மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. கிபி 3-5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்திருக்கலாம் என ஆரம்ப காலத்தில் சிலர் முடிவுக்கு வந்தாலும் பின்வந்த ஆய்வாளர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. அதற்கு பிரதானமான காரணம், நாயன்மார்களை முதன்முதலாக வரிசைப்படுத்திய கிபி 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகரின் பெயரை குறிப்பிடவில்லை என்பதும், கிபி 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் மாணிக்கவாசகர் இடம்பெறாததும் தான். 
இதனால் பலரும் மாணிக்கவாசகரின் காலத்தை கிபி 13ஆம் நூற்றாண்டு என கணக்கிடும் போக்கும் நிலவுகிறது. இக்கட்டுரை இதுவரை மாணிக்கவாசகர் குறித்து கிடைத்த தரவுகளில் இருந்து அவரது காலத்தை நிர்ணயிக்க துணிகிறது. 

மாணிக்கவாசகர் செப்பு திருமேனி


மாணிக்கவாசகர் பாண்டிய அரசனுக்கு அமைச்சராக இருந்ததும், சிவபெருமானுக்காக கோவில் எடுப்பித்ததும் சைவ வரலாற்றில் சொல்லப்படும் மிக முக்கிய நிகழ்வு. மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்‘ பதிகத்தில் அவர் பாண்டிய அரசன் வரகுணனின் பெயரை இரு இடங்களில் பதிவு செய்கிறார். 
இவ்விரு இடங்களிலும் வரகுணன் என்ற பெயர் அரசனின் பெயராக அமைந்துள்ளது. பாண்டிய வரலாற்றில் இடைக்காலத்தில் இரண்டு வரகுணன்கள் வருகிறார்கள். முதலாம் வரகுணன் (கிபி 768-811) குருசரிதம் கொண்டாடிய பரமவைணவன். இவனின் பேரனான இரண்டாம் வரகுணன் (கிபி 863-911) சிறந்த சிவபக்தன் என்பதை பாண்டிய செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும், பட்டினத்தார் பாடிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவையும், பாண்டிய குலோதயா எனும் வடமொழி நூல்களும் உறுதி செய்கின்றன. 


‘வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்’ – (திருக்கோவையார்-306) என்றும், ‘சிற்றம்பலம் புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன்‘ – (திருக்கோவையார்-327) என்றும் பாடுகிறார் மாணிக்கவாசகர். இந்த இரண்டு இடங்களிலும் ‘நிகழ்கால‘மாக குறிப்பிட்டு அவர் பாடியிருப்பது கவனிக்கத்தக்கது.

 
‘திருக்கோவையார்’ பாடியவர் மாணிக்கவாசகரல்ல எனும் கருத்தும் சில சமயங்களில் முன்வைக்கப்பட்டது. பெரும்பாலும் மாணிக்கவாசகரின் செப்புத்திருமேனிகளின் திருக்கரத்தில் ஓலைச்சுவடியுடனே இருப்பார். அந்த சுவடியில் ‘நமச்சிவாய வாழ்க‘ என்று திருவாசக பாடலின் தொடக்கம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு சோழநாட்டு மதுக்கூரில் பூமியில் புதையுண்டிருந்து வெளிப்பட்ட சோழர் காலத்து மணிவாசகப் பெருமானாரின்  செப்புச் சிலையின் திருக்கரத்திலுள்ள ஓலைச்சுவடியில் திருக்கோவையாரில் வரும் வரிகளான ‘‘திருவளர் தாமரை சீர்வளர் காவிகளீசர்’’ என்ற  சோழர்காலத்திய பொறிப்பு  காணப்பெறுகின்றது. திருச்சிற்றம்பலக் கோவையார் எனப்பெறும் திருக்கோவையார் என்ற அருந்தமிழ் நூலைப் பாடியவர் மணிவாசகப்  பெருமானாரே என்பது இதனால் ஐயம் திரிபற உறுதியாயிற்று. இதனை சோழ சரித்திர ஆய்வாளரான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களும் எழுதியிருக்கிறார். 

சுவடியில் திருக்கோவையாரின் வரிகள் இருப்பது கவனிக்கத்தக்கது.
Source: கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் – திருவாதவூர்
Dated: Kungumam 01 Feb 2016.


