சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆரியர் – திராவிடர் எனும் இரண்டு இனவாதங்களை முன்வைத்தே அரசியலும் கொள்கை கோட்பாடுகளும் இயற்றப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை சமகால அரசியல் – சித்தாந்தம் – கொள்கை – கோட்பாடுகள் போன்றவற்றை கடந்து வரலாற்று ரீதியாக திராவிடர் எனும் சொல்லாடல் பயின்று வரும் இடங்களையும், அவை யாரை குறித்து சுட்டப்பட்டது என்பதையும் முடிந்தளவு விரிவாக அலச முயற்சித்திருக்கிறது.

பொது ஆண்டுக்கு முன் (கிமு 2 ஆம் நூற்றாண்டில்) கலிங்கம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஒரிசாவை மகாமேகவாகன சாம்ராஜ்ஜியத்தினை சேர்ந்த கார்வேலன் எனும் அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனது கல்வெட்டொன்று புவனேஸ்வர் அருகே அத்திகும்பா எனும் மலையில் அமைந்துள்ளது. அக்கல்வெட்டில் அவன், கலிங்கத்தினை 1300 ஆண்டுகளாக அடக்கிவந்த ‘த்ரமிர தேச சங்காத்தம்‘ எனும் கூட்டணியை தான் உடைத்ததாக கூறுகிறான். இதில் வரும் ‘த்ரமிர’ என்பது பாலி அல்லது அர்த்தமகதியில் தமிழை சுட்டும் சொல். அதாவது ‘தமிழ்’ எனும் சொல்லை உச்சரிக்க தெரியாத வேற்றுமொழியினர் தமிழை ‘த்ரமிர’, ‘த்ரமிள’,’த்ரமிட’ எனும் சொற்களில் குறித்து வந்திருக்கிறார்கள் என தெரிகிறது. ஆகவே கார்வேலன் சுட்டும் ‘த்ரமிர தேச சாங்காத்தம்’ என்பது தமிழக மூவேந்தர்களின் கூட்டணி தான். இது பல ஆய்வறிஞர்களும் ஒப்புக்கொண்ட கருத்து.

அடுத்ததாக கிபி 6ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தின் வடபகுதியினை தலைமையாக கொண்டு ஆட்சிசெய்த சாளுக்கிய அரசன் மங்களேசனின் தூண் கல்வெட்டொன்று பதாமி அருகே மஹாகூடா எனுமிடத்தில் கிடைக்கிறது. இக்கல்வெட்டில் மங்களேசன் தனக்கு முன் ஆட்சி செய்த முதலாம் கீர்த்திவர்மனின் வெற்றிகளை குறித்து பொறிக்கும்போது, “அங்க,வங்க,மகத,கேரள,மூஷிக, சோழீய,பாண்டிய,த்ரமிள நாட்டினை வென்ற“தாக குறிப்பிடுகிறான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சோழ,கேரள,பாண்டிய நாடுகளை குறிப்பிட்ட பின் ‘த்ரமிள நாடு’ குறித்து அதே வரியில் வருவதைத்தான். இது சற்று குழப்பத்தை தந்தாலும் மேலதிக தரவுகளை இதனுடன் இணைத்து பார்க்கும்போது இங்கு சுட்டப்படும் ‘த்ரமிள நாடு’ என்பது பல்லவ நாடு தான் என தெரிகிறது. இதற்கு சான்றாக கிபி 7ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீனப்பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில், “திராவிட நாட்டின் தலைநகரம் காஞ்சி” என குறிப்பிடுகிறார். இதனோடு “புராதன இந்தியா” எனும் பி. வி. ஜகதீச அய்யர் எழுதிய நூலில் இந்தியாவின் பழைய ஐம்பத்தாறு தேசங்களின் பட்டியலை எடுத்து பார்க்கும்போது அதில், “ஆந்திரதேசம், சோழதேசம், கேரளதேசம், பாண்டியதேசம்” என்பதுடன் “திராவிட தேசம்” என்றொன்று தனியே குறிப்பிடப்படுகிறது. திராவிட தேசமானது கிருஷ்ணா நதிக்கு தெற்கும் காவிரிக்கு வடக்குமாக அமைந்திருந்ததாகவும் அந்நூல் கூறுகிறது. இதனுடன் பல்லவர்களின் எல்லையையும் பொறுத்திப்பார்க்கும்போது பல்லவதேசமே “திராவிட தேச”மாக இருந்திருப்பதை அறியமுடிகிறது. இதுவே யுவான் சுவாங் குறிப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அதேபோல் இடைக்கால பாண்டியனான பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரம் செப்பேட்டின் வடமொழி பகுதியில் ‘திரமிளாபரணன்‘ எனும் பெயர், அதே செப்பேட்டின் தமிழ் பகுதியில் ‘தமிழாபரணன்‘ என குறிப்பிடப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே வடமொழிகளான பாலி, பிராக்கிருதம், அர்த்தமகதி, சமஸ்கிருதம் போன்ற ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த வடநாட்டு மொழிகளில் தமிழுக்குறிய சிறப்பெழுத்துக்கள் இல்லாமையாலும் ‘தமிழ்’ எனும் உச்சரிப்பு வடநாட்டார்களுக்கு இயல்பாகவே கடினமானதாலும், அவர்கள் அவர்களின் மொழியில் ‘த்ரமிள’, ‘திரமிட, ‘த்ராவிட’ என்றெல்லாம் தமிழ், தமிழகம், தமிழரை சுட்டினர் என்பது கல்வெட்டு மற்றும் செப்பேடு வாயிலாக தெரியவருகிறது. இனி இலக்கியங்களில் இருந்து இதனை மேலும் உறுதி செய்ய துணிவோம்.

