பிராமணர்கள் என்போர் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தான் வேதம், சாஸ்திரம் போன்றவற்றை பயின்று கடவுளின் நேரடி சேவகர்கள் என்றும் பொதுவாக அறியப்படுகிறார்கள். இந்த வர்ணாசிரம தர்மத்தினால் பாதிக்கப்பட்ட பிற சமூகங்கள் பௌத்தம், சமணம் முதலான அவைதீக சமயங்களை சார்ந்து தங்களின் சுயமரியாதையை நிலைநாட்டிக்கொண்டனர் என்பர். ஆனால் வரலாற்று காலத்தில் பிராமணர்களே இவ்வாறு இந்து மதத்தின் மீது நம்பிக்கையற்று பிற மதங்களை தழுவிய வரலாறுகள் உண்டு. அப்படியாக கிபி 9 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பிராமணர்கள் சிலர் பௌத்தம் தழுவிய வரலாற்றினை இக்கட்டுரை விவரிக்கிறது.

Avalokiteshvara bronze – Kurkihar

தமிழகத்தில் கிபி 100 முதல் கிபி 600 வரை அவைதீக மதங்களான பௌத்தமும் சமணமும் செழித்திருந்தது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அதிலும் தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் பௌத்தம் செழித்து நின்றது என்பதை மணிமேகலை முதலான காப்பியங்களின் மூலமும் சீனப்பயணி யுவான் சுவாங் போன்றோரின் குறிப்புகளில் இருந்தும் சீனாவில் கடவுளாக போற்றப்படும் பல்லவ இளவலான போதிதர்மரின் மூலமும் அறியலாம். இவை தவிர்த்து நாளாந்தா பல்கலைக்கழகத்தில் உயர்பதவியில் இருந்த தர்மபாலர் போன்றோர் பிறந்த ஊர் காஞ்சி. அந்தளவுக்கு பௌத்தம் இங்கு செழித்து வளர்ந்திருந்தாலும் இங்கிருந்த பௌத்த சமய பிரிவு எது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக அமைகிறது. இதனையும் இணைத்தே இக்கட்டுரை விவரிக்கயிருக்கிறது.

பௌத்தத்தில் ஹீனயானம் அல்லது தேரவாத பௌத்தம் என்றும் மகாயான பௌத்தம் என்றும் இருவகை பிரிவுகள் உண்டு. அதில் புத்தரின் நெறிகளை அப்படியே பின்பற்றுவது தேரவாத பௌத்தம் என்றும் பல மாற்றங்களுடன் பின்பற்றியது மகாயானம் என்றும் கூறுவர். இவ்வாறு பௌத்த சமயமானது அசோகன் காலத்திலேயே இரண்டாக உடைந்தபோது அசோகனே அதனை சமாதானம் செய்து பௌத்த சங்கத்தினை நிறுவினான் என அவனது ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. அசோகனுக்கு பிறகு அந்த ஒற்றுமை நீடிக்கவில்லை. மகாயான பௌத்தமாக தனித்து அது முதன்முதலில் பிரகடனப்படுத்திக்கொண்டது தென்னிந்தியாவில் தான். அதுவும் ஆந்திரத்தின் நாகர்ஜூனகொண்டாவில் தான். ஏறத்தாழ கிபி முதல் நூற்றாண்டில் நாகர்ஜூனர் எனும் பிராமணர் தான் மகாயான பௌத்தத்தை தோற்றுவித்ததாக கூறுவர். இந்த மகாயான பௌத்தமானது தாந்த்ரீக பௌத்தமாக வளர்கிறது. இதில் தான் தாராதேவி, காலா, ஏழு அண்ணன்மார் கதைகள், மணிமேகலா தெய்வம் போன்ற சிறுதெய்வ தொன்மங்கள் தென்னிந்திய மரபில் இருந்து எடுத்து பௌத்தத்தில் இணைக்கப்பட்டன. தேரவாத/ஹீனயான பௌத்தமானது சிறுதெய்வங்களை வெகுபிற்காலத்தில் தான் இணைத்தன. இந்த மகாயான பௌத்தத்தில் இருந்து தனியே கிளைத்தது தான் வஜ்ராயன பௌத்தம். இது முழுக்க முழுக்க தாந்த்ரீக சடங்குகளை கொண்டது. பழங்குடி தொன்மங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு பௌத்தத்தை பெயரளவில் கொண்டு நிற்கும். இந்த வஜ்ரயான பௌத்த மரபுகளை ஒரிசா, வங்காளம் போன்ற வடகிழக்கு இந்தியாவில் காணலாம்.