முதலாம் வரகுண பாண்டியன் முதல் இரண்டாம் வரகுணன் வரையான அரசியல் வரலாற்றை சற்று காண்போம். பரமவைணவனான முதலாம் வரகுணனின் மகன் ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்ததாக தெரிகிறது. அதில் ஒருவன் இரண்டாம் வரகுணன், மற்றொருவன் பராந்தக வீரநாராயணன். மூன்றாமவன் குறித்து நேரடியான பெயர் சான்று இல்லை என்றாலும் அவனை மாயா பாண்டியன் என்று சிலரும் வீரபாண்டியன் என்று சிலரும் கூறுகிறார்கள். குடந்தை சேதுராமன் இவனை வீரபாண்டியன் என்றே சுட்டுகிறார். இதற்கு சான்றாக கொடும்பாளூரில் உள்ள பூதிவிக்ரமகேசரி கல்வெட்டில் வரும் வீரபாண்டியன் இவனே என்பது அவரது கூற்று. ஆனால் மாயா பாண்டியன்/வீரபாண்டியன் என என்ன பெயரை இவனுக்கு சூட்டுவோர்களானாலும் இவன் தன் தந்தை ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனுக்கு எதிராக சிங்கள அரசனுக்கு உதவிசெய்தான் என்பதை அனைவரும் ஏற்கிறார்கள்.

சுமார் கிபி 860ல் சிங்கள அரசன் ஶ்ரீவல்லபனை வெற்றி கொண்ட பிறகு அப்போருக்கு உதவியதால் மாயா பாண்டியன்/வீரபாண்டியனை அரியணையில் அமர்த்துகிறான் சிங்கள அரசன். ஆட்சி கட்டிலில் ஏறியதும் தனது இரு சகோதரர்களையும் விரட்டுகிறான் அவன். ஆனால் இந்த ஆட்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை.
பாண்டிய குலோதயா எனும் வடமொழி நூல் வரகுண பாண்டியன் குறித்தும் மாணிக்கவாசகர் குறித்தும் சில அரிய செய்திகளை தருகிறது. இந்நூல் தென்காசி பாண்டியர்கள் காலத்தில் எழுதப்பட்டது என்பது ஆய்வாளர்கள் கூற்று. அதில் இருந்து கிடைக்கும் ஒரு தகவலை மட்டும் இங்கு பார்ப்போம். 


‘வரகுணனுடைய சகோதரன் இராஜ்யத்தை பிடிங்கிக்கொண்டு வரகுணனை துரத்தி விட்டான். மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில் திருவாதவூரை அடைந்தான். அங்கு சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல கலைகள், சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் எனும் அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியினால் வரகுணன் தன் சகோதரனை மதுரையில் இருந்து துரத்திவிட்டுப் பாண்டிய மண்டலத்தை ஆளத்தொடங்கினான்.’


வாதபுரி நாயகர் என்று இங்கு கூறப்படுபவர் மாணிக்கவாசகரே ஆவார். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியை பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்படுகின்றன. மாணிக்கவாசகர் வரகுணனின் மந்திரியாக இருந்த தகவலும் கூறப்படுகிறது. அதனினும் மேலாக மாணிக்கவாசகர் திருமணமானவர் எனும் தகவலையும் இந்நூல் வழங்குகிறது. நிற்க!


இரண்டாம் வரகுணன் காலத்தை நாம் துல்லியமாக கணக்கிட கல்வெட்டுகள் உதவுகிறது.  அய்யம்பாளையம்(ARE 705/1905) ஜைன கோவில் கல்வெட்டில் ‘சக ஆண்டு 792’ என குறிப்பிடப்பட்டு அது இரண்டாம் வரகுணனின் 8வது ஆட்சியாண்டு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. எனில் இக்கல்வெட்டின் காலம் கிபி.870. இது அவனின் 8வது ஆட்சியாண்டு ஆகும். எனவே இரண்டாம் வரகுணன் ஆட்சிக்கு வந்தது கிபி 863என துல்லியமாக சொல்லலாம். பாண்டிய குலோதயா தரும் தகவலின் அடிப்படையில் இந்த சமயத்தில் தான் வரகுணன் சிங்கள மன்னனையும் தன் சகோதரனையும் வென்றிருக்க வேண்டும். அதற்கு மாணிக்கவாசகர் உதவியிருக்க வேண்டும். இரண்டாம் வரகுணன் சிங்கள அரசனை வென்ற தகவலை திண்டுக்கல் அருகே பெரும்புல்லி (Epigraphia Indica Vol 32/no 31) கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

