திருவள்ளுவ பெருந்தகையாரின் வரலாறு தமிழ் சமூக வரலாற்றில் இன்றியமையாதது. அனைவருமே வள்ளுவரை பற்றி அறிந்திருப்போம். திருக்குறளை படித்து தெளிந்திருப்போம். ஆனால் வள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் இதுவரை வெளியான தரவுகளைக்கொண்டு சற்று வேறுபட்ட கோணத்தில் வள்ளுவ பெருந்தகையின் வரலாற்றினை இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

பிரான்சிஸ் வைட் எல்லீஸ் தான் திருக்குறளை முதன்முதலில் அச்சுவடிவில் பதிப்பித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என படித்திருப்போம். எல்லீஸ் அவர்களுக்கு திருக்குறள் சுவடிகளை வழங்கியவர் பூர்வகுடி தமிழரான அயோத்திதாசர் அவர்களின் பாட்டனார் திரு கந்தப்பன் ஆவார். அதற்கு முன்புவரையில் திருக்குறள் பற்றி தமிழ் சமூகம் அறிந்திருக்கவில்லை என்பது பலரது கூற்று. ஆனால் அது தவறானது. திருக்குறளை எல்லீஸ் பதிப்பித்ததும் மொழிபெயர்த்ததும் போற்றப்பட வேண்டியது. எல்லீஸ் அவர்கள் எடுப்பித்த இராயபேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் கிணற்று கல்வெட்டும், திண்டுக்கலில் அவரை நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை கல்வெட்டு வரியும் எல்லீஸ் அவர்களுக்கு திருக்குறள் மீதிருந்த பற்றினை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன. ஆனால் கிபி 1796இல் எல்லீஸ் அவர்கள் கிழக்கிந்திய கும்பனியின் ஊழியராக அவர் சென்னைப்பட்டினம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே (1794) கின்டர்ஸ்லே என்பவரால் எழுதிவெளியிடப்பட்ட Specimens of Hindoo Literature எனும் நூலில் திருவள்ளுவர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதையும் தாண்டி சில குறள்களுக்கு ஆங்கில விளக்கமும் பதியப்பட்டிருந்தன.

Kindersley புத்தகத்தின் முகப்பு

அதே நூலில் திருவள்ளுவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் (பறையர்) ஆகையால் அவரை பிராமணர்கள் முறையாக மரியாதை செலுத்தவில்லை. ஆனாலும் பிராமணர்கள் அமர்ந்திருந்த பலகை நீண்டதால் வேறொருவருக்கு இடமளிக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட அதனால் தான் வள்ளுவரை அரங்கேற்ற அரங்கில் அனுமதித்ததாக ஒரு செவிவழி கதையை பதிவு செய்கிறார். ஆனால் அப்போதே இதை பிராமணர்கள் ஏற்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயமும் உண்டு. அதாவது இந்து மத கடவுளர்களை பற்றியும் இந்து மத நூல்களையும் பட்டியலிட்ட புத்தகத்தில் திருவள்ளுவர் இடம்பெறுகிறார்.

From Specimens of Hindoo Literature

ஆனால் இந்த நூல் வெளியானபின் சென்னை வந்த எல்லீஸ் அதன்பிறகு திருக்குறள் ஓலைகளை சேகரித்து மொழிபெயர்த்து அச்சு வடிவில் வெளியிட்டார். ஆனாலும் அவர் திருக்குறளுக்கு முழுமையான உரையினை எழுதி முடிப்பதற்கு முன்னரே இறைவனடி சேர்ந்தார். பின்னாளில் அந்த உரையினை வெற்றிகரமாக முடித்துவைத்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தான். எல்லீஸ் அவர்கள் சேகரித்த பல ஓலைகளும் அவர் எழுதிய பல கட்டுரைகளும் சமையல்காரரின் கவனக்குறைவால் தீயில் கருகியதாக வால்டர் எலியட் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது Entirely lost and Destroyed என்றே எல்லீஸின் உழைப்பை குறிப்பிடுவார். இதனை பற்றி விரிவாக அறிந்துகொள்ள Languages and Nations – Conversations in Colonial South India by Thomas R.Trautmann எனும் நூலை பார்க்கவும்.

