வேத மரபில் இருந்து சைவ மரபிற்கு மாறிய நாயனார்!
சைவ சமயம் வேதத்தை பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆகமத்தை தான் சிறப்பு நூலாக கொண்டுள்ளது. அதாவது ஆகமம் தான் பிரமாண நூல். அதில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே சடங்குகளாக சைவம் ஏற்கும். வேத மரபிற்கும் ஆகம மரபிற்குமான இருபெரும் வேறுபாடுகளில் ஒன்று கடவுள் உருவங்கள் தான். வேத மரபு என்பது வேதத்தில் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வழிபாடுகள் செய்வது. இதில் கடவுளுக்கு உருவங்கள் கிடையாது. வேள்வித்தீயில் இறைவன் இருப்பதாக நம்புவார்கள். ஆகையால் தான் வேள்வி அவர்களுக்கு முக்கியமானதாகிறது.

இவ்வாறு வேள்வி செய்வதில் இறைவனுக்கு விலங்குகளை பலியிடுதல் வேண்டும். இதேபோல் கடவுளை உருவமாக ஏற்கும் குலதெய்வ சடங்குகளிலும் பெரு மத தாந்த்ரீக சடங்குகளிலும் கூட பலி கொடுப்பது வழக்கம். ஆனால் வேத மரபில் விலங்கு பலியை அந்த வேள்வித்தீயில் போட்டு விட வேண்டும். அவ்வாறு வேள்வியில் இடுவதால் அதை இறைவனுக்கு கொடுத்ததாக பொருள். இப்படி இறைவனுக்கு கொடுக்கும் வழக்கத்திற்கு அவிர்பாகம் என்று பெயர்.
ஆகம வழி சைவ, வைணவ கோவில்களிலும் (இங்கு பலி என்பது சைவ உணவுகளே) குலதெய்வ கோவில்களிலும் சாக்தம் முதலான பெரு மதங்களிலும் (இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் உண்டு) கடவுளுக்கு விலங்கு பலியிட்டு அந்த ஊனை சமைத்து நம் வீட்டுக்கு வந்த உறவினருக்கு படையல் இடுவதுபோல் கடவுளுக்கு அதனை வைத்து வழிபட்ட பின் பகிர்ந்து உண்போம். இதுவும் இறைவன் உண்ட பின் நாம் பகிர்ந்து உண்பதாக கருதி செய்யப்படும் வழக்கம் தான்.
இந்த வேள்வியில் பலிகொடுக்கும் சடங்கை பற்றி தெய்வத்தின் குரலில் காஞ்சி சங்கராச்சாரியார் குறிப்பிடும்போது அவ்வாறு பலிகொடுப்பது தர்மம் என்கிறார். அதாவது வேள்வியில் கடவுளுக்கு அசைவமும் அதே கடவுளை வணங்கும் மாந்தர்களுக்கு சைவமும் என பாகுபாடு காட்டுவது எந்தவிதத்தில் சரி என்பது அவருக்கே வெளிச்சம். சரி இவற்றை விடுவோம்.

அது என்ன வேத மரபில் இருந்து சைவ மரபிற்கு மாறிய நாயனார்? அப்படி ஒரு கதை இருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயமாக உண்டு. ஏற்கனவே இப்படி வேறொரு சமயத்தில் இருந்து சைவம் சார்ந்த பல கதைகள் வரலாற்றில் இருக்கின்றன. அதில் பௌத்த மதம் தழுவி அதில் இருந்தே சைவத்தின் உண்மை பொருளை விளங்கிக்கொண்டு பௌத்ததில் இருந்தவாறே சைவத்தில் வீடுபேறு பெற்றவர் சாக்கிய நாயனார் என்பதை பெரிய புராணம் வாயிலாக அறிந்திருப்போம். அதேபோல் வேத மரபில் இருந்து சைவ சமயத்திற்கு தாவிய நாயனாரின் புராணமும் மிகவும் கவனிக்கத்தக்கது.