11-12ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் செப்பு திருமேனி. லிண்டன் அருங்காட்சியகம் ஜெர்மனி


சைவ நூல்கள் சில (கடவுள்மாமுனிவர் எழுதிய திருவாதவூரடிகள் புராணம்) மாணிக்கவாசகர் தில்லை கோவிலில் பௌத்த துறவியுடன் வந்த ஊமை பெண் ஒருவரிடம் கேள்விகள் கேட்டதும் அதற்கு அந்த ஊமை பெண் பதிலளித்ததும் இதனை அறிந்த வியப்புற்ற சிங்கள அரசன் சைவம் தழுவியதாகவும் தகவல் உண்டு. மாணிக்கவாசகருக்கும் ஊமை பெண்ணிற்கும் நடந்த உரையாடலே திருவாசகத்தின் திருச்சாழல் என்பது சைவர்களின் ஐதீகம். ஆனால் யாரும் பெரிதாக இந்த தகவலை பேசுவதில்லை. ஆனால் இலங்கை சிங்கள நூல்கள் சில இந்த தகவலை பதிவு செய்கின்றன.


நிகாயசங்கிரகய அல்லது சாசனாவதாரய: – இந்நூல் கி.பி. 1390ம் காலத்தில், கம்பளையை ஆண்டுகொண்டிருந்த 5ம் புவனேகபாகு மன்னன் காலத்தில் இரண்டாம் தருமகீர்த்தி என்னும் பௌத்ததேரரால் எழுதப்பட்டது. இதில், புத்தரின் பரிநிர்வாணத்திலிருந்து 1962ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்த மத்வலசேனன் (கிபி 844 – 866) என்ற பௌத்தமன்னன் சைவசமயத்தினை ஏற்றான் என்னும் செய்தி உள்ளது. இக்காலகட்டம் 9ஆம் நூற்றாண்டுக்குரியது.


வல்கம்பாய அபயராஜ பரினோவின் முதல்வரான பௌத்தகுரு  (கி.பி 1542 – 1545) தாம் எழுதிய ராஜரத்னாகரய என்னும் வரலாற்று நூலிலும் மத்வலசேனன் (கிபி 844 – 866) என்னும் மன்னன் பௌத்தத்தைக் கைவிட்டு முறையற்ற சமயம் சார்ந்தான் என்று குறித்துள்ளார்.


ஆக, இலங்கையில் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் சிரத்தையுடையவர்களான சிங்களவர்கள் இரண்டு நூல்களில் இந்த தகவலை ஆவணப்படுத்தியுள்ளனர். வரலாற்றாளர்கள் மத்வலசேனனின் காலத்தை கிபி 844 – 866 என்றே கணித்திருக்கிறார்கள். இது இரண்டாம் வரகுணன் காலத்தை மிகச்சரியாக கொண்டு வருகிறது.


இரண்டாம் வரகுணன் கிபி 863ல் ஆட்சியை கைப்பற்றியதை பார்த்தோம் அல்லவா! அவனது சகோதரனான பராந்தக வீரநாராயணனுக்கு வரகுணனே கிபி 866ல் முடிச்சூட்டியிருக்கிறான் என்ற தகவலும் நமக்கு கல்வெட்டில் கிடைக்கின்றன. அதாவது சிங்கள அரசனுடன் கூட்டு சேர்ந்து தனது தந்தையைக் கொன்ற சகோதரனை விரட்டிவிட்டு தனது மற்றொரு சகோதரனுக்கு தமக்கு பின் அரசனாகும் வாய்ப்பை வழங்குகிறான் வரகுணன். திருநெய்த்தானத்து (SII vol 5, no 608) கல்வெட்டு ஒன்று வரகுணனின் நான்காம் ஆட்சியாண்டில்(கிபி 866) பொறிக்கப்பட்டது. அக்கல்வெட்டில் ‘கோன் பராந்தகன்’ என்ற பெயர் கிடைக்கிறது. இது வரகுணனின் தம்பியே.  

