இந்திய அளவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயக சதுர்த்தி. சிவனின் மகனாக அறியப்படும் மூத்த பிள்ளையாரின் வரலாறானது இந்தியா மட்டுமல்லாது தென்கிழக்காசிய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. குறிப்பாக இந்தோனேசியா, ஜாவா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை காணலாம். கணங்களின் பதியாக வேதத்திலும், சிவனின் மகனாக சைவத்திலும், அவலோகிதரின் வடிவமாக பௌத்தத்திலும், இடர் தீர்க்கும் தெய்வமாக ஜைனத்திலும் வருகிறார் கரிமுக கடவுளான விநாயகர். இக்கட்டுரை விநாயகரின் வரலாற்றையும் அரசியலையும் தனித்தனியாக தெளிவுபடுத்த முயற்சிக்கிறது.

பிள்ளையார்பட்டிகிபி 5ஆம் நூற்றாண்டு

பண்டைய இந்திய சமயங்கள் கடவுளர்களை பங்குபோட்டுக்கொண்டன என்பதற்கு பல தரவுகளை காட்ட முடியும். ஏற்கனவே கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் ஓரளவு இதனை புரிந்துக்கொண்டிருப்போம். தசாவதாரத்தில் முன்பு புத்தரும் திருமாலின் அவதாரமாக இருந்திருப்பது மறுக்க முடியாத ஒன்று. அதுபோல் விநாயகரும் விதிவிலக்கல்ல. சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்களிலும் ஜைனம், பௌத்தம் போன்ற அவைதீக சமயங்களிலும் விநாயகர் இதே தோற்றத்துடனே காட்சியளிக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவில் விநாயகருக்கான முதல் வரலாற்று சான்று மத்தியபிரதேசத்தில் உள்ள உதயகிரி குடைவரையில் இருப்பவர் தான் என இதுவரை பல அறிஞர்கள் கூறிவந்திருக்கிறார்கள். கிபி 5ஆம் நூற்றாண்டை சேர்ந்த குப்தர் காலத்திய கலைப்பாணியில் கணபதி காட்சியளிப்பார். இதைக்கொண்டு பல வரலாற்றாளர்களும் கிபி 5ஆம் நூற்றாண்டுக்கு பின்பே விநாயகர் வழிபாடு பிரசித்தி பெற்றதாக கூறுவர். ஆனால் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆலக்கிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த பிள்ளையார் சிலையானது கிபி 4-5ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக அச்சிலையின் கீழுள்ள வட்டெழுத்து கல்வெட்டை கொண்டு கூறுகிறார்கள் தமிழக வரலாற்றாளர்கள். அக்கல்வெட்டில்,

பிரமிறை பன்னூற- சேவிக- மகன்- கிழார்- கோன்- கொடுவித்து”

ஆலக்கிராமம் பிள்ளையார் – கிபி 5ஆம் நூற்றாண்டு

எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். ஏறத்தாழ இதே காலகட்டத்தை சேர்ந்ததாகவோ அல்லது இதற்கு அடுத்த சிலகால இடைவெளியிலோ தான் பிள்ளையார்பட்டி குடைவரை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பிள்ளையார்பட்டியில் கிடைக்கும் வட்டெழுத்து கல்வெட்டும் ஆலக்கிராமம் வட்டெழுத்து கல்வெட்டும் ஒரேமாதிரியான எழுத்து வடிவத்தை கொண்டுள்ளது. பிள்ளையார்பட்டி கல்வெட்டில்,

“எக்காட்டூரூ க்கோன் பெருந்த(ச்)சன்” 