சாக்த அம்பிகையை போற்றி எழுதப்பட்ட சௌந்தர்ய லஹரி எனும் வடமொழி நூலின் 75வது ஸ்லோகம்,

तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयतः
पयः पारावारः परिवहति सारस्वतमिव ।
दयावत्या दत्तं द्रविडशिशु-रास्वाद्य तव यत्
कवीनां प्रौढाना मजनि कमनीयः कवयिता” ||75||

“தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ|
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா” ||75||

விளக்கம்: அம்மா ! உன்  ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்து பெருகும் பாற்கடல் . கலைவாணியே அந்தப் பாலாக உருவெடுத்தது போல் தோன்றுகிறது . உன்னால் கருணையுடன்  தரப்பட்ட , பாலைக் குடித்த  திராவிட  நாட்டுக் குழந்தை ஒருவன்  கற்றறிந்தோர்  போற்றும் பெருங்கவிஞனாக ஆகிவிட்டான் அன்றோ!

இதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரையே குறிக்கும். ஏனெனில் கிபி 16ஆம் நூற்றாண்டில் இந்நூலினை தமிழில் மொழிபெயர்த்த வீரை கவிராச பண்டிதர் இவ்வரியினை, “வருண நன்குறு கவுணீயன் சிறுமதலை அம்புயல் பருகியே” – என்று பிராமண குலத்தில் கவுணிய கோத்திரத்தில் பிறந்த ஞானசம்பந்தர் என்றே பொருள்கொண்டு பாடுகிறார். ஆகவே ‘திராவிட சிசு’ எனும் சொல் சம்பந்தரை குறிக்கும் என்பது ஒருபுறம் உறுதியான பின், சம்பந்தரின் பதிகத்தினை எடுத்து பார்த்தால், ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் சம்பந்தர் தன்னை ‘தமிழ்ஞானசம்பந்தன்’, ‘தமிழாகரன்’ என்றெல்லாம் தன்னை தமிழுடன் இணைத்தே குறிப்பிடுகிறார். இவ்வாறு சம்பந்தர் மட்டும் இதுவரை கிடைத்த அவரது பதிகங்களில் 260 இடங்களில் ‘தமிழ்’ எனும் சொல்லினை பயன்படுத்தி இருக்கிறார். முறையே அப்பர் 7 இடங்களிலும், சுந்தரர் 48 இடங்களிலும் ‘தமிழ்’ எனும் சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். எனவே அம்பிகையின் முலைப்பாலை பருகிய தமிழ் குழந்தை ஞானசம்பந்தன் தான் என வடமொழி இலக்கியத்தினூடே அறிய முடிகிறது.