பின்நாளில் அரசாட்சியை தனது தம்பியிடம் அளித்துவிட்டு  வரகுணன் சைவத்தின் மீது பற்றுக்கொண்டு துறவியானது தெரிகிறது. பராந்தக வீரநாராயண பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடு அவனது 45ஆம் ஆட்சியாண்டில் (கிபி 911) வெளியிடப்பட்டது. இதில் பராந்தகன் தன் அண்ணன் வரகுணனை ‘எம்கோ‘ என்றும் சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் தான் இச்சாசனத்தை வெளியிட்டதாக பராந்தகன் கூறுகிறான். இதனால் கிபி 911வரை வரகுணன் உயிருடன் இருந்திருப்பதை அறியமுடிகிறது. 


எம்கோ வரகுணன் பிள்ளைபிறைச் சடைக் கணிந்தபினாக பாணி எம்பெருமானைஉள்ளத்திலே இனிதருளிஉலகம் காக்கின்ற நாளில்‘ என்பது தளவாய்புர செப்பேட்டிலுள்ள வரிகள். 


இரண்டாம் வரகுணன் சைவத்தின் மீது பற்றுக்கொண்டமை குறித்து 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தாரும் தனது திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் குறிப்பிடுகிறார். அவை,


வெள்ளைநீறு மெய்யிற்கண்டுகள்ளன் கையில் கட்டவிழ்ப்பித்தும்பாடினவென்று படாம்பல் அளித்தும்ஈசந்தன்னை ஏத்தின என்றுகாசும் பொன்னுங்கலந்து தூவியும்வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றிவேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்தபெரிய அன்பின் வரகுணதேவரும்‘ – திருவிடைமருதூர் மும்மணிக்கோவை


வரகுணன் வெந்நீறு பூசியிருப்பான். ஈசனையே ஏத்தி இருப்பான்.ஈசனைப் பாடியவர்களுக்கு காசும், பொன்னும் கொடுத்தான். வேம்பு பழத்தை சிவலிங்கம் என்று விதானம் அமைத்தான். மனைவியைக் கோயில் பணி செய்ய வைத்தான். பார்க்கும் இடமெல்லாம் ஈசனையே கண்டு வணங்கினான்” எனப் பாடியுள்ளார் பட்டினத்தடிகள். 

பட்டினத்தடிகள்


மேற்சுட்டிய தரவுகள் அனைத்தும் இரண்டாம் வரகுண பாண்டியனையே மாணிக்கவாசகரின் சமகாலத்தவனாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இனி மாணிக்கவாசகர் கிபி 9ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக கொள்ள முடியாது என்பதற்கான தரவுகளை காண்போம்.


தில்லையில் திருமால் சிலை இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காலத்தில் (கிபி 730 – 795) தான் கொண்டுவரப்படுகிறது. இவனது காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர். வைணவர்களின் குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவற்றின் கூற்றுப்படி குலசேகர ஆழ்வார் கிபி 767ல் அவதரித்தவர். திருமங்கையாழ்வார் கிபி 776ல் அவதரித்தவர். 
கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. 


நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்‘ என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்தருளினார். திருவரங்கம் கோவில் விரிவுபடுத்தப்பட்டதும் இவரது காலத்தில் தான். 
தில்லையில் திருமால் இருந்தமை குறித்து,
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்துபடை மன்னவன் பல்லவர்கோன் பணிந்தசெம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்ததில்லைத் திருச் சித்திர கூடம்‘ – என திருமங்கையாழ்வார் பாடுகிறார். 
இதனால் தில்லை திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள செய்தவன் இரண்டாம் நந்திவர்மன் என்பதை உறுதிசெய்ய முடிகிறது. 


தில்லை நகரத் திருச்சித்திர கூடந்தன்னுள்அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த..‘ என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பது கவனிக்கத்தக்கது. 


எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் செய்தி முக்கியமானது. இதுவே திருமங்கை ஆழ்வாருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும் காலத்தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் எனும் தகவலை தரவல்லது. 
தில்லையில் திருமாலின் திருக்கோலத்தை திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்கு துணை நிற்கும்.