As per Mahayana – Future Buddha – Maîtreya

மகாயான பௌத்தத்தை பொறுத்தவரையில் அடுத்து பிறக்கப்போகும் புத்தரின் பெயர் மைத்ரேயர் என்றும் அவர் பீகார் அருகேயுள்ள குக்குடபாத (Cock’s Foot hill)மலையில் தான் தோன்றுவார் என்பதும் அவர்களின் ஐதீகம். இவற்றை பற்றி சீனப்பயணிகளான பாஹியான் மற்றும் யுவான் சுவாங் முதலியோர் குறிப்பிட்டிருப்பர். மகாகாஷ்யபர் வருங்கால புத்தருக்காக காத்திருந்து உயிர்நீத்த இடமாக இந்த மலையினை கூறுவர். கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஐதீகம் இருந்து வந்திருக்கிறது என்பதை பாஹியான் குறிப்பில் இருந்து அறியலாம். இவ்விரு சீனப்பயணிகளுமே மகாயான பௌத்தத்தை சேர்ந்தவர்களே என்றாலும் ஹீனயான பௌத்தம் இருந்த இடங்களை பற்றியும் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பர்.

ஆம்! தென்கிழக்காசியா முழுக்க பரவியது மகாயான பௌத்தமே! இதனால் தான் தென்னிந்தியாவிற்கும் (குறிப்பாக தொண்டை மண்டலம்) தென்கிழக்காசியாவிற்குமான வர்த்தக தொடர்புகள் பல வேரூன்றியதோ என்னவோ! தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் மகாயான பௌத்தத்தின் தாக்கத்தை அதிகம் காணலாம். மணிமேகலையும் தனது கடைசி காலத்தை காஞ்சியில் கழித்ததாக காப்பியம் கூறும். சீனாவிலும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் மகாயான பௌத்தம் தான் அதிகளவில் பரவியது. இன்றுவரையிலும் அதுவே நிலைத்துவிட்டது. நிற்க!

Standing Buddha in Abayamudra – Kurkihardonated by Kanchi Monk

காஞ்சியில் இருந்தது மகாயான பௌத்தம் என்பதை மேலும் வலுவாக கூறவும் சான்றுகள் இல்லாமல் இல்லை. யுவான் சுவாங் தனது பயணக்குறிப்பில் காஞ்சியில் இருந்து நாளாந்தா சென்று அங்கு புகழ்பெற்ற ஆசிரியராக இருந்த தர்மபாலர் பற்றி கூறுகிறார். கிபி 7ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் இயற்றிய நாடக நூலான ‘மத்தவிலாச அங்கத’த்தில் காஞ்சியில் இருந்த பௌத்த துறவியின் செயல்பாடுகளை விவரிக்கிறார். இவை தாண்டி கிபி 13 -14 ஆம் நூற்றாண்டு வரையிலும் காஞ்சியில் பௌத்தம் செழித்த தரவுகள் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து கிடைக்கிறது. அவற்றை இங்கு பார்ப்போம்.

1.பர்மாவின் பெகு நகரத்திலுள்ள ஜைங்காங்கின் (Zaingganging) கல்யாணி கல்வெட்டில் பெகுவை ஆண்ட மன்னனான தம்மசெட்டி (கிபி 1472-92) என்பவன் பாலி திரிபிடகத்தில் புலமையுடைய காஞ்சியை சேர்ந்த அனந்த தேரர் (died in 1245)என்பவர் பர்மாவின் புகாமாவிற்கு வந்ததை பதிவுசெய்கிறான்.

2. ஜாவாவை சேர்ந்த புலவர் (கிபி 1362) ஒருவர் காஞ்சியை சேர்ந்த பௌத்த துறவிகள் ஜாவாவில் ஆறு பௌத்த விகாரைகளில் தங்கியிருந்த தகவலை தருகிறார்.

3. கிபி 1378ஐ சேர்ந்த கொரிய கல்வெட்டொன்று தயானபத்ரா எனும் பௌத்த துறவி காஞ்சியை அடைந்தபோது அவர் உள்ளூர் பௌத்த சான்றோர்களின் சொற்பொழிவை கேட்டதாக பதிவுசெய்கிறது.

Seated buddha in Bhumisparsa mudra – KurkiharDonated by Kanchi monk

இவ்வாறு காஞ்சியில் கிபி 14 ஆம் நூற்றாண்டு வரையில் பௌத்தம் செழித்த தரவுகள் கிடைத்தாலும் இன்றைய காஞ்சியில் பௌத்த விகாரைகள் எங்குமே காணப்படாதது சற்று ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனாலும் காஞ்சியிலும் காஞ்சியை சுற்றிய பல பகுதிகளிலும் புத்தர் சிலைகள் பல கிடைத்திருக்கிறது. காமாட்சி அம்மன் கோவிலினுள்ளே பெரிய புத்தர் சிலையொன்று கிடைத்தது. அது கிபி 7-8 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பர். மேலும் கிடைத்த பல புத்தர் சிலைகளும் முறையே கிபி 8 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை காலம் கணிக்கப்பட்டுள்ளது.

