இந்தியா முழுவதுக்குமான பொது மொழியாக சமஸ்கிருதம் பரவத்தொடங்கியது. ஆகையால் தான் வேதமே சமஸ்கிருதத்தில் எழுதிக்கொள்ளப்பட்டது. வேதத்தினை ஏற்ற சமயங்களும் சரி, வேத எதிர்ப்பினை பதிவு செய்த சமயங்களும் சரி சமஸ்கிருதத்தை பொதுவாக ஏற்றனர். அதன் காரணம் பாலி, பிராக்கிருதம், தமிழ் போன்ற பல மொழிகளின் கலப்பில் சமைக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம். அது தனித்து உருவாக்கப்பட்டதல்ல.
இதை அறிந்துக்கொண்டாலே பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருத மொழிகளை பயன்படுத்தியதன் பின்னணியும் பிற்காலத்தில் சோழர்களும் பாண்டியர்களும் கூட சமஸ்கிருதத்தில் பட்டங்களை வைத்துக்கொண்ட காரணங்களும் எளிதில் புலப்படும். சமஸ்கிருதம் பலதரப்பட்ட சமயங்களின் பொதுவான மொழியாக இருந்ததாலும் அன்றைய காலத்தில் இந்தியா முழுவதுக்குமான பொதுவான மொழியாக இருந்ததாலும், அன்று வணிகம் முக்கிய பங்கு வகித்ததாலும் அரசு மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில் வியப்பில்லை.

பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனும் கருத்து தான் மிக வலுவாக திணிக்கப்பட்ட ஒன்று. காரணம் பல்லவர்களின் ஆரம்ப கால செப்பேடுகளாக அறியப்படும் மயிடவோலு செப்பேடும், ஹிரஹடகள்ளி செப்பேடுகள் ஆந்திரப்பகுதியில் கிடைத்தது தான். முதல் பல்லவ அரசனான சிவஸ்கந்தவர்மனது காலத்தியதாக (கிபி 275-300) இவை அறியப்படுகிறது. இந்த செப்பேடுகள் கிடைத்தது ஆந்திரப்பகுதியாக இருக்கலாம். ஆனால் அந்த செப்பேட்டிலேயே அது காஞ்சியில் இருந்து வழங்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. ஆகவே பல்லவர்கள் காஞ்சியை பிற்காலத்தில் தான் கைப்பற்றினார்கள் எனும் கருத்தானது ஆதாரமற்ற கருதுகோள் என அறிக.
அதுமட்டுமின்றி தொடக்க கால செப்பேடுகளில் இருந்து இதுவரை மூன்று ஊர்களின் பெயர்கள் தான் நமக்கு கிடைத்திருக்கிறது. அதில் சிவஸ்கந்தவர்மன் காலத்தியதாக அறியப்படும் செப்பேடுகள் காஞ்சியில் இருந்து வழங்கப்பட்டிருக்கின்றன. வீரகூர்ச்ச பல்லவனின் பேரனான எனும் தகவல் மட்டும் கிடைத்த ஒரேயொரு ஏடு மட்டுமே கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டில் அது தசனபுரா எனும் இடத்தில் இருந்து வழங்கப்பட்டதாக குறிக்கிறது. இது தெற்கு மைசூர் பகுதியாக இருக்கலாம் என்பது ஹூல்ஸ் அவர்களின் கருத்து. அதேசமயம் சிம்மவர்ம பல்லவனின் செப்பேட்டில் பாலக்காடா எனும் இடத்தில் இருந்து அது வழங்கப்பட்டதாக கிடைக்கிறது. இது கேரளத்தின் பாலக்காடு என சிலர் கருதினாலும் அது சென்னையை அடுத்த பழவேற்காடு என டாக்டர் புர்னெல் தெரிவித்திருக்கிறார். (South indian paleography, second edition,page 36 ல் காண்க)

இதில் எந்தவொரு செப்பேடும் ஆந்திரப்பகுதியில் இருந்து வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை எனினும் பல தொடக்க கால பல்லவர் செப்பேடுகள் ஆந்திரப்பகுதிகளில் கிடைத்திருக்கிறது. இதனால் சாதவாகன பேரரசு வலிமைக்குன்றிய சமயத்தில் பல்லவர்கள் ஆந்திர பகுதியையும் உள்ளடக்கிய பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்திருக்கின்றனர் என அறியமுடிகிறது. இது செப்பேடுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் செய்தி.