யஜூர் வேதத்தினை கற்றறிந்த பின் உலக நன்மைக்காக ஆறு அல்லது ஏழு நாட்கள் இடைவிடாது 16 வேதியர்களை கொண்டு செய்யும் யாகத்திற்கு பெயர் தான் சோம யாகம். வழக்கமாக வேதம் குறிப்பிடும் பல்வேறு யாகத்திற்கும் பலியிடுதல் உண்டு. அதேபோல் சோம யாகத்திற்கும் விலங்கு பலி உண்டு. இதை தாண்டி பிரதானமாக இந்த யாகத்தில் சோம ரசத்தை இறைவனுக்கு கொடுக்க வேண்டும். சோம ரசம் என்பது வேறொன்றும் இல்லை இன்றைய வழக்கில் மது தான். சோம யாகத்தின் இறைவன் யார்? என்றால் அவர் பிரஜாபதி. பிரஜாபதி எனும் பெயருக்கே Sacrifice என்பது தான் பொருள். இவ்வாறு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பலிகளை கொடுத்து பல வேதியர்களை கொண்டு பல யாக குண்டங்கள் அமைத்து செய்யும் இந்த சோம வேள்விக்கு அதிக பொருட் செலவு ஆகும். ஆகையால் தான் சோம யாகம் செய்தவர்கள் ‘சோமயாஜி’ என தங்கள் பெயருக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வைத்துக்கொள்வார்கள். இதேபோல் மெக்கா – மதினா சென்றுவந்த இஸ்லாமியர்களும் கூட ஒரு பட்டம் போட்டுக்கொள்வார்கள் என்பதை அறிந்திருப்போம்.

இவ்வாறு பல சோமயாகங்கள் செய்தவர் தான் சோமாசிமாற நாயனார். மாறன் என்பது அவரது இயற்பெயர். சோம யாகம் செய்ததால் சோமாசிமாறர். அப்படி ஒருமுறை சோமயாகம் செய்யும்போது அதில் சிவபரத்துவத்தை உணரவேண்டும் என ஆசைபடுகிறார். அதாவது சிவனை அந்த வேள்வியில் காணவேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் பலமுறை முயன்றும் சிவன் அவருக்கு காட்சித்தரவில்லை. ஆகையால் தம்பிரான் தோழனான சுந்தரரை அணுகி அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது விருப்பத்தை சுந்தரரிடம் தெரிவிக்கிறார். சுந்தரரும் அதற்கு இணங்க, ஒருநாள் சோம வேள்வி செய்ய ஏற்பாடுகள் அமோகமாக நடைபெறுகிறது. 16 வேதியர்களுடனும் பல யாக குண்டங்களுடன் தொடர்ச்சியாக சில நாட்கள் அந்த யாகம் நடைபெற்றுவருகிறது.

சிவன் புலையராக வேடம்பூண்டு தனது தோளில் இறந்த கன்றுக்குட்டி(நந்தி) ஒன்றை தூக்கிக்கொண்டு கூடவே கள் குடத்தை தூக்கியபடி உமையம்மையையும் தனது குழந்தைகளான விநாயகர், முருகனையும் அழைத்துக்கொண்டு இந்த யாகசாலையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார். நான்கு நாய்கள் நான்கு வேதங்களாக அவருக்கு முன்னும் பின்னும் வருகின்றன. இதனை கண்ட யாகசாலைகளில் இருந்த வேதியர்கள் அலறி ஓடுகிறார்கள். சோமாசிமாறர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். ஏனெனில் யாகசாலை அருகே புலையர்கள் வரக்கூடாது என்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் சுந்தரரும் விநாயகரும் வந்திருப்பவர் சிவபெருமான் தான் என சோமாசிமாறருக்கு குறிப்பால் உணர்த்துகிறார்கள். பின் சுதாரித்துக்கொண்ட சோமாசிமாறர், யாக குண்டலத்தில் இறைவனுக்கு படையலாக கொடுத்திருக்க வேண்டிய அவிர்பாகத்தை புலையராக வந்த சிவபெருமானுக்கு நேரிலேயே வழங்கிவிடுகிறார்.