அடுத்து பூர்வ காமிக ஆகமத்தில்,

“ऊर्ध्वं द्रविडभाषाग्डं गानं नृत्तयुतं तु वा ।” 4-439-1 

“ஊர்த்வம் த்ரவிடபாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா” 4-439-1


விளக்கம்: ‘அடுத்து திராவிட மொழியில் பாடவும் உடன்  நடனமும் செய்க’ எனவும் பூர்வ காமிக ஆகமம் கூறுகிறது. இங்கு திராவிட = தமிழ் என்பதாகவே கொள்ள முடியும்.

தமிழில் வெளிவந்த சேந்தன் திவாகரம், நாமதீப நிகண்டு போன்ற நூல்களில் ‘திராவிட’ எனும் சொல்லுக்கு ‘தமிழ்’ என்றே பொருள் உள்ளதை கவனிக்க. அதேபோல் பிரபல மீமாம்ச தத்துவவியலாளர் குமரீலபட்டரின் தந்திரவர்த்திகா எனும் நூலில் பல தெலுங்கு மற்றும் தமிழ் சொற்களையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். அவற்றை ‘ஆந்திர-திராவிட பாஷா‘ என்றே அவர் சுட்டுகிறார். இங்கு தெலுங்கு-தமிழ் என்று இரண்டு மொழிகளை குறிப்பிடுகிறார். பகவத புராணம், மச்ச புராணம், வராஹி தந்திரம், வராக புராணம், பிரகத் சம்ஹிதா, மகாபாரதம் என பல வடமொழி நூல்களில் ‘திராவிட’ எனும் சொல் பயின்று வருகிறது. அவையனைத்திலும் அது தமிழ், தமிழகம், தமிழரை தான் சுட்டுகிறது.

இதேபோல் கிபி 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பில்ஹானா எனும் புகழ்பெற்ற கவிஞர் மேலை சாளுக்கிய விக்ரமாதித்தன் அவையில் இருந்தார். அவர் எழுதிய “விக்ரமாதித்தன் திக் விஜயம்” எனும் நூலில், சோழ படையினை ‘திராவிட படை‘ என்றும் சோழ அரசனை ‘திராவிட அரசன்‘ என்றும் குறித்திருப்பது மற்றொரு சான்று.

ஜைன இலக்கியங்களை எடுத்துக்கொண்டால், கிமு காலத்தியதாக கருதப்படும் சமவயங்க சுத்தா, பனவண்ண சுத்தா முதலியவை 18 வகையான எழுத்துருக்களை சுட்டுகிறது. அவற்றில் ஒன்று ‘தமிலி’ அல்லது ‘தமிளி’. இதனை தான் இன்று தமிழ் பிராமி என்பதற்கு பதிலாக ‘தமிழி’ என வழங்கி வருகிறோம். பின் கிபி 8ஆம் நூற்றாண்டில் ஜைன துறவி வஜ்ரநந்தி மதுரையில் நடத்திய சங்கத்தின் பெயர் ‘திராவிட சங்கம்‘. இது தமிழகத்தின் மதுரையில் நடந்ததாலேயே திராவிட சங்கம் என வழங்கப்பட்டதே தவிர தமிழ் நூல்கள் எதுவும் இந்த சங்கத்தில் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை. இதுகுறித்து இரமேந்திரநாத் நந்நி அவர்களின் Religious Institutions and Cults in Deccan எனும் நூலில் காணவும்.