குப்த பேரரசில் வலிமையான அரசனாக அறியப்படும் சமுத்திர குப்தன் (கிபி 335-375) தனது அலகாபாத் தூண் கல்வெட்டில், தான் வெற்றிக்கொண்ட மன்னர்களைப்பற்றி குறிப்பிடும்போது அக்கல்வெட்டின் 19வது வரியில் காஞ்சியை ஆட்சி செய்த பல்லவ விஷ்ணுகோபனை (Kancheyaka Vishnugopa) வென்றதாக குறிப்பிடுகிறான். இதிலிருந்து சமுத்திரகுப்தன் காலத்திலும் பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியதை அறியலாம். ஆகவே ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் தான் பல்லவர்கள் என்பதற்கு இதுவரை எந்தவிதமான சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அதேசமயம் சாதவாகனர்களின் கீழ் சிலகாலம் சிற்றரசாக பல்லவர்கள் விளங்கியிருக்ககூடும் என்பதற்கு காஞ்சியில் கிடைத்த சாதவாகனர்களின் காசுகளே சான்று. தொடக்க கால பல்லவன் முதல் அதன்பின் தொடர்ச்சியாக பல்லவர்கள் காஞ்சியினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருப்பது வரலாற்று சுவடுகளின் மூலம் அறியமுடியும் செய்தி.
இதேபோல் மற்றொரு கல்வெட்டு சான்று திருக்கழுக்குன்றம் கோவிலில் கிடைக்கிறது. அது ஆதித்த சோழனின் காலத்தியது. அதில் பூர்வ ராஜாக்களான ஸ்கந்தசிஸ்யனின் தானத்தையும் வாதாபி கொண்ட நரசிம்மனது தானத்தையும் தனது காலத்திலும் அப்படியே தொடரும்படியாக உத்தரவு பிறப்பித்த தகவல் கிடைக்கிறது. இதில் வாதாபி கொண்ட நரசிம்மனது காலத்துக்கும் (கிபி 630-660) முந்தையதாக ஸ்கந்தசிஸ்யன் எனும் அரசனது பெயர் கிடைக்கிறது. இந்த ஸ்கந்தசிஸ்யன் என்பவர் சிவஸ்கந்தவர்மனாக இருக்கலாம் என்றும் அல்லது பின்வந்த ஸ்கந்தவர்மர்களில் ஒருவராக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதிலிருந்து மகேந்திரவர்ம பல்லவனின் தந்தையான சிம்மவிஷ்ணுவிற்கு முன்பே பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருப்பதை அறியமுடிகிறது.
இதேபோல் பல்லவர் காலத்திற்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த சிற்பத்தொகுதி ஒன்று தொண்டை மண்டல பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. அந்த சிற்பத்தொகுதி மகேந்திரவர்மனின் காலத்திற்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்பது வரலாற்றாளர் திரு நாகசாமி அவர்களின் கருத்து. இதுகுறித்த மேலதிக தகவலுக்கு Damilika Vol 1 இல் காண்க. இந்த சிற்பத்தொகுதியானது காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற இடங்களிலும் தெற்கு ஆந்திரத்தில் சில பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டும் பல்லவர்கள் வலிமைபெறுவதற்கு முன்பே காஞ்சியையும் காஞ்சியை சுற்றிய பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

பல்லவர்களை வரலாற்று காலத்தில் திரமிள (அல்லது) திராவிட என்றழைக்கும் மரபு இருந்திருக்கலாமோ என்று கருதவும் சில சான்றுகள் கிடைக்கின்றன. பொதுவாக திரமிள என்பது பாலி மொழியில் தமிழர்களை குறிக்கும் சொல். அதுவே பின்னாளில் சமஸ்கிருத வழக்கில் திராவிட என்றானது என்பர். பல்லவர்களின் பரம எதிரியான சாளுக்கிய அரசர்களின் செப்பேடுகளில் திரமிளனை வென்றேன் எனும் குறிப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன. இது பல்லவர்கள் தவிர்த்து வேறு யாரும் இருக்க வாய்ப்புகள் குறைவு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சீனப்பயணி யுவாங் சுவானின் பயணக்குறிப்பில் காஞ்சிபுரத்தை திராவிட தேசத்தின் தலைநகரம் என குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவை அல்லாது இடைக்கால பாண்டிய செப்பேடு ஒன்றில் வடமொழி பகுதியில் திரமிளாபரணன் எனும் பெயரை தமிழ்ப்புலவன் ஒருவனை குறித்துவிட்டு அதே செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனை பாண்டியர் கால செப்பேடுகள் by மு.இராஜேந்திரன் அவர்களின் நூலில் காணலாம்.