சிவபெருமான் வேள்வி செய்வோருக்கு காட்சிதராமல் போகவில்லை. புறச்சமயத்தார்களை எதிர்ப்பதல்ல சைவத்தின் பணி. சிவபரத்துவத்தை புறச்சமயத்தாருக்கும் உணர்த்துவது தான் சைவத்தின் பணி. ஆகவே சைவத்தில் வர்ணமும் சாதியும் இல்லை என்பதை புலையராக யாக சாலைக்குள் நுழைந்து உணர்த்தியவர் சிவன். வேள்வியில் அவிர்பாகம் தந்து வேத மரபில் போகாமல் சிவபரத்துவத்தை உணர்ந்து புலையருக்கு அவிர்பாகத்தை தந்து சிவனடி சேர்ந்தார் சோமாசிமாற நாயனார்.இதனை சேக்கிழார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“எத்தன்மையராயினும் ஈசனுக்கன்பர் என்றால் அத்தன்மையர் தாம்நமை யாள்பவர் என்று கொள்வார். சித்தந்தெளி யச்சிவன் அஞ்செழுத்தோதும் வாய்மை நித்தந்தியமம்” – பெரிய புராணம்.
இந்த வரிகளுக்கு சேக்கிழார் திருநாவுக்கரசரின் பதிகங்களில் இருந்தும் திருஞானசம்பந்தரின் வாக்குகளில் இருந்தும் தான் உணர்ந்து கொண்டு பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். அவ்வரிகளை பார்ப்போம்.
“ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே” – அப்பர்.
“கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே” – சம்பந்தர்
அவர் எத்தனை கொடிய பாவங்களை செய்தவராயினும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பாரானால் அவரும் ஈசனுக்கன்பர் தான் என்று அப்பரும் சம்பந்தரும் கூறிய அதே கருத்தினை ஏற்று சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் வழங்கியிருக்கிறார் என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுகளை தரமுடியாது.
இவ்வாறு வேத மரபில் உழன்றவரையும் சிவபரத்துவத்தை உணரச்செய்து வீடுபேறு வழங்கியது தான் இப்புராணத்தின் வாயிலாக சைவ சமயம் புறச்சமயத்தாருக்கு உணர்த்தும் செய்தி.
இந்த சோமாசிமாற நாயனார் புராணம் பெரிய புராணத்தில் முழுவதுமாக இல்லை. ஆதலால் இச்சடங்கை செய்வது அவசியமற்றது என்பர் ஸ்மார்த்தமதவாச சைவர். அதனை விரிவாக அலசுவோம். பெரிய புராணத்தை அப்படியே அச்சுபிசகாமல் வடமொழியில் எழுதப்பட்டது தான் ‘உபமன்யு பக்தவிலாசம்‘ என்பது சிறந்த வரலாற்றாளருக்கான பத்ம விருதை பெற்ற திரு நாகசாமி அவர்களின் கருத்து. இந்த உபமன்யு பக்தவிலாசமும் வடநாட்டில் எழுதப்படவில்லை. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் விஜயநகர காலத்தில் தான் அது அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திரு நாகசாமி அவர்கள் கடந்த பிப்ரவரி 26, 2016ஆம் ஆண்டில் கூறிய கருத்தானது தினமலர் இதழில் வெளியானது. அவை பின்வருமாறு,

“விஜயநகர கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் (காஞ்சி ஏகாம்பரநாதர்)உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர்.
அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார்.
அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், ‘உபமன்யு பக்த விலாசம்’ என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு
செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது. மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார்.” – திரு நாகசாமி.
ஆகவே திரு நாகசாமி அவர்களின் கருத்துப்படி உபமன்யு பக்தவிலாசம் எனும் வடமொழி நூலானது சேக்கிழாரின் பெரிய புராணத்தை அப்படியே மொழிபெயர்த்து இருக்குமாயின் சோமாசிமாற நாயனார் புராணம் முழுவதுமாக பெரிய புராணத்தில் இருந்திருக்க வேண்டும் தானே!? இப்படி ஒரு சந்தேகம் நமக்கு எழுவதற்கு மேலும் சில காரணங்களும் உண்டு.
