கிபி 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது காஞ்சி கைலாசநாதர் ஆலயம். இங்கு இராஜசிம்மனின் 240க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. அழகிய வண்ண ஓவியங்களும் நேர்த்தியான சிற்பங்களும் தான் இக்கோவிலின் சிறப்பம்சம். இக்கோவிலின் கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு தான் தஞ்சை பெருவுடையார் கோவிலும், பட்டடக்கல் விருபாக்ஷா கோவிலும் கட்டப்பட்டது என்பது வரலாறு.

பல்லவர்களின் பரமவிரோதியான சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் கூட காஞ்சியை எரித்தாலும் இக்கோவிலின் வண்ண ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்து நிவந்தங்கள் பல தந்த கல்வெட்டை இக்கோவிலில் இன்றும் காணலாம். அதுமட்டுமல்ல முற்கால சோழர்களில் முதலாம் பராந்தக சோழனும் இராஜராஜ சோழனும் ‘கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி’ என கல்வெட்டில் குறிப்பிட்டு நிவந்தங்கள் பல கொடுத்த கல்வெட்டுகளும் இக்கோவிலில் உண்டு.

காஞ்சி கைலாசநாதர் ஆலயம்

இப்படியிருக்க, திடீரென இந்த கோவில் 250 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக மூடப்பட்டது எனவும் இக்கோவிலின் நிவந்தங்கள் உட்பட கோவிலின் வளாகம் வரை வேறொரு கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது எனவும் ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டியலாளரான ஹூல்ஸ் குறிப்பிடுகிறார். இதில் ஹூல்ஸ் அவர்கள் தவறுதலாக கோவில் மூடப்பட்டது என அனுமானித்திருக்கிறார் என சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதாவது எந்த கல்வெட்டிலும் கோவில் மூடப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் நிவந்தங்கள் மாற்றப்பட்ட தரவுகள் மட்டுமே காணப்படுகின்றன என்பதும் அவர்களது வாதமாக இருக்கிறது.

சரி எப்போது?யாரால்?  இக்கோவிலின் நிவந்தங்கள் மாற்றப்பட்டது என்பதையும் பிறகு யார் காலத்தில் மீட்கப்பட்டது என்பதையும் இனி விரிவாக பார்ப்போம்.

இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கிபி 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) வேறொரு கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகவல் அங்குள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இப்படி மூடப்பட்ட இந்த கோவிலின் நிவந்தங்களும் கோவில் வளாகமும் இக்கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இன்னொரு சிவன் கோவிலான அநேகதங்காவதம் கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எப்படி முதலாம் குலோத்துங்கன் என உறுதியாக கூறுகிறீர்கள்? என பலர் கேட்கலாம். இக்கோவிலின் நிவந்தங்கள் மாற்றிகொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் அநேகதங்காவதம் கோவிலில் முதலாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தியிலேயே அமைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் நிவந்தங்கள் மாற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. கல்வெட்டு தகவல் பின்வருமாறு..

தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3

இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் 34ஆவது ஆட்சியாண்டை சேர்ந்ததாகும். அதாவது கிபி 1104-ஐ சேர்ந்த கல்வெட்டு. இதில் காணப்படும் நிலங்களின் எல்லைகளை கவனிக்கவும். காஞ்சிபுரத்து திருக்கற்றளி மகாதேவர் கோவிலுக்கு அருகேயிருந்த நிலங்களை அநேகதங்காபதமுடையார் கோவிலுக்கு குலோத்துங்கன் தானமாக வழங்கியிருக்கிறார். அதனை பல்லவதரையர் என்பவர் ‘கல் வெட்டுவித்த படி’ என ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஆகவே குலோத்துங்கன் காலம் முதல் நிவந்தங்கள் ஏதும் இராஜசிம்மேஸ்வரத்துக்கு (கைலாசநாதர் கோவில்) இல்லாததால் பெரிய அளவில் திருவிழாக்களும், ஆகம முறையில் பூஜைகளும் இக்கோவிலில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது புலனாகிறது. ஏனெனில் இப்படி மாற்றப்பட்ட நிவந்தங்களுக்கு பதிலாக அதனை ஈடும்செய்யும் வகையில் எந்த தானத்தையும் முதலாம் குலோத்துங்கன் வழங்கிவிடவில்லை. இந்த சம்பவம் நிகழ்ந்து சரியாக 260 ஆண்டுகளுக்கு பின் வந்த தொடக்க கால விஜயநகரத்து அரசரான கம்பண்ண உடையார், குலோத்துங்கன் காலத்தில் மாற்றிகொடுக்கப்பட்ட நிவந்தங்கள் அனைத்தும் தர்மம் அல்ல என கூறி மீண்டும் அவற்றை மீட்டு இராஜசிம்மேஸ்வர உடையாருக்கே வழங்கி அந்த ஆண்டு ஆடி மாதம் முதல் பூசை திருப்பணிகள் நடத்த உத்தரவிடுகிறார். இப்போது கம்பண்ண உடையாரது கல்வெட்டை பார்ப்போம்.

தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 1 இல் இக்கோவிலில் கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கம்பண்ண உடையாரின் கல்வெட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு தகவல் பின்வருமாறு,

1.ஸ்வஸ்தி ஸ்ரீமனுமஹாமண்ட

2. ளேஸ்வர அரிராயவிபாடன்

3. பாஷைக்குத்தப்புவ ராய

4. ர் கண்டன் பூர்வ்வாபஸ்சிம்ஸமு

5. த்ராதிபதி ஸ்ரீகம்பண

6. உடையர் ப்ரதிவிரா

7. ஜ்யம் பண்ணி அரு

8. ளாநின்ற ஸகாப்தம் ஆயி

9. ரத்துஇருநூற்றுஎண்ப 

10. த்துஆறின் மெல் செல்

11. லாநின்ற விஸ்வாவஸு வருஷ

12. த்து ஆடி மாதம் முதல் ஸ்ரீ

13. மதுகொப்பணங்கள்

14. காஞ்சிபுரத்தில் இராஜ

15. ஸிம்ஹபன்மீஸ்வரமு

16. டையார் ஆன எடுதத்து

17. ஆயிரமுடைய நாயனார் கொ

18. யில் தானத்தாற்க்கு நிருபம் || எ

19. டுதத்து ஆயிரமுடைய நாயநார்

20. தானத்தை முன்பெ குலொத்

21. துங்கசொழதெவர் காலத்தி

22. லெ இறங்கல் இட்டு நாயனார்

23. திருநாமத்துக்காணியுமாறி தி

24. ருவிருப்பும் திருமடைவிளாகமு

25. ம் அனையபதங்காவுடைய னா

26. யனா[ர்]க்கு குடுத்த இதுவும் எடுத

27. த்து ஆயிரமுடைய நா[ய]