பிள்ளையார்பட்டி கல்வெட்டு

என பொறிக்கப்பட்டுள்ளது. கிபி 5ஆம் நூற்றாண்டுக்கு பின்னும் பரவலாக பிள்ளையார் கிடைப்பது தமிழகத்தில் தான் என்றால் அது மிகையல்ல. மகேந்திர பல்லவனின் காலத்தியதாக கருதப்படும் வல்லம் குடைவரையிலும், திருச்சிராப்பள்ளியின் கீழ்குடைவரையிலும், இராஜசிம்ம பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும் என கிபி 6,7ஆம் நூற்றாண்டில் விநாயகர் சற்று பிரபலமான கடவுளாகவே இருந்திருக்கிறார் என தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் எங்குமே காணப்படாத விநாயகர் பற்றிய குறிப்பானது, தேவாரத்தில் அப்பர், சம்பந்தர் என இருவரின் பதிகங்களிலும் ஓரிரு இடங்களில் காணப்படுகிறது. இன்று கூறப்படும் புராணத்தை போல் அல்லாது, சம்பந்தர் கணபதியின் வரலாற்றை சற்று தெளிவாகவே குறிப்பிடுகிறார். அதாவது உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), ‘தந்த மதத்தவன் தாதை’ (1:115:2), ‘மறுப்புறுவன் தாதை’ (1:117:8), ‘கரியின் மாமுகமுடைய கணபதி தாதை’ (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.

நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் ‘கைவேழ முகத்தவனைப் படைத்தார்’ (6:53:4), ‘வினாயகர் தோன்றக் கண்டேன்’ (6:77:8), ‘ஆனைமுகற்கு அப்பன்’ (6:74:7), ‘கணபதி என்னும் களிறு’ (4:2:5) என பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).

இதேபோல் வைணவத்திலும் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் விநாயகர் வணங்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழகத்திலும் தமிழ் இலக்கியத்திலும் கிடைத்த தரவுகளை கொண்டு பார்த்தோம். இனி வடநாட்டு அறிஞர்கள் விநாயகர் குறித்து எழுதியுள்ள கருத்தினை காண்போம்.

கம்போடியா விநாயகர் (கெமர்) – கிபி 11ஆம் நூற்றாண்டு

தேவிபிரசாத் சாட்டோபாத்யாயா தனது உலகாய்தத்தில் விநாயகரை தாந்த்ரீக கடவுள் என சுட்டுவார். பேய், பிசாசு போன்ற கெட்டவைகளை போக்கும் கடவுளாகவும் பழங்குடிகளின் தலைவராகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ஆனால் பண்டார்க்கர் தனது Vaishnavism, Saivism and minor religious systems எனும் நூலில் சற்று மேலதிக தகவல்களை கொட்டியிருக்கிறார்.

அதர்வண வேதத்திற்கு எழுதிய உபநிடதமான அதர்வசிராஸ் உபநிடதத்தில் ருத்ரன் பல கடவுளாக அடையாளப்படுத்தப்படுகிறார். அதில் ஒரு கடவுளின் பெயர் விநாயகர். மகாபாரதத்தில் கணேஷ்வரா, விநாயகா போன்றவர்கள் தனித்தனி கடவுளாகவும் அதே சமயம் ஒரே குணங்களை கொண்டவர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். அதாவது இருவரும் மனிதர்களிடம் இருக்கும் தீய சக்திகளை விரட்டும் குணம் படைத்தவர்கள்.

மணவக்ரய சூத்திரத்தில் விநாயகர் பற்றிய குறிப்புண்டு. அதில் நான்கு விநாயகர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் முறையே 1. சாலகடன்கா 2. குஸ்மண்டராஜபுத்ரா 3. உஸ்மிதா 4. தேவயஜனா.

இவற்றை தொடர்ந்து பூமியை அறுத்து, புற்களை வெட்டி, உடலில் எழுதி, கனவில் தோன்றி,  ஒருவருக்கு பின்னால் இருந்து மாய பிம்பங்களை உருவாக்கி, அவரை காற்றில் இருந்து ஏதோ இழுப்பது போன்றும், மொட்டை தலை ஆள், ஒட்டகங்கள், பன்றிகள், நாய்கள் போன்றவைகள் ஒருவரை பின்தொடர்வது போலவும் தோன்றினால் அது நிச்சயம் விநாயகரின் வேலையாக இருக்குமாம். அவற்றை போக்க சில வழிமுறைகளை இந்த சூத்திரம் கூறுகிறது. அதாவது குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நபர் நான்கு இடங்களில் இருந்து மண்ணை கொண்டு வந்து தனித்தனியாக நான்கு பிள்ளையார் செய்து, நான்கு ஆறுகளின் நீரில் அவரை குளிப்பாட்டி இந்த நான்கு விநாயகரையும் பூஜித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் மாமிச கறிகளையும் மதுபானங்களையும் படைத்து  நான்கு பெரிய கூடையில் அவற்றை போட்டு நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் வைத்து பேய் ஓட்ட வேண்டுமாம்.  அப்படி செய்தால் விநாயகரால் துரத்தப்பட்ட மனிதர் குணமடைவராம்.