தில்லை திருச்சித்திரகூடத்தில் திருமால்


வரங்கிடந்தான் தில்லை யம்பலமுன்றிலில் அம் மாயவனே‘ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாக்கு.
ஆக தில்லையில் திருமால் இருந்தமை குறித்து கிபி 6ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வாழ்ந்த தேவார மூவர் பெருமக்கள் எந்த தகவலுக அளிக்கவில்லை. ஆனால் கிபி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாணிக்கவாசகர் தில்லை திருமாலை குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் தேவார மூவர் பெருமக்கள் ஆதி சங்கரரின் மாயாவாதம் குறித்து எந்தவித தகவலையும் அளித்திருக்கவில்லை.
ஆனால் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,’மிண்டிய மாயாவாதமெனும் சண்டமாருதம்‘ என ஆதி சங்கரரின் கோட்பாட்டை குறிப்பிடுகிறார். ஆதி சங்கரரின் காலம் கிபி 8ஆம் நூற்றாண்டு என்பதை உண்மையான சங்கர மடங்கள் ஏற்றுக்கொண்டன என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே மாணிக்கவாசகரின் காலம் கிபி 9ஆம் நூற்றாண்டு என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. அதுவும் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்பதை உறுதியாக சொல்ல முடிகிறது. மாணிக்கவாசகர் 32 வயதுவரை மட்டுமே வாழ்ந்தார் எனும் சைவர்களின் நம்பிக்கை உண்மையாக இருப்பின் மாணிக்கவசகர் கிபி 840க்கும் 880 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் ஏன் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் மாணிக்கவாசகர் இடம்பெறவில்லை எனும் கேள்வி பலருக்கும் எழுகிறது. சேக்கிழாருக்கு மாணிக்கவாசகர் குறித்தோ அவரது படைப்புகள் குறித்தோ தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனை சேக்கிழார் காலத்திற்கு முன்பாக மாணிக்கவாசகர் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் கிடைக்கும் நேரடி கல்வெட்டு தகவலை கொண்டு உறுதி செய்யலாம். 


திருக்கோவலூர் (திருக்கோயிலூர்) வீரட்டானேஸ்வரர் கோயிலிலுள்ள இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் கி.பி. 1057ம் ஆண்டில்  அக்கோயிலில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்ய அளிக்கப்பெற்ற அறக்கொடை பற்றி கூறப்பெற்றுள்ளது.


வீரராஜேந்திர சோழனின் திருவொற்றியூர் கல்வெட்டில் (SII Vol 38, no 128) சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவர் உடல் நலம் பெறவும், அவர் தம் தேவியாரின் திருமாங்கல்யம்  மங்களகரமாக விளங்கவும், மன்னனது மகள் உடல்நலம் பெற்று மகப்பேறு அடையவும், இறைவழிபாடுகளுக்காகவும், 60 வேலி நிலம் மணலி எனும் ஊரில் வழங்கப்பெற்றது குறித்து விவரிக்கப் பெற்றுள்ளது. அக்கொடையின் மூலம் மார்கழி திருவாதிரை திருநாட்களில் திருவொற்றியூர்  காராணை விடங்கர் (நடராசப்பெருமான்) வீதி உலா வருங்காலங்களில் இருபத்திரண்டு நாட்டிய நங்கையர் திருவெம்பாவையை பாடியவாறு  ஆடி வர வேண்டும் என்றும், பதினாறு நங்கையர் அகமார்க்கமாக திருப்பதிகம் (தேவாரம்) விண்ணப்பம் செய்து ஆடி வர வேண்டும்  என்றும், அவர்களுக்கு அக்கலையினைப் போதிக்க இரண்டு ஆசான்கள் திகழ வேண்டும் என்றும் கூறப் பெற்றுள்ளன. நூறாண்டுகள் கடந்தும்  பின் வந்த சோழமன்னர்கள் இப்பணியைத் தொடர்ந்து செயல்படச் செய்தனர் என்பதை திருவொற்றியூர் திருக்கோயிலில் உள்ள மற்றொரு  கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.