அதாவது எல்லீஸ் திருக்குறளை அச்சில் கொண்டு வந்தார். திருக்குறள் மீது பெரும் பற்றுக்கொண்டிருந்தார் என்பது உண்மையே. ஆனால் அவர் வள்ளுவரை சமணராக எதிலுமே குறிப்பிடவில்லை. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்பு எல்லீஸ் திருவள்ளுவருக்கு தங்க நாணயம் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாயின. இதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் மதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் அவர்கள் தான். அவர் மார்ச் 4, 1995 இல் தினமணி சுடரில் இதை பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்த கட்டுரையின் தகவலை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன்.

“திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும்.

கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ‘விஷ்ணு’வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் ‘விஷ்ணு’ என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசி வெளியிட்ட பல ‘நட்சத்திர பகோடா’ காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் ‘முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ’ இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது. இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட “நட்சத்திரப் பகோடா” அல்லது ‘வராகன்’ என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.”- ஐ.மகாதேவன்.

ஆக திருவள்ளுவர் உருவம் பொறித்து கிடைத்ததே 4 நாணயங்கள் தான்.அதில் ஒன்று கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. கல்கத்தாவிலும் லண்டனிலும் கிழக்கிந்திய கும்பனி அரசின் நாணயத்தில் வள்ளுவர் உருவம் இருந்ததா? 1813இல் தான் அச்சு பதிப்பையே செயல்படுத்துகிறார் எல்லீஸ். 1819 மார்ச் மாதமே இறைவனடி சேர்ந்தார். இடைப்பட்ட வருடங்களில் அவரால் திருக்குறளுக்கே முழுமையான உரையினை வழங்கமுடியாமல் போனது அப்படியிருக்க தங்க நாணயத்தில் வள்ளுவரை அவர் பொறித்தாரா? வள்ளுவர் அவருக்கு முன்பான காலம் வரை இந்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது எல்லீஸ் ஏன் அவரை சமணராக வடிவமைக்க வேண்டும்? இதெல்லாம் தாண்டி அந்த நாணயம் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட கிடைக்கவில்லையே. சென்னை நாணய அச்சு மையத்தில் கூட கிடைக்காமல் போனது ஆச்சரியமளிக்கிறது. நமக்கு இதுபோன்ற பல கேள்விகள் எழுந்தாலும் அதனை விடுத்து வேறு இடங்களில் இருந்து கிடைக்கும் தரவுகளை பார்ப்போம்.

கிபி 19 ஆம் நூற்றாண்டில் சைவர்களால் மயிலாப்பூரில் வள்ளுவருக்கு கோவில் எடுக்கப்பட்டது/புதுப்பிக்கப்பட்டது. அதனருகில் அகழ்வாய்வு செய்தபோது கிபி 14-15ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருவள்ளுவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வாளர் திரு சா.கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்,

“இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. தியான நிலையில் வலக்கை சின் முத்திரையுடன் அக்க மாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன.”

மயிலை அகழ்வாய்வில் கிடைத்த வள்ளுவர் சிலை.

இது இப்போதைய திருவள்ளுவர் உருவத்தை ஏறத்தாழ அடியொற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் சைவர் என கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் அநேக நூல்கள் வெளியாகியிருக்கின்றன. தத்துவ ரீதியில் அதனை விளக்கி எழுதியோரும் உண்டு. ஆனால் கிபி 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது தேவாரத்தின் திருநெல்வாயில் அரத்துறை பதிகத்தில் திருக்குறள் வரிகளை சுட்டிக்காட்டி அதனை சிவனுடன் தொடர்புபடுத்தி பாடுகிறார். எடுத்துக்காட்டாக ,

“அற்றார் பிறவிக்கடல் நீந்திஏறி”

“அகரம்முத லின்எழுத் தாகிநின்றாய்”

“உறங்கிவிழித் தால்ஒக்கும் இப்பிறவி”

இதேபோல் சைவ சித்தாந்த சாத்திர நூல்களான சிவஞானபோத வர்த்திகத்திலும் திருக்குறள் சொற்றொடர்களை மெய்கண்டார் ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார். பிற சாத்திர நூல்களான இருபா இருபது போன்றவற்றிலும் பண்டார சாத்திரத்திலும் கூட அந்தந்த ஆசிரியர்களால் திருக்குறள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

யான் எனதென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” எனும் திருக்குறளை கொண்டு சிவஞானபோதத்தில் மெய்கண்டார் இவ்வாறு எழுதுகிறார்,

“ஏகனாகி நிற்கவே யான் எனதென்னும் செருக்கற்று அவனது சீபாதத்தின் அணையுமாதலின்”