பௌத்த இலக்கியங்களை எடுத்துக்கொண்டால், கிபி 2ஆம் நூற்றாண்டை சேர்ந்த “லலிதவிஸ்தரா” 64 வகையான எழுத்துருக்களை பட்டியலிடுகிறது. அதில் ஒன்று ‘திராவிடி” அல்லது “திராவிடி லிபி“. விநயபிடகத்திற்கு உரையெழுதி வெளிவந்த ‘விமாதிவிநோதனி‘ எனும் நூலை எழுதிய மஹாகாஸ்யப தேரர் தன்னை திராவிட நாட்டினராக குறித்துக்கொள்கிறார். அதேசமயம் சிங்கள பௌத்த நூல்களான மகாவம்சம், தீபவம்சம் போன்றவைகளை ஆழ்ந்து படிக்கும்போது, அதில் சிங்களர்களுக்கு எதிராக ‘த்ரமிளர்கள்’ எப்போதும் சண்டையிட்டிருக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறு சண்டையிடும் ‘திரமிளர்களை’ Anarya என்று குறிப்பிடுகின்றன இந்நூல்கள். Anarya means One who is not aryan என்று பொருள். தீபவம்சம் மட்டும் 8 இடங்களில் ‘தமிள’ எனும் சொல்லினை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சைவ இலக்கியங்களில் அப்பர் பெருமான் ,’ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்‘ என்று பாடுவதை சிங்கள இலக்கியங்களுடன் ஒப்பிடும்போது அவை த்ரமிளர்களை Anarya என பிரித்து வழங்குவது ஒப்புநோக்கத்தக்கது. இதோடு சிங்களத்தினை கிபி 1153-86 வரை ஆண்ட முதலாம் பராக்கிரம பாகுவின் தளபதியாக பணியாற்றியவரின் பெயர் ‘தமிலதிகாரின் அடிக்கா‘ என்று சூலவம்சம் குறிப்பிடுகிறது.

பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களை ஆராய்கையில் , கிபி 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதவ சிவஞான முனிவர் , பன்னிரு சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் முதன்மையான மெய்கண்டார் அருளிய ‘சிவஞானபோதம்‘ எனும் நூலுக்கு உரையெழுதி அதற்கு ‘திராவிட மாபாடியம்‘ என்று பெயர் சூட்டுகிறார். சிவஞானமுனிவர் வடமொழி, தென் தமிழ் என இருமொழிகளில் புலமை பெற்றிருந்தமையால் சிவஞானபோதம் வடமொழியில் இருந்து அருளப்பட்ட நூலாக அவர் கருதினார். ஆகையால் வடமொழியின் வாயிலாக இந்நூலினை அவர் ‘திராவிட மாபாடியம்’ என வழங்கியிருத்தல் வேண்டும். இந்நூலினை வழங்கியதாலேயே அவர் ‘திராவிட மாபாடிய கர்த்தர்‘ என சைவர்களால் போற்றப்படுகிறார்.

அதை தொடர்ந்து யாழ்பாணத்து வடகோவையில் பிறந்து, திருவாவடுதுறை ஆதீனத்து சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுபதேசம் பெற்று , அவ்வாதீனத்துப் பெரும் புலவராய் விளங்கிய சபாபதி நாவலர் ( பொ.ஆ 1846-1903) , தமிழின் வரலாற்றைக் கூறும் நூலுக்கு இட்ட பெயர் திராவிடப் பிரகாசிகை. இதனை அதற்கு இயற்றிய தற்சிறப்புப் பாயிரத்தில்,

“மன்னு மாமுதற் கடவுளை மனத்திடை நிறுவி
என்னை யோர்பொரு ளாக்கொண்டாள் குரவனை யிறைஞ்சி
இன்ன மாண்திரா விடப்பிர காசிகை யென்னுந்
தன்னை நேர்தருந் தமிழ்வர லாறுசாற் றுவதான்
எனக் கூறுவதால் அறியலாம். இந்நூலை 1976 இல் வெளியிட்ட தென்னிந்திய சைவசித்தாந்த  நூற்பதிப்பு கழகத்தார் , அதன் பதிப்புரையில் “இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் சபாபதி நாவலர் என்பது,  அவர் வடமொழியுங் கற்றதனால்  வடமொழிப் பெயரிட்டார் இந்நூற்கு. திராவிடம் – தமிழ், பிரகாசிகை – விளக்கத்தையுடையது “ எனக்கூறுவது கருதவேண்டியது.