காஞ்சியில் இருந்து பல பௌத்த துறவிகள் மகத நாட்டின் ‘புத்தகயா’ சென்றுவந்த வரலாறுகள் உண்டு. இந்த புத்தகயாவிற்கு அருகில் உள்ள மலை தான் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மைத்ரேயர் தோன்றப்போகும் இடமாக கருதப்படும் குக்குடபாத மலை. இங்கு 1848ல் ஆங்கிலேய அதிகாரியான Major Kittoe என்பவர் சில பொருட்களை கண்டெடுத்தார். அவை பத்து மாட்டுவண்டிகளில் அள்ளப்பட்டு கல்கத்தா அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவை அனைத்தும் பௌத்த சிலைகளும் தாந்த்ரீக சடங்குகள் தொடர்பான பொருட்களும் தானாம்.

இந்த குக்குடபாத மலை தற்போது குர்கிஹார் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. மீண்டும் 1930களில் இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் வேறு காரணங்களுக்காக தோண்டியபோது செங்கல் கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன. உடனே அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தபோது மொத்தம் 226 உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 150 புத்தர் சிலைகள். ஒவ்வொரு சிலைகளும் கலைநயத்துடன் அருமையாக வடிக்கப்பட்டிருப்பதை கண்டு வியந்துபோயிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இங்கு உலோக ஆலையே இருந்திருக்க வேண்டும் என கணித்திருக்கிறார்கள். எட்டு சிலைகளில் கிடைத்த எழுத்து பொறிப்புகளில் இருந்து இந்த சிலைகள் பாலா சாம்ராஜ்ஜியத்தினை ஆண்ட தேவபாலா, இராஜ்யபாலா, முதலாம் மகிபாலா, மூன்றாம் விக்ரகபாலா காலத்தினை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

Seated crowned buddha in Bhumisparsa mudra – Kurkihar – Donated by kanchi monk

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் 15 புத்தர் சிலைகளும் மூன்று பெரிய மணிகளும் காஞ்சியை சேர்ந்த பௌத்த துறவிகளால் வழங்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டின் மூலம் அறியப்பட்ட தகவல். இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் கௌடிய எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களின் காலம் கிபி 9 முதல் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. மகத நாட்டில் தமிழ் அறிந்திருக்கப்படாததால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என இக்கல்வெட்டினை ஆய்வு செய்த பானர்ஜி-சாஸ்திரி போன்றோர் தெரிவித்திருக்கிறார்கள். மொத்தம் கிடைத்த 93 கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டில் கூட குக்குடபாத விகாரை என்று இல்லை ஆனால் அபநாக விகாரை (To know more about this vihara see bibliography no 3) என குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதில் காஞ்சி பௌத்த துறவிகள் பற்றிய செய்திகளை மட்டும் தனியே காண்போம்.

1. பிக்ஷு அமிர்தவர்மன் – அர்கில கிராமம், காஞ்சி தேசம் – standing buddha – 11ஆம் நூற்றாண்டு.

2. காஞ்சி பிக்ஷு வீர்யவர்மன் – two standing buddhas – 9 ஆம் நூற்றாண்டு

3.காஞ்சி-நாகேந்திரவர்மன் – 9ஆம் நூற்றாண்டு

4. காஞ்சி ஸ்தவீர புத்தவர்மன் & ஸ்தவீர தர்மவர்மன் – நின்ற புத்தர் – 10 ஆம் நூற்றாண்டு

5. காஞ்சி சந்திரவர்மன் – 10 ஆம் நூற்றாண்டு – Bhumisparsa Mudra

6. காஞ்சி இராகுலவர்மன் – 10 ஆம் நூற்றாண்டு – Crowned buddha in Bhumisparsa Mudra

7. காஞ்சி பிரபாகரசிம்ஹா – 10ஆம் நூற்றாண்டு – Crowned buddha seated and standing tara.

8. காஞ்சி ஸ்தவீர மஞ்சுஶ்ரீவர்மன் – 11 ஆம் நூற்றாண்டு – Seated Lokanatha(?)

9. காஞ்சி துட்டசிம்ஹா – 10ஆம் நூற்றாண்டு – standing tara.