விருத்தாசலம் வட்டம் நல்லூரில் உள்ள வில்வாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள குலோத்துங்க சோழனின் நான்கு கல்வெட்டுகள் (ARE 1940-41/no 143,161-162)மணிவாசகரின் திருவெம்பாவை குறித்தே பேசுகின்றன. இறைவன் நல்ல நாயனார் திருவீதியில் உலா வரும் போதும், திருத்தேரில்  எழுந்தருளும் போதும், இரண்டு தேவரடியார் மகளிர் திருவெம்பாவை முதல் பத்து (திருப்பள்ளி எழுச்சி) பாடிக் கொண்டும், அபிநயித்து  ஆடிக் கொண்டும் வருவதற்காக நிலக்கொடை அளிக்கப் பெற்றதை ஒரு சாசனம் கூறுகின்றது. அடுத்ததோர் கல்வெட்டில் ஆழ்வி வளைய  அழகியாள் பதினெண் பூமி நங்கை என்ற ஆடல்நங்கை இறைவன் முன்பு திருவெம்பாவையின் இரண்டாம் திருப்பாட்டு பாடி ஆடுவதற்கு  கோயிலார் வழங்கிய நிவந்தம் பற்றி குறிப்பிடுகின்றது. மூன்றாம் கல்வெட்டில் உதயநாச்சி எனும் குலோத்துங்க சோழ மாணிக்கம் என்ற  ஆடலரசி திருவெம்பாவையின் கடைக்காப்பு பாடி ஆட கோயில் ஸ்தானத்தார் அளித்த உரிமைகள் பற்றி பேசுகிறது. நான்காம் கல்வெட்டில்  முன் கல்வெட்டு சாசனத்தில் குறிக்கப் பெற்ற உதயநாச்சி குலோத்துங்க சோழமாணிக்கம் இறந்துபட பொற்கோயில் நங்கை என்ற  ஆடலரசியின் மகளான பீமாழ்வி என்பாள் கோயில் நடன நங்கையாக நியமனம் பெற்றதோடு அவள் ஈசன் முன்பு சாக்கைக் கூத்து ஆடவும்,  திருவெம்பாவையின் கடைக் காப்புப்பாடி ஆடவும் பெற்ற உரிமையும், நிவந்தமும் பற்றி விவரிக்க கூறப் பெற்றுள்ளன.


நடுநாட்டு எளவானாசூர் என்னும் ஊர் பண்டைய காலத்தில் இறையானரையூர் என அழைக்கப் பெற்றது. அங்குள்ள சிவாலயத்து கல்வெட்டு (ARE 1906, no 165)ஒன்றில்  விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1135ல்) அவ்வாலயத்து திருப்பள்ளியறை நாச்சியார் ஞாயிற்றுக்கிழமை தோறும் எழுந்தருளும்போது  திருவாசகத்தின் ‘திருச்சாழல்‘ கேட்டருளுவதற்காக அளிக்கப் பெற்ற கொடைகள் பற்றி குறிப்பிடுகின்றது. 


கும்பகோணத்திற்கு அருகிலுள்ள  மருதாநல்லூர் சிவாலயத்தில் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் (கிபி 1148)  கரையேறவிட்ட திருநட்டப்பெருமாள் என்ற தேவரடியார் பெண் ஒருத்தி அத்திருக்கோயிலில் திருவாதவூர்  நாயனாருக்கு (மாணிக்கவாசகர்) உருவச்சிலை செய்தளித்து நாள்தோறும் பூசனை செய்வதற்கு நிலமும் அளித்தாள் என்பது அங்குள்ள  கல்வெட்டில் (ARE 1927, no 285) குறிக்கப்பெற்றுள்ளது.


திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயத்து இரண்டாம் இராஜராஜனின் கல்வெட்டில் ஆட்கொண்டாள் தேவுந்திருவும் உடையாள் என்பாளும், கிழக்கடைய நின்றாள் என்பாளும் இணைந்து அத்திருக்கோயிலுக்கென திருவாதவூராளி (மணிவாசகர்) திருநாவுக்கரசர், திருக்கண்ணப்பதேவர் ஆகிய  மூவர் திருவுருவங்களையும் அமைத்து நாள் வழிபாட்டுக்கு நிவந்தங்கள் அளித்தனர் என்பது குறிக்கப்பெற்றுள்ளது. அவர்கள் நிலம்  அளித்தபோது மேற்கூறிய மூவரின் பிரதிமங்களின் திருவடிகளில் நீர்வார்த்து அளித்தனர் என்பதும் சுட்டப்பெற்றுள்ளது. 


வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் (கிபி 1167) திருவாதவூர் நாயனாரின் திருமேனி எடுக்கப் பெற்று, அவர் முன்பு மார்கழி மாத திருவாதிரை அன்று திருவெம்பாவை விண்ணப்பம்  செய்ய பெற்றது என்பதும் அவ்வாலயத்து சாசனமொன்றில் (ARE 1912, no 421)  கூறப்பெற்றுள்ளது. 

திருவாதவூரில் திருவாதவூருடையாரான மணிவாசகர் கோயில் அருகே நடப்பெற்றிருந்த ஒரு கற்பலகையில் இருந்த ஒரு கல்வெட்டு  சாசனத்தினை இந்திய தொல்லியல் துறையினர் 1903ம் ஆண்டில் படியெடுத்து, SII Vol 8, no 423 ஆக பதிப்பித்துள்ளனர். அதில் கோமாறபன்மரான திருபுவன சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து  வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியருளிய சுந்தரபாண்டிய தேவரின் பதினாறாம் ஆட்சியாண்டில் தென்பறம்ப நாட்டுத் திருவாதவூரில் திருவாதவூர் பெருமாள் ஸ்ரீபாதத்துத் திருமடவளாகத்தில் தான் இருந்தவாறு அம்பலத்தாடி நல்லூரைச் சார்ந்த மும்முடிச்சோழன் பூவண  முனிவனான அதிகைமான்தேவன் என்பான் அறக்கொடையாக நிலம் வாங்கி திருமடத்திற்கு அளித்தமை பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது.  மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மணிவாசகரின் திருக்கோயில் சீர்மையுடன் விளங்கியதை இக்கல்வெட்டு காட்டி நிற்கின்றது.

மாணிக்கவாசகர்


இவ்வாறு தமிழகம்  முழுதும் உள்ள திருக்கோயில்களில் திருவாதவூரரான மணிவாசகரின் பிரதிமத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்ததோடு, அவர் பாடிய தமிழை  ஆடியும், பாடியும் போற்றினர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் கிபி 13ஆம் நூற்றாண்டிற்கும் சேக்கிழார் காலத்திற்கும் முந்தியதாகவே கிடைக்கின்றன. 


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரிவுரையாக நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி அமைந்தது. திருத்தொண்டர் திருவந்தாதியை மிக விரிவாக விளக்கி அருளப்பட்டது திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம். சுந்தர மூர்த்தி சுவாமிகளின் காலத்திற்கு (கிபி 700-728) பிறகே மாணிக்கவாசகர் காலம் அமைந்ததால் திருத்தொண்டர் தொகையில் மாணிக்கவாசகர் இடம்பெறவில்லை. அதனால் மட்டுமே பெரிய புராணத்திலும் மாணிக்கவாசகர் இடம்பெறவில்லை என்பது ஏற்கத்தக்கது. ஏனெனில் சேக்கிழார் தமக்கு முன்னோடியாக இருந்த நம்பியாண்டார் நம்பியை கூட நாயன்மார்களின் பட்டியலில் இணைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டன் தொகையை சோழ அரசன் கேட்டு வியந்தபின் அதனை விரிவாக விளக்கி அருளுமாறு சேக்கிழாரிடம் அவன் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே பெரியபுராணம் படைக்கப்பட்டது என்பதை பின்வந்த உமாபதி சிவாச்சாரியார் தமது ‘சேக்கிழார் புராணம்‘ எனும் நூலில் தெளிவாகவே குறிப்பிட்டுவிடுவதும் நோக்கத்தக்கது.

 
‘ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பிஅருள்செய்த கலித்துறை அந்தாதி….தூயகதை அடைவுபடச் சொல்வீர் என்று சோழன் உரைசெய்ய கேட்டு..’ – சேக்கிழார் புராணம் பாடல் 23

எனவே மாணிக்கவாசகர் கிபி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பதும் அவர் திருக்கோவையாரில் குறிப்பிடும் பாண்டிய அரசன் இரண்டாம் வரகுணன் தான் என்பதும் இக்கட்டுரையின் முடிவு.