மனோன்மணீயத்தில் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளைதெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்று பாடுகிறார். அதாவது தென்னாட்டிலேயே சிறந்தது திராவிட திருநாடு என்று சுட்டுவதால் அது தமிழகத்தையே குறிக்கும் என்பது நோக்கத்தக்கது. இதேபோல் கிபி 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தாயுமானவர், ‘கல்லாத பேர்களே நல்லவர்கள்‘ என்ற பாடலில் ‘வடமொழியிலே வல்லான் ஒருவன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்’ என்று கூறியுள்ளார். இதில் தமிழைத்தான் திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுரை’ என்ற பெரிய திருமொழிச் சிறப்புப்பாயிரத்தில் வரும் ‘தமிழ நன்னூற்றுரை’ என்பதற்கு திராவிட சாத்திரம் என்றார் பிள்ளை லோகாச்சாரிய ஜீயர். ஆழ்வார்களின் நாலாயிரத்திவ்விய பிரபந்தங்கள் திராவிட வேதம் என்று குறிக்கப்படுகின்றன. இவ்விரண்டையும் ஒப்பிட்டு நோக்குங்கால் தமிழே திராவிடம் என்று வடமொழியின் வழியாக சுட்டப்படுகிறது என்பதனை அறியலாம்.

கிபி 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘இராஜதரங்கினி’ எனும் காஷ்மீர நூலானது,

கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே:” என்று குறிப்பிடுகின்றன. இதில் கர்நாடகம், தெலுங்கானம், மராத்தியம், குஜராத்தியத்துடன் தனியே த்ராவிடா என்று குறிக்கப்பட்டிருப்பது அப்போது மலையாள மொழி உருவாகாத கேரளத்துடன் ஒன்றிணைந்த தமிழகத்தையே என்று கொள்வது பொருத்தமானதாகிறது.

இதன் பொருள்: விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தெலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்). இதேபோல் பஞ்ச கௌடர்களை,

ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின:” என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள் :விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர். இந்த இராஜதரங்கினி எனும் நூலின் குறிப்பினைக்கொண்டு காஞ்சி மகாபெரியவா தனது தெய்வத்தின் குரல் நூலின் ஐந்தாம் பகுதியில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் பின்வருமாறு,

“இந்தியாவில் விந்த்ய மலைக்கு வடக்கேயுள்ள பாதி பாகம் முழுவதையுமே கௌடதேசம் என்றும், தெற்கேயுள்ள பாதி முழுவதையுமே த்ராவிட தேசம் என்றும்தான் பிரிவினை செய்திருக்கிறது. அப்புறம் அந்த கௌடதேசத்தில் பஞ்ச கெளடம் என்பதாக ஐந்து பிரிவு, த்ராவிட தேசத்தில் பஞ்ச த்ராவிடர் என்பதாக ஐந்து பிரிவு எண்டு செய்திருக்கிறது. பஞ்ச கௌடர்கள் யார் யாரென்றால், வட கோடியில் ஸாரஸ்வதர்கள் என்னும் காச்மீரிகள், அப்புறம் பஞ்சாப், U.P. – க்களிலுள்ள கான்ய குப்ஜர்கள் நேபாளத்திலும் பிஹாரிலுள்ள மைதிலர்கள், உத்கலர்கள் என்று ஒரிஸாக்காரர்கள் – இந்த நாளும் போக ‘கௌடர்’ என்ற மூலப் பெயருடனேயே வங்காளத்திலுள்ள வங்காளிகள் ஆகியோர். பஞ்ச த்ராவிடர் யார் யாரென்றால் வடக்கே குஜராத்திலுள்ள கூர்ஜரரில் ஆரம்பித்து, மஹராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகர் ஆகிய நாலுபேரும் கடைசியாக, த்ராவிடர் என்ற மூலப்பெயருடனேயே உள்ள தமிழ் மக்களும் ஆவார்கள். (மலையாள பாஷை ஸுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்தான் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கலந்து ஏற்பட்டதால் மலையாளிகள் இதில் தனியாகச் சொல்லப்படவில்லை.)”