இதே சடங்கை யஜ்னவால்கிய ஸ்மிருதியும் கூறுகிறது. அதாவது சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஒன்று தான். ஆனால் சூத்திரம் குறிப்பிட்ட நான்கு தனிதனி விநாயகர்கள் ஒரே நபராகவும் அவரின் தாய் அம்பிகையாகவும் ஸ்மிருதி கூறுகிறது. இதனால் சூத்திரங்களின் காலம் மிகப்பழையது என்றும் ஸ்மிருதி பின்பு உருவானது என்பதையும் பண்டார்க்கர் தெளிவுபடுத்துகிறார்.

ஜாவாவில் விநாயகர் – கிபி 9ஆம் நூற்றாண்டு

விநாயகர் குறித்த முதல் கல்வெட்டு ஜோத்பூர் அருகே காட்டியாலாவில் கிடைத்ததாம். அங்குள்ள கோவிலில் நான்கு திசைகளுக்கு நான்கு விநாயகர் சிற்பமும் கல்வெட்டில் விநாயகர் வணக்கம் குறித்திருப்பதாகவும், அக்கல்வெட்டு கிபி 862 ஆம் ஆண்டை சேர்ந்தது என்கிறார் பண்டார்க்கர். ஆனால் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே வேளுப்புரு தூண் கல்வெட்டு விஷ்ணுகுந்தின் வம்சத்தை சேர்ந்த முதலாம் மாதவவர்மன் (கிபி 483) காலத்தை சேர்ந்தது. அதில் தந்திமுக கடவுளுக்கு சிலையெடுத்த தகவல்கள் கிடைக்கின்றன. கல்வெட்டின் கடைசி வரியில் ‘விநாயகம் நமஸ்யண்டி’ என முடிகிறது. (பார்க்க Epigraphia Indica Vol 37, ins no 21)

விநாயகருக்கு ஏன் யானை தலை வந்தது என்பது குறித்த கதை சூத்திரத்திலோ ஸ்மிருதியிலோ இல்லை. ஆனால் எல்லோராவில் கிடைத்த விநாயகர் உருவத்தில் யானை தலை இருப்பதாகவும் பாவாபூதியின் ‘மாலதி மாதவா’ நாடகத்திலும் யானை தலை விநாயகர் குறித்து வரும் தகவலை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் ருத்ரனோடு மட்டுமே விநாயகர் ஆரம்பத்தில் இருந்திருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்களை முன்னிருத்துகிறார் பண்டார்க்கர்.

மேலும் ரிக் வேதத்தில் வருபவர் பிரகஸ்பதி தான் என்றும் அவரை கணபதியுடன் தொடர்புபடுத்துவது தவறு என்றும் கூறுகிறார் அவர்.

அனந்தகிரி அவரது சம்கரதிக்விஜயத்தில் ஆறு வகையான கணாபத்யம் குறித்து விளக்கியிருக்கிறார். மிக பின்னாளில் வந்த கிரிஜசுத்தத்தில் மகாகணபதி என்று குறிப்பிடப்படுகிறார் விநாயகர். அதில் தான் பிரம்மா உலகை அழித்த கதை. விநாயகர் பிரம்மாவை அழித்த கதை எல்லாம் வருகிறது. ஹேரம்பசுத்தத்தில் உச்சிஷ்ட கணபதி வருகிறார். அதுவும் வாமாசார வழியில் சக்தி வழிபாட்டின் கௌல முறையில் வருவதாக பண்டார்க்கர் முடிக்கிறார். தேவிபிரசாத் சாட்டோபாத்யாவும் சரி பண்டார்க்கரும் சரி தாந்த்ரீக வழியில் தான் விநாயகரை நிறுவியிருக்கிறார்கள்.