10. ஸ்தவீர வைரோசனசிம்ஹனின் சிஷ்யனான பிரஜ்னசிம்ஹா – 10 ஆம் நூற்றாண்டு – Naga pedestal of buddha (missing one but representation of this image is given below). [இந்த கல்வெட்டு தான் பௌத்தம் தழுவிய பிராமணரை பற்றி விரிவாக கூறுகிறது. இதனை தனியே பார்ப்போம்.]

11. காஞ்சி ஸ்தவீர அவலோகிதசிம்ஹா – 10ஆம் நூற்றாண்டு – கேரளதேசா எனும் வார்த்தை இதில் பயின்றுவருகிறது.

12. சாக்யபிக்ஷு ஸ்தவீர மஹாயாணயாயி புத்தஞான – 10 ஆம் நூற்றாண்டு – இவர் காஞ்சி மண்டலத்தில் தோன்றியதாக கூறுகிறது இக்கல்வெட்டு.

13. காஞ்சி ஸ்தவீர புத்தவர்மன் – 10 ஆம் நூற்றாண்டு -donated Bells and festoons. Same person we already seened above.

Crowned buddha – Pala style – Kurkihar

ஆக இதுதான் குக்குடபாத மலையில் கிடைத்த காஞ்சியை சேர்ந்த பௌத்த துறவிகள் பற்றிய தரவுகள். இவற்றுள் ஒரு முக்கியமான கல்வெட்டு குறித்து விரிவாக பார்ப்போம் என கூறியிருந்தோம் அல்லவா அதனை இங்கு காண்போம்.

“இராஜ்யபாலா எனும் அரசனின் 28வது ஆட்சியாண்டின் 8வது நாளில் விஷாக நட்சத்திரத்தன்று இந்த சிலையினை தானமாக கொடுத்தவன் காஞ்சியில் இருக்கும் ஒரு கிராமமான நரசிம்ம சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்தவன், வேதம், வேதாங்கம் முதலியவைகளை கற்று பின் ஸ்தவீர வைரோசனசிம்ஹனின் சிஷ்யனாக சேர்ந்த பிரஜ்னசிம்ஹன் என்பவனாவான்” இக்கல்வெட்டின் english transliteration பின்வருமாறு,

  1. Siddham (symbol)/’śrīmat Kāñchim= alamkurvann=asti grāmaḥ satām matah/ Narasimha-chaturvedi-mangal-ākhyo mahiyasām//dvijānām=ālayo ramyo veda vedānga-
  2. vedinām/ tatra vipr-ānvaye ‘suddhe labdha- janmā gun-ānvitah// Yo Vairocana Simhasya sthavirasya gun-odadheh/ Prajñāsimha iti khyātaḥ sisyo=bhūd=gunină-
  3. m=mataḥ//so=Kārayad=idam vimbam śaugatam ghatanojvalam/ suddha-rā(ri) ti mayam bhaktyā nyāyyam mărgam samāśritah/l anena pune=ächäry-opadhyaya- sathiyam
  4. jahat/ mata-pitr-samayuktam saugatam padam=äpnuyat// șri-Rājyapnla-nămni kşitibhrti bhuvan=avati kärttirrati mahati/abde=stāvimsati-tame krta sita -dine=stau Vaiśākhe//

இக்கல்வெட்டின் மூலம் தெரியவரும் செய்தியானது கிபி 10ஆம் நூற்றாண்டிலும் காஞ்சியை சேர்ந்த வேதம், வேதாங்கம் போன்றவற்றினை கற்று தேர்ந்த பிராமணர்கள் சிலர் பௌத்தம் தழுவியதோடு மகதநாட்டிலுள்ள புனிதமான பௌத்த விகாரைகளில் புத்தர் சிலையினை தானம் தரும் அளவில் இருந்திருக்கிறார்கள் என்பதனை அறியமுடிகிறது.

Naga pedestal of buddha (Representation of kurkihar bronze)

இக்கட்டுரை உருவாக காரணமான நூல்களும் கட்டுரைகளும்: (Bibliography)

1. Banerji-Sastri, A. 1940. ‘Ninety-three Inscriptions on the Kurkihar Bronzes: Patna Museum’, in the journal of the Bihar and Orissa Research Society, Vol XXVI -3, pp. 236-51, pp.299-308.

2. Jayaswal, KP.1934. ”Metal Images of Kurkihar Monastery”. In the journal of the Indian society of oriental art, vol 2-2.

3. Pal, Pratapaditya 1988. ‘A forgotten Monastery of Ancient Bihar’ , in south Asian studies 4, pp-83-88. London.

4. Srinivasan ,C.R. 1970. “Kanchipuram through the ages”, agam kala prakashan , Delhi.