இதேபோல் சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் மற்றொரு நூலான இருபா இருபது “சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மையறிந்து” எனும் திருக்குறளை பின்வருமாறு சுட்டுகிறது,

” சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச் சொல்லே சொல்லுக சொல் இறந்தாயோ”

இவையெல்லாம் கூட ஏதோ வலிந்து திருக்குறளுடன் தொடர்புபடுத்தி எழுதியதாக தோன்றலாம். ஆனால் உமாபதி சிவாச்சாரியார் நேரடியாக தனது நெஞ்சு விடு தூதில் திருவள்ளுவர் என்றே சுட்டுகிறார். அதாவது,

நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் – ஐவர்க்கு
மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல்
பாவமெனும் பெளவப்பரப்பழுந்திப் – பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்
குண்மை யறிவுணர்ச்சி யோராமல்”

இவையன்றி பண்டார சாத்திரமான “சித்தாந்த சிகாமணி” எனும் நூல் திருவாவடுதுறை ஆதினத்தின் 3வது குருமகாசன்னிதானம் அம்பலவான தேசிகர் சைவத்தில் பிறப்பால் சாதி என்பதையும் வர்ணபேதத்தையும் எதிர்த்து எழுத ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ குறளையும் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான்’ எனும் குறளையும் நேரடியாகவே சுட்டியிருப்பார்.

ஆகவே எட்டாம் நூற்றாண்டு சுந்தரர் முதல் 14-15ஆம் நூற்றாண்டு வரையிலும் சைவர்கள் திருக்குறளை அறிந்திருக்கிறார்கள். அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்தினை அடியொற்றி எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவு. ஆகவே தான் மயிலாப்பூரில் அகழ்வாய்வு செய்தபோது கையில் அக்கமாலையுடனும் ஓலைசுவடியுடனும் தமிழ் புலவரை போன்றே திருவள்ளுவர் சிலை கிடைத்திருக்கிறது என்பதை அறியலாம். இதன் காரணமாகவே தான் கிண்டர்ஸ்லே தனது நூலில் திருவள்ளுவரை இந்து மதத்தின் பட்டியலில் சேர்த்து எழுதிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் எழுதப்பட்ட காலத்துக்கு சற்றுமுன்னான காலத்தில் தான் பரிமேலழகர் திருக்குறளுக்கு உரையெழுதியிருந்தார். அதில்,

“கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” எனும் குறளுக்கு சிவாகமங்களை கொண்டு உரையெழுதியிருப்பார். அதாவது எண்குணத்தான் எனும் வார்த்தைக்கு ஆகமம் கொண்டு உரையெழுதுகிறார். இதனை மு.அருணாசலம் அவர்களும் சுட்டிக்காட்டியிருப்பார்.

பரிமேலழகர் வைணவராகினும் திருக்குறளுக்கு சிவாகமங்கள் கொண்டு விளக்கம் அளித்தமை இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் சுந்தரர் முதல் கடந்த நூற்றாண்டு வரையும் திருக்குறளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததே சைவர்கள் தான் என்பது தெளிவு. அதற்கான தொல்லியல் சான்றும் கிடைத்திருக்கிறது.

ஆனால் சமண மதவாசரான குந்தகுந்தரின் புராணங்கள் பிரபலமடைந்தது கிபி 12ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் தான். ஆந்திர தேசத்தில் அவர் பிறந்ததாக ஒரு கல்வெட்டு நேரடியாக குறிப்பிடுகிறது. அக்கல்வெட்டு கிபி 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. கர்நாடகத்தில் வைணவ-ஜைன கூட்டணி உண்டான பின் சமணமும் திருக்குறளை எடுத்துக்கொண்டது என்பதாக தான் பொருள் கொள்ளவேண்டியுள்ளது.

கிபி 12ஆம் நூற்றாண்டு புராணமான குந்தகுந்தரையும் எல்லீஸ் வெளியிட்டதாக நேரடி சான்றுகள் அற்ற தங்க காசையும் கொண்டு தான் திருக்குறள், திருவள்ளுவர் என அனைத்தும் சமணம் சார்ந்ததாக மக்களின் பொதுபுத்தியில் இருந்து வருகிறது. ஆனால் சைவ இலக்கியங்களோ அநேக தரவுகளை திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறது என்பதை படித்து தெளியும் போது தான் பல விடயங்கள் மறைமுகமாக புரிகின்றன.