மேலும் அவரே இந்நூலின் இரண்டாம் பகுதியில், தமிழ் எவ்வாறு திராவிடமானது என்பதற்கு விளக்கமும் தந்திருக்கிறார். அது பின்வருமாறு,

” தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சிலபேர் ஸம்ஸ்கிருதத்தையே “ரொம்ப’ ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்’ என்பதைக்கூட ‘த்ரேகம்’ என்று சொல்கிறார்கள்! த-மி-ழ் என்பதில் ‘த’, ‘த்ர’ வாயிருக்கிறது. ‘மி’ என்பது ‘வி’ என்றாயிருக்கிறது. ‘ம’ வும் ‘வ’ வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு ஃபைலாலஜிக்காரர்கள் [மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்] நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக ‘சாளக்ராவம்’ என்பதுதான் ‘சாளக்ராமம்’ என்றாயிருக்கிறது . சம்ஸ்க்ருதத்தில் ‘மண்டோதரி’ என்பதைத் தமி்ழில் ‘வண்டோதரி’ என்கிறோம். ‘த்ரவிட’ என்பதையே ‘த்ரமிட’ என்றும் சொல்வதுண்டு. ‘ழ’ வும் ‘ள’ வும் மாறுவது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் ‘வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப்போறே’ என்று சொல்வார்கள். ‘ழ’ வுக்கும் ‘ள’ வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளதுதான் ‘ட’ வும். வேதத்திலேயே ‘அக்னிமீடே’ என்று வருவது ‘அக்னிமீளே’ என்றும் மாறுகிறது. இப்படித்தான் ‘தமிழ்’ என்பதில் உள்ள ‘ழ்’ ‘த்ரவிட்’ என்பதன் ‘ட்’ ஆக இருக்கிறது. த – ‘த்ர’வாகவும், மி – ‘வி’ யாகவும், ழ் – ‘ட்’ டாகவும் – மொத்தத்தில் ‘தமிழ்’ என்பது ‘த்ரவிட்’ என்றிருக்கிறது.”

இத்தனை ஆதாரங்களை காட்டியும் பலருக்கும் எழும் சந்தேகம். தமிழ் இலக்கியங்களில் ஏன் ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் இல்லை என்பது தான். இதற்கு இணையாக ‘தமிழ்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் உண்டா? எனும் கேள்வியும் எழுப்பப்படுகிறது. முதலில் தமிழ் எனும் சொல் தமிழிலக்கியங்களில் எத்தனை இடங்களில் வருகிறது என மேலோட்டமாக காண்போம்.

தொல்காப்பியத்தில் மட்டும் 5 இடங்களில் தமிழ் எனும் சொல் பயின்று வருகிறது. அது தவிர்த்து சங்க இலக்கியங்கள் என தற்போது பட்டியலிடப்படும் நூல்களில் மொத்தமாக 21 இடங்களில் தமிழ் எனும் சொல் காணப்படுகிறது. இதுபோக சிலம்பு – 24, மணிமேகலை – 5, திருமந்திரம் – 10 என கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் மட்டும் மொத்தம் 65+ இடங்களில் தமிழ் எனும் சொல் பயின்று வருகிறது. இது தவிர்த்து தொல்காப்பியம் தொட்டு கிபி 1900 வரை வெளிவந்த தமிழின் மிக முக்கியமான 33 நூல்களை மட்டும் எடுத்து தொகுத்து அவற்றில் மட்டும் 1205+ இடங்களில் தமிழ் எனும் சொல் பயின்று வந்திருப்பதாக கூறுகிறார் ஆசிரியர் பி. கிருஷ்ணன். பார்க்க : “தமிழ் நூல்களில் தமிழ் மொழி,தமிழ் இனம்,தமிழ்நாடுby பா.கிருஷ்ணன். இளந்தமிழர் பதிப்பகம். No.28, II Madley St, I.Nagar , Chennai – 600 017.

திராவிடம், திராவிடர் எனும் சொல்லானது சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல, இடைக்கால தமிழ் இலக்கியங்களில் கூட பயின்று வரவில்லை. ஏனெனில் தமிழை ‘தமிழ்’ என்றே சுட்டுவதற்கு சொல்லும், எழுத்தும், உச்சரிப்பும் தமிழரிடத்தில் இருக்கும்போது அதனை ‘திராவிடம்’ என சுட்டும் தேவை தமிழருக்கு எழவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வடமொழியாளர்களுக்கும் வேற்று இனத்தவர்களுக்கும் ‘ழகர’ உச்சரிப்பு சரிவர பயின்று வராமையால் அவர்கள் தமிழை திரித்து ‘த்ரமிள’, ‘த்ரமிட’ என்று உச்சரித்தனர். அதுவே பிற்காலத்தில் ‘திராவிடம்’ என்றானது. இதற்கு பல உதாரணங்களை தர முடியும். முதலில் சங்க இலக்கியம் வாயிலாக பார்ப்போம்.