இதனடிப்படையில் பார்த்தால் கிபி 5-6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய சிற்பத்தொகுதியில் தவ்வைக்கு அருகே பிள்ளையார் காணப்படுகிறார். அதோடு இராஜசிம்மன் காலத்திய காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலும் சப்தமாதர்களுடன் காணப்படுவார் விநாயகர். சப்தமாதர்களுடன் விநாயகரும் வீணாதர தட்சிணாமூர்த்தியும் வருவது சோழர் காலம் வரையிலும் இருந்த மரபு தான்.

தாந்த்ரீக வழியில் குண்டலினியை எழுப்பும் விடயங்களை தான் விநாயகர் அகவல் கூறுகிறது என்பதை யோக கலையில் பிரசித்தி பெற்றோர் கூறுவர். அதேசமயம் சைவத்தில் ‘பிள்ளையார் சுழி’க்கான தத்துவார்த்தமான விளக்கங்கள் உண்டு. அதற்கென பிரமாணங்களும் உண்டு. விநாயகி என்ற பெண்பாற் உருவமும் கூட தமிழகத்தில் சில கோவில்களில் உண்டு. அதேசமயம் மனித தலையுடனும் கூட விநாயகர் உருவங்கள் உண்டு. அதனை நரமுக கணபதி என்பர். இவற்றை விரித்து வேறொரு சமயம் பார்ப்போம்.

இந்தோனேசியாவில் தாந்த்ரீக விநாயகர்13ஆம் நூற்றாண்டு

வாதாபியில் இருந்து சிறுதொண்டநாயனார் மூலமே தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு வந்தது என்பது கல்கி அவர்கள் எழுதிய புனைவு நூலான சிவகாமி சபதம் தரும் செய்தியே தவிர அதற்கு வரலாற்று சான்றுகள் ஏதுமில்லை. இக்கூற்று உண்மையே ஆனாலும் வாதாபி கொண்ட நரசிம்மனுக்கு முற்பட்ட காலத்திலேயே பிள்ளையார் உருவங்கள் கிடைப்பதை ஏற்கனவே போதுமான சான்றுகளுடன் பார்த்துவிட்டோம். உண்மையில் வட இந்தியாவில் தான் விநாயகர் பிற்காலத்தில் புகழ்பெறுகிறார். நிற்க!

இனி பௌத்த, ஜைன சமயங்களில் விநாயகர் குறித்து சுருக்கமாக காண்போம். மகாயான பௌத்தத்திலும் தாந்திரீக வழியில் தான் விநாயகர் வருகிறார். நேபாளம், தாய்லாந்து, சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பௌத்த விநாயகர் பரவலாக காணப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் சீனாவில் யானைத்தலை கடவுள் உருவம் கிபி 6ஆம் நூற்றாண்டு முதலே கிடைப்பதாக சீன அறிஞர்கள் கூறுகிறார்கள். கையில் முள்ளங்கியுடன் ஜப்பானில் காட்சியளிக்கும் கணேசனின் பௌத்த பெயர் Kangiten.

ஜப்பானில் காணப்படும் பௌத்த விநாயகர்

தாந்த்ரீக பௌத்தத்திலும் இடர்களை களையும் தெய்வமாகவும் தீய சக்திகளை விரட்டும் சக்தி படைத்தவராகவும் தான் விநாயகர் குறிக்கப்படுகிறார். அதேசமயம் செல்வமும் வளமும் பெருக்கும் தெய்வமாக ஆர்ய மகாகணபதி என மகாயான பௌத்தம் போற்றுகிறது. கணபதியை ஆரியராக குறிக்கும் ஒரே சமயம் பௌத்தமே. ‘ஆர்ய மஹாகணபதி ஹிருதய மந்த்ரா’ என்றொரு தனி ஸ்லோகமே மகாயான பௌத்தத்தில் உண்டு.

சைவ தாந்த்ரீகத்திலும் கூட வளம் கொழிக்கும் தெய்வமாக காட்டவே அவரது உருவம் பருத்து காணப்படுகிறது. இதுபோல் குபேரன், தவ்வை (மூத்த தேவி) போன்ற தெய்வங்களை வளம் கொழிக்கும் தெய்வமாக காட்ட இதுபோன்ற பருத்த உருவ அமைப்பை கொடுத்திருப்பர்.  பல்லவர் காலத்தில் தவ்வையுடன் விநாயகர் காணப்படுவதை இதனுடன் இணைத்து அறியலாம்.