28. னார் தானத்தை இறங்

29. கல் இட்ட இதுவும் தர்ம்ம

30. ம் அல்லாதபடி ஆலே

31. இன்னா[யனா]ர் தானம் இறங்க

32. ல் மிண்டு ஆடி மாதமுத

33. ம் பூசை திருப்பணி நடக்

34. கும்படிக்கு தென்கரை

35. மணவிற்கொட்ட

36. த்து பன்மாநாட்டு முரு

37. ங்கை ஊர் அடங்கலும் ஸர்வ்வாமா

38. னயம் இறையலி ஆக

39. நாற்பாற்க்கெல்

40. லைக்குட்பட்ட

41. நிலமும் சந்திராதித்தவ

42. ரையும் நடக்கும்படிக்

43. கும் | இன்னாயனார் தி

44. ருவிருப்புக்கு வடபாற்

45. கெல்லை வடதாழம்பள்

46. ளத்து தெற்கும் | தென்

47. பாற்கெல்லை கழனிக்

48. கு வடக்கும் | மெல்பா

49. ற்கெல்லை கரை ¦

50. மட்டுக்கு கிழக்கும் | கி

51. ழ்பாற்கெல்லை வரி

52. வாய்க்காலுக்கு மெ

53. ற்க்கும் | இந்த நாயனார்

54. சந்நதித்தெரு அட

55. ங்கலும் ஸர்வ்வாமா

56. ந்னியம் ஆகச்சந்தி

57. ராதித்தவரையும் செ

58. ல்லும்படி முன்பு இறங்

59. கல் இட்ட நாளில் வெ

60. ட்டின கல் வெட்டுப்படி

61. தவிர்த்து குடுத்த அ

62. ளவுக்கு இவ் ஓலை

63. சாதனம் ஆக கல்

64. லும் வெட்டி தாழ்

65. வற நடத்திக்கொ

66. ள்ளவும் பாற்பது ||

67. இவை கொப்பணங்கள்

68. எழுத்து ||

இக்கல்வெட்டு கிபி 1364 ஆம் ஆண்டை சேர்ந்தது என்பது கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் சக ஆண்டை கொண்டு தெரிய வருகிறது. குலோத்துங்க சோழன் கொடுத்த நில எல்லைகளின் பெயர்களில் சில, இந்த 260 ஆண்டுகால இடைவெளியில் சற்று மாறியிருந்தாலும் குலோத்துங்கன் குறிப்பிடும் அதே பகுதிகளை தான் இவர் மீட்டிருக்கிறார் என்பது ‘குலோத்துங்கன் காலத்திலே இறங்கலிட்டு கொடுத்த திருநாமத்துக்காணியும் திருமடை வளாகமும் அநேகதங்காபத நாயனாருக்கு கொடுத்தது தர்மம் அல்லாத படியால்’எனும் தகவலாலும், ‘வெட்டிய கல் வெட்டுப்படி தவிர்த்து’என கடைசியில் குறிப்பிடுவதாலும் இந்த நிவந்தங்களை குலோத்துங்கன் தான் கொடுத்திருக்கிறார். அதுவும் அநேகதங்காபத நாயனாருக்கு தான் கொடுத்திருக்கிறார். அதையும் கல்வெட்டில் வெட்டி இருக்கிறார். அதை தான் கம்பண்ண உடையவர் மீட்டிருக்கிறார் என்பது தெளிவாக அறிய முடியும் செய்தி.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் மத்தியில் ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. அது இரண்டாம் இராஜராஜனின் 26ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு எனவும் அதில் இக்கோவிலுக்கு நித்தமும் விளக்கெரிக்க நிவந்தம் (ஆழாக்கு நெய்) தரும் தகவலை ஆதாரமாக கொண்டு கோவில் வழக்கமாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதனையும் வாதமாக வைப்பவர்கள் உண்டு. முதலில் கல்வெட்டு தகவலை பார்ப்போம்.

தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 1

முதலில் திரிபுவன சக்கரவர்த்திகள் இராஜராஜதேவருக்கு என தொடங்கும் கல்வெட்டை பொதுவாக மூன்றாம் இராஜராஜன் என்றே கருதுவர். ஏனெனில் இரண்டாம் இராஜராஜன் கல்வெட்டுகள் மெய்கீர்த்தியுடன் தான் இருக்கும். இரண்டாம் இராஜராஜனின் 27ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று திருவொற்றியூரில் கிடைத்ததாக குறிப்பிடும் சேதுராமன் அவர்கள் கூட அது மெய்கீர்த்தியுடன் இருப்பதாகவே குறிப்பிடுகிறார். ஆகவே இந்த கல்வெட்டில் வருபவர் மூன்றாம் இராஜராஜன் என்றே கருத வாய்ப்புண்டு. அதுபோக இந்த கல்வெட்டை சக ஆண்டு 1163-64 என கருதுவதன் மூலமும் இக்கல்வெட்டு கிபி 1241-42-ஐ சேர்ந்தது என குறிப்பிடுவதன் மூலமும் இது மூன்றாம் இராஜராஜன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அடுத்ததாக இந்த கோவிலை மூடியதாக திரு ஹீல்ஸ் குறிப்பிட்டிருக்கும் தகவல் முழுமையும் தவறானதல்ல. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பூஜைகள், வழிபாடுகள், திருவிழாக்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு கைவிடப்பட்ட கோவிலை வெறுமனே விட்டுவைக்காமல் தினமும் விளக்கெரிக்கவாவது செய்ய மூன்றாம் இராஜராஜனுக்கு மனமிருந்திருக்கிறது என்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும். ஏனெனில் இவரும் கூட பூஜைகள், திருவிழாக்கள் நடத்த புதிதாக எந்த நிவந்தங்களையும் தரவில்லை. ஏற்கனவே குலோத்துங்கன் காலத்தில் மாற்றிய நிவந்தத்தை அவர் மீட்கவும் இல்லை. ‘மூடப்பட்ட கோவில்’ எனும் சொல்லில் தான் ஹீல்ஸ் தவறிழைத்திருக்கிறார். மற்றபடி இது கைவிடப்பட்ட (Abandoned) கோவிலாக கருதுவதில் தவறில்லை.

கிபி 1104இல் முதலாம் குலோத்துங்கன் இக்கோவிலின் நிவந்தங்களை மாற்றியதற்கு பின் கிபி 1242இல் தான் தினசரி விளக்கெரிக்கவே நிவந்தங்கள் தரப்பட்டிருக்கிறது. அதன்பின் மீண்டும் இக்கோவில் பழையபடி விழாக்கோலம் பூண்டது கிபி 1364இல் தான். இடைப்பட்ட 260 ஆண்டுகளில் இந்த அழகிய கோவில் எந்தவொரு திருவிழாக்களையும் கண்டுவிடவில்லை. எந்தவொரு ஆகமத்தின் முறைப்படியான பூஜைகளையும் பெற்றுவிட வில்லை என அறுதியிட்டு கூறலாம்.

தமிழக- இந்திய வரலாற்றில் போற்றி புகழப்படும் இந்த காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு 260 ஆண்டுகாலமாக ஆகம பூஜைகளும் திருவிழாக்களும் மறுக்கப்பட்டு, கைவிடப்பட காரணமாக நீங்கள் கருதுவதை கீழே மறுமொழியில் உங்கள் கருத்துக்களாக தெரிவியுங்கள்.