இன்று பெரியபுராணம் ஒவ்வொரு அச்சு பதிப்பிலும் ஒவ்வொரு எண்ணிக்கையிலான பாடல்களை கொண்டிருக்கின்றன. ஒரு பதிப்பிற்கும் மற்றொரு பதிப்பிற்கும் பாடல் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உண்டு. இதனை பெரிய புராணத்திற்கு பேருரை வரைந்த சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணிய முதலியார்,” செய்யுள் தொகை 4253 என்பது உமாபதியார் புராண வரலாறு. இத்தொகைக்கு மேல் அச்சிட்ட பிரதிகள் காணப்படுகின்றன. அவையாவும் பிற்கால புலவர்களால் உண்டாக்கப்பட்டு புராணத்தில் புகுத்தப்பட்ட இடைசெருகல் என அறிஞர்கள் கருதுகின்றனர்.” என தெரிவிக்கிறார்.
தற்போதைய பெரியபுராண பதிப்புகளில் கூட ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமே பாடல் வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, மேற்குறிப்பிட்ட சி.கே.சுப்ரமணிய முதலியார் அவர்களை உரையெழுதியதில் 4281 பாடல்களும், திரு.வி.க அவர்களின் உரையில் 4286 பாடல்களும்,ஆறுமுக தம்பிரான் அவர்களின் நூலில் 4406 பாடல்களும் உள்ளன.
இடைச்செருகலான பாடல்கள் எவைஎவை என்பது தான் ஆய்வுக்குறியது. ஆக பெரியபுராணத்தில் இடைசெருகல் நடந்திருப்பது விஜயநகர காலத்திற்கும் பின்னாளில் தான் என்பதை உபமன்யு பக்தவிலாசம் கொண்டு ஓரளவு அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது போலும். பொதுவாக இலக்கியங்களில் இடைசெருகலுக்கான காரணங்கள் என்ன? அந்தந்த காலத்தில் தமக்கு தேவையானதை சேர்த்தும் தேவையில்லாததை நீக்குவதும் தானே? தனக்கு தேவையான பகுதியை சேர்த்துவிட்டமையால் 33 பாடல்கள் நமக்கு உமாபதியாரின் புராணத்தின் படி அதிகமாக கிடைத்திருக்கின்றன. அதேபோல் தேவையில்லாத பகுதிகள் சில நீக்கவும் செய்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு என்பது இயற்கையாகவே இந்த இடைசெருகல் தொடர்பான விடயத்தில் எழுவதால் சோமாசிமாற நாயனாரின் புராணமானது கட்டாயம் பெரிய புராணத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. நிற்க!
இந்த சோமாசிமாறரின் புராணக்கதை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய “திரு அம்பர்ப் புராணம்” எனும் நூலில் விரிவாக கிடைக்கின்றன. மு.கந்தையா போன்ற சைவ சமய பெரியோர்களும் சான்றோர்களும் இப்புராண வரலாற்றை எவ்வித சமரசமும் இன்றி ஏற்றுக்கொண்டனர்.
திரு அம்பர்ப் புராணம் எப்படி சோமாசிமாற நாயனாரின் வரலாற்றை மட்டும் தனித்து எடுத்து ஆவணப்படுத்திக்கொண்டதோ அதேபோல் கண்ணப்ப நாயனார் வரலாறும், சிறுதொண்டர் வரலாறும் கூட தனி நூலாக, புராணமாக வெளிவந்துள்ளன. அவையனைத்துமே பெரிய புராணத்திற்கு எந்தவிதத்திலும் மாற்று கோணத்தில் எழுதப்படவில்லை. அதேபோல் சோமாசிமாற நாயனார் கதையையும் சைவ சமயத்தார் ஏற்று போற்றி வந்துள்ளனர் என்பதோடு வேத மரபிற்கும் சைவ மரபிற்கும் உண்டான வேறுபாட்டை இப்புராணத்தின் வாயிலாக புறச்சமயத்தார்கள் உணர்ந்து கொள்ளலாம்.
wonderful explanation.
Excellent article. Much appreciated.