சாளுக்கிய அரசனான மங்களேசனின் மஹாகுடா தூண் கல்வெட்டில் தனது முன்னவரான முதலாம் கீர்த்திவர்மனின் வெற்றிகளை பற்றி குறிப்பிடும்போது அவன் அங்க,வங்க,மகத, கேரள, சோழிய, மூஷிக, பாண்டிய, த்ரமிள நாட்டினை வெற்றி பெற்றதாக குறிப்பிடுகிறான். இதில் வரும் த்ரமிள என்பது பல்லவனை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை என்பது பல அறிஞர்களின் கூற்று. ஏனெனில் முதலாம் கீர்த்திவர்மனின் காலத்தில் சிம்மவிஷ்ணுவோ அல்லது அவனின் தந்தையோ தான் இங்கு ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். ஆகையால் சாளுக்கிய-பல்லவ சண்டைகள் கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து பார்க்கும் போது பல்லவர்கள் தமிழகத்தின் பூர்வகுடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் தொண்டைமான் இளந்திரையனின் வழி வந்தவர்களாக இருக்கவும் சாத்தியக்கூறுகள் உண்டு. மானுடவியல் ஆய்வின் படி பல்லவர்கள் குறும்பர் இன பழங்குடிகள் எனவும் ஒரு கருத்துண்டு. சமண இலக்கியங்கள் சில பல்லவர்களை கள்வர்கள் என குறிப்பிடுவதைக்கொண்டு பல்லவர்கள் பழங்குடிகளாக இருந்திருக்கலாம் என்பது வரலாற்றாளர் திரு பூங்குன்றன் அவர்களின் கருத்து.
இதில் வாதாபி கொண்ட நரசிம்மனது காலத்துக்கும் (கிபி 630-660) முந்தையதாக ஸ்கந்தசிஸ்யன் எனும் அரசனது பெயர் கிடைக்கிறது. இந்த ஸ்கந்தசிஸ்யன் என்பவர் சிவஸ்கந்தவர்மனாக இருக்கலாம் என்றும் அல்லது பின்வந்த ஸ்கந்தவர்மர்களில் ஒருவராக இருக்கலாம் என்றும் தெரிகிறது. //
தமிழக வரலாறு_மக்களும் பண்பாடும் நூலில் 192 பக்கத்தில் இருவரும் ஒருவரே என குறிக்கப்பட்டுள்ளது.
காலம் கி.பி 350_375 ஆக குறிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கல்வெட்டில் பூர்வராஜாக்கள் என பன்மையில் தான் குறிக்கப்பட்டுள்ளது. ஒருவராக இரும்பின் ஒருமையில் குறித்திருக்கலாம். அதுபோக ஒருவராக இருப்பின் ஸ்கந்தசிஸ்யன் என்ற பெயரையும் அதன் தொடர்ச்சியாக வாதாபி கொண்டான் எனும் பெயரையும் தனித்தனியாக தானம் அளித்தவாறு குறிப்பிடத்தேவையில்லை.
So the complexity regarding the origin of Pallavas remains unsolved.
Yeah! But this article discussed about the old interpretations and make a new path to do more on this.
தெளிவான பதிவு. இருப்பினும் பல்லவர்கள் வட தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
1) தலைநகர் காஞ்சி ஆய்வு அருமை.
2) பல்லவர்கள் குறும்பரும் இல்லை கள்வர்களும் இல்லை. பல்லவர்கள் காடவர் காடவராயர்கள் குறுப்பர் கள்வர் என்பது திரிபு
3) 100% பல்லவர்கள் பிராமணரோ பகலவரோ அல்ல.
Sir
Good Article and different one. Still more clarity will come if you have taken some inputs of clash between Kalapirar’s and Pallavas.
Pleasr try
Buddhism was written in Pali Language. Vedas , Upanishads , Ramayana and many Epics were written in Sanskrit language. Sanskrit was far far earlier to Budhhist text in Pali & Jain text in prakrith. The writer is confusing and misleading people between Language & Scripts.
Poorly written article. Pallavas neither can and sanskrit was never a national language just bcoz there was no nation called India.
As they had their origins as workers under the administration of sathvahanas they had a huge dependence on Brahmins who did the damage by spreading castism & sanskrit.
Traders were never considered as suthra & suthra was never a lower caste until pallavas arrived they were made so by the Brahmins in due to their lust for land.
The author should work before writing such articles.