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் ‘யவன‘ எனும் சொல் பயின்று வருகிறது. அது கிரேக்கர்களை சுட்டும் ஒரு சொல். ஆனால் உண்மையில் கிரேக்கர்கள் எங்கேயும் தங்களை ‘யவனர்’ என்று கூறிக்கொள்வதில்லை. வேற்று மொழியினர் அவர்களை சுட்டும் சொல்லாக மட்டுமே ‘யவன’ என்பது இருந்து வருகிறது. பண்டைய வடஇந்திய இலக்கியங்கள் ‘மிலேச்சர்கள்‘ என சிலரை பட்டியலிடும். அப்பட்டியலில் சாகாஸ், ஹுனாஸ் முதல் பிற்கால இஸ்லாமியர்கள் வரை அடக்கம். மிலேச்சர்கள் என்றால் வேதத்தை சாராதவர்கள் அல்லது காட்டுமிராண்டிகள் என பொருள். வேதத்தை சாராதவர்கள் வேதத்தை ஏற்றவர்களால் மிலேச்சர்கள் என சுட்டப்பட்டார்கள். பின்னாளில் பௌத்த நூல்களும் இஸ்லாமியர்களை மிலேச்சர்கள் என குறித்தது. ஆனால் இஸ்லாமியர்களும் சாகாஸ், ஹூனாஸ் போன்ற பிற இனத்தவர்களும் தங்களை மிலேச்சர்கள் என குறித்துக்கொள்ளவில்லை.

அதேபோல் கிபி 16ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வடமொழி கற்ற தமிழர்களும் வடமொழி வாயிலாகவே தமிழை ‘திராவிடம்’ என சுட்டியிருப்பது மேற்கண்ட சான்றுகள் மூலம் தெரிகிறது. அவ்வகையில் தான் தமிழ் பௌத்தத்தை நேசித்து பாலி மொழியை கற்றுத்தேர்ந்த மதிப்பிற்குரிய அயோத்தி தாசப் பண்டிதர் முதன்முதலாக அரசியல் ரீதியாக தமிழர்களை ‘திராவிடர்கள்‘ என பாலி மொழி வழியில் சுட்டினார். அவர் வடமொழி கற்றிருந்தனாலே தான் அவ்வாறு தமிழரை ‘திராவிடர்’ என சுட்டினாரேயன்றி அவற்றிற்கு வேறு காரணமில்லை.

இதற்கெல்லாம் வெகுபிற்காலத்தில் தான் கால்டுவெல் வருகிறார். மொழியியல் ரீதியாக திராவிடத்தினை தற்போதிருக்கும் நான்கு தென்மாநில மொழிக்கும் உரிய பெயராகவும், அவையனைத்தும் ஒரே குடும்பமாகவும் இருந்ததை காட்ட ‘திராவிட மொழி குடும்பம்’ என கூறினார். ஆனால் அது பிற்காலத்தில் திராவிட மொழி குடும்பத்தில் தமிழும் ஒரு மொழியாக இருந்தது என்பதாக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ‘திராவிட மொழி குடும்பம்’ என்பதும் ‘தமிழ் மொழி குடும்பம்’ என்பதும் ஒன்று தான். தமிழில் இருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து உருவானவைகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்றவைகள். இவற்றிற்கு தனியே முந்து திராவிடம் (Proto Dravida) என்று எதுவும் இல்லை. இவற்றை மிக எளிமையாக தொல்லியல் சான்றுகளுடன் விளக்கலாம்.