ஜைனத்தில் கிபி 9ஆம் நூற்றாண்டு முதலே கணபதி காணப்படுகிறார். இதுவும் ஸ்வேதாம்பர ஜைன கோவில்களில் மட்டுமே காணப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் போன்ற ஸ்வேதாம்பர ஜைனம் செழித்த பகுதிகளில் ஜைன பாஸ்திகளில் கணபதியை காண முடிகிறது. கிபி 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குஜராத்திய ஹேமச்சந்திர ஆச்சார்யா எனப்படும் ஸ்வேதாம்பர ஜைன துறவி எழுதிய ‘அபிதானசிந்தாமணி’யில் கணபதி குறித்த தகவல்களை தருகிறார்.

ஜைன விநாயகர் (குஜராத்) – கிபி 11ஆம் நூற்றாண்டு

பௌத்தத்தில் இருந்த அளவிற்கு ஜைனத்தில் விநாயகர் பிரபலமானவர் இல்லை எனினும் ஹேமச்சந்திர ஆச்சாரியருக்கு பிறகு (கிபி 12ஆம் நூற்றாண்டு) மிக வேகமாக ஜைனத்தில் விநாயகர் வழிபடும் தெய்வமானார். ஏனெனில் ஹேமச்சந்திர ஆச்சாரியார் ஏற்கனவே தாந்த்ரீக தெய்வங்களை ஜைனத்தினுள் இணைத்து பலி முதலான சடங்குகளை தவிர்த்தார் என்பதை ‘கடவுளுக்கே மதமாற்றம்’ என்ற தலைப்பில் முன்னொருமுறை விரிவாக பார்த்திருக்கிறோம்.

இதுவரை விநாயகர் குறித்த வரலாற்று தகவல்களை பார்த்தோம். இனி அவரை வைத்து செய்யப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை மேலோட்டமாக காண்போம். விநாயகர் இந்திய சமயங்களின் பொதுவான தெய்வமாக இருந்தமையால் விஜயநகர காலத்தில் ஏற்பட்ட இந்திய சமயங்களின் ஒருங்கிணைப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைந்துவிட்டார். புறச்சமய தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த அதிதீவிர ஒருங்கிணைப்பிற்கு சைவ, வைணவ, பௌத்த, ஜைன மதங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வமாக முழுமுதற் கடவுள் விநாயகர் முன்னிருத்தப்பட்டார். ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காக பாலகங்காதர திலகர் விநாயகரை முன்னிருத்தி பரவலான இந்திய மக்களை ஒன்றுதிரட்ட ஏற்படுத்திய பண்டிகையே விநாயக சதுர்த்தி. இதுவே இந்தியா முழுமைக்கும் விநாயக சதுர்த்தி என்கிற பண்டிகை ஒருசேர கொண்டாடப்படுவதற்கான காரணமாக அமைந்தது எனலாம். அன்று ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை குலைக்க ஏற்படுத்தப்பட்ட சதுர்த்தி பண்டிகையானது இன்று இந்திய மத அரசியலை கையிலெடுக்க உதவுகிறது.

சைவர்கள் இறைவனுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்பர். சைவ பின்னணியில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என பலரும் விநாயகரை வழிபட்டிருக்கிறார்கள் என்றாலும் விநாயக சதுர்த்தி கொண்டாடிய தகவல்கள் எங்குமே கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

விநாயக சதுர்த்தியானது பிற்காலத்திய பண்டிகை என்றாலும், எளிய முறையில் களி மண்ணில் செய்யப்பட்ட சிறிய அளவிலான பிள்ளையாரை கொண்டு பலகாரங்கள் படைத்து சொந்த பந்தங்களுடன் கொண்டாடுவது போற்றத்தக்கது தான். விநாயகர் அரசியலை கையிலெடுக்காமல் விநாயகரின் வரலாற்றை கையிலெடுத்து கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறி முடிக்கிறேன். நன்றி வணக்கம்!