முந்து தமிழ் என்பதே தற்கால தொல்லியல் ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொண்ட வகையில் கிமு 600ஐ எட்டிவிட்டது. அது இன்னும் முன்னோக்கி செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிற திராவிட மொழி குடும்ப மொழிகளை எடுத்துக்கொள்ளுங்கள். கிபி 5ஆம் நூற்றாண்டு வாக்கில் உருவானது முந்து கன்னடம். முந்து கன்னடம் என்பதில் தமிழ் எழுத்துக்கள் பல உண்டு. (எகா) மகிழ்ந்து எனும் தமிழ் சொல் சாளுக்கிய விக்ரமாதித்தனின் காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டில் உண்டு. அது முந்து கன்னட கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடம் எப்போது செம்மைபடுத்தப்பட்ட மொழியாக எட்டுகிறது என்றால் அதற்கு இலக்கண, இலக்கியங்கள் படைக்கப்படும்போது தான். அப்படி பார்த்தால் கிபி8ஆம் நூற்றாண்டில் கன்னட இலக்கியமும் கிபி 10 ஆம் நூற்றாண்டில் தான் அதற்கு இலக்கணமும் படைக்கப்படுகிறது. அதன்பின்னரே அகராதிகள் உருவாக்கப்படுகிறது. கன்னடத்திற்கு பின்பு தெலுங்கு கிபி 10ஆம் நூற்றாண்டில் இலக்கியமும், கிபி 12-13 ஆம் நூற்றாண்டில் இலக்கண , அகராதிகளையும் பெறுகிறது. விஜயநகர-நாயக்கர் காலத்தில் தஞ்சையிலும், மைசூரிலும் தான் தெலுங்கில் செம்மையான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதாக வேங்கட ராவ் தனது, ‘Southern school of telugu literature‘ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

கிபி 14ஆம் நூற்றாண்டில் தான் மலையாள மொழி உருவானது. அதன்பின்னரே அம்மொழியில் செம்மையான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இப்படி ஆராயும்கால் தமிழ் மொழி குடும்பத்தில் இருந்து பிரிந்த மொழிகளே இவை என்பது எளிதில் புலப்படும்.

நாயக்கர்களுக்கும் நவாப்களுக்கும் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டனர். அவர்களை நாம் ‘ஆங்கிலேயர்கள்’ என்று அழைக்கிறோம். அதற்காக பிரிட்டிஷ்காரர்கள் வேறு, ஆங்கிலேயர்கள் வேறு என பிரித்து கூறமுடியாது. அப்படி கூறினால் அது எப்படி நகைப்புக்குறியதாகுமோ அதுபோல் தான் தமிழும் திராவிடமும் வேறு வேறு என்பது. இன்று தமிழகத்தில் வசிக்கும் அண்டை மாநிலத்தார் பலரும் தங்களை திராவிடர்கள் என கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அம்மாநிலத்தில் ஒருவரும் தங்களை ‘திராவிடர்’ எனக்கூறிக்கொள்வதில்லை. ஏனெனில் அது தமிழை மட்டுமே பல நூறு ஆண்டுகளாக சிறப்பாக குறித்ததேயன்றி கன்னட,தெலுங்கு, மலையாள மொழிகளை அல்ல. இத்தனைக்கும் ஒரு கன்னட அரசனே பல்லவ நாட்டினை ‘த்ரமிள நாடு’ என்கிறான். ஐம்பத்தாறு தேசங்களில் ஆந்திரம், கர்நாடகம் தனித்தனியாகவும் திராவிட தேசம் தனியாகவும் சுட்டப்படுகிறது. இப்படி அநேக தரவுகளை மேலே பட்டியலிட்டு பார்த்தோம். அதுபோக ‘பஞ்ச திராவிடா’ என்பதிலேயே தமிழகம் என்று தனியே ஒன்றில்லை. தெலுங்கர், கன்னடருடன் தான் திராவிடர் என்பது தனியே சுட்டப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் வைத்து பார்க்கும் போது தமிழர்கள் தான் திராவிடர்கள் என்றும், திராவிடம் எனும் சொல்லானது தமிழை தவிர்த்து தமிழ் மொழி குடும்பத்தை (திராவிட மொழி குடும்பத்தை) சேர்ந்த பிற மொழிகளுக்கே பொருந்தாது என்றும் புலனாகிறது.

முடிவாக வரலாற்றின் அடிப்படையில் ‘திராவிடர்’ என்போர் ‘தமிழர்’ தான் என்றாலும், தமிழர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்ள அவசியமில்லாமல் போனது என்றும், வடமொழி மீது பற்றுக் கொண்ட தமிழர்கள் சிலர், தமிழர்களை திராவிடர்கள் என அழைத்திருப்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.