உலகின் அனைத்து இனங்களும் தத்தமது மொழிவழி புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, தொல்லியல் வழியும் வரலாற்று ரீதியிலும் மிக அதிக தரவுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழினத்திற்கு மட்டும் புத்தாண்டு என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக குழப்பங்களை விளைவித்தே வருகிறது. சித்திரை மாதத்தில் தான் புத்தாண்டு என்று கடந்த 700 ஆண்டுகளாக இலக்கிய ரீதியில் தரவுகளை நாம் பெற்றிருந்தாலும் அவற்றை ஆரியர்களுக்கானது என கூறி ‘தை’மாதத் தொடக்கமே தமிழ் புத்தாண்டு என புதிய முறையை கொண்டு வந்தவர்கள் திராவிட கருத்தியலாளர்கள். இந்த கட்டுரையில் இந்த இருபெரும் வாதத்திற்கான வரலாற்று தரவுகளையும், இதுவரை இவர்கள் காட்டிய தரவுகளுக்கான மறுப்பும் மொத்தமாக தொகுத்து எழுத முயற்சிக்கிறேன். அவற்றில் இருந்து இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவை தீர்மானிக்கட்டும்.

2008ஆம் ஆண்டு அன்றைய திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ‘தை’ முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஜெயா அம்மையார் அதை மறுத்து சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என மாற்றினார். இருந்தும் தை முதல்நாளை புத்தாண்டாக ஏற்பவர்கள் 1921இல் மறைமலையடிகள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களை அழைத்து ஒரு மாநாடு நடத்தி அதில் அனைவராலும் முன்மொழியப்பட்டது தான் தை புத்தாண்டு எனும் வாதத்தை முன்வைப்பர். அதற்கான சான்று கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தை புத்தாண்டு பற்றி உரையாற்றும்போது இந்த மாநாட்டை பற்றி குறிப்பிடுவார் என்பது தான். ஆனால் 1921இல் இப்படி ஒரு மாநாடு நடந்ததற்கான தரவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் 1935இல் சென்னை பச்சையப்பன் மாளிகையில் திருவள்ளுவர் தினம் அனுசரித்த தகவல் கிடைக்கிறது. 1921 ஆம் ஆண்டோ, 1935ஆம் ஆண்டோ மாநாடு நடந்தது உண்மை. தமிழறிஞர்கள் கூடியது உண்மை. ஆனால் தை புத்தாண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பதே இங்கு முக்கியம். அப்படி ஒரு கருத்து ஏற்கப்பட்டதற்கான தரவுகள் இல்லை. அம்மாநாடு திருவள்ளுவர் காலத்தையும் திருவள்ளுவர் தினத்தையும் தீர்மானிக்கவே நடந்துள்ளது. அந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் இரண்டு.

1.திருவள்ளுவரின் காலம் என்பது கிருத்து பிறப்பிற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது கிமு 31 என்றும்,

2. திருவள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுசம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

1935இல் வைகாசி அனுசம் அன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதற்கான புகைப்படம்

1921இல் நடந்த மாநாட்டில் வைகாசி அனுசம் என்பதை தீர்மானித்தார்களா? அல்லது 1935 இல் தான் மாநாடு நடத்தி இந்த தினத்தை தீர்மானித்து அன்றே அதை கொண்டாடினார்களா?என்பது கேள்விக்குறி, இருப்பினும் 1921 மாநாட்டிலோ, 1935 மாநாட்டிலோ தை தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை.

15-5-1955 அன்று கொழும்புவில் தமிழ் மறைக் கழகம் வெளியிட்ட திருவள்ளுவர் திருநாள் மலர் புத்தக தகவல்.

அடுத்ததாக 60 ஆண்டுகளுக்கான தமிழ் பெயர்கள் கிடைக்கவில்லை என்றும் அந்த 60 பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளது என்றும் அந்த 60 பெயரும் கிருஷ்ணர்- நாரதர் கூடி பெற்ற பிள்ளைகளின் பெயர்கள் என மகாபாரதம் குறிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டுவர்.

அம்பேத்கர் தரவுகளை எடுத்து பார்த்தோமானால் அவர் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியா முழுக்க கிடைத்த ரிக் வேத குறிப்புகள் ஒரேமாதிரியாகவும் ஆனால் இராமாயணம், மகாபாரதம் மட்டும் பல விதமாகவும் கிடைத்ததாக குறிப்பிடுகிறார். அதில் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து எட்டு விதமான மகாபாரதம் கிடைத்ததாகவும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். இதில் முக்கியமான தகவல் என்னவெனில் அந்த எட்டு மகாபாரதத்திலும் கிருஷ்ணர் – நாரதர் கதை இடம்பெறவில்லை. ஆனால் இந்த கதை முதன்முதலாக 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவிபாகவதத்திலும் , நாரதர் புராணத்திலும் கிடைக்கிறது. அதன் பின்  1910இல் சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி எனும் நூலின் முதற்பதிப்பில் இக்கதை இல்லை. ஆனால் அவரது மகன் மறுபதிப்பு செய்த 1934இல் இந்த கதை சேர்க்கப்படுகிறது. ஆக இந்த கிருஷ்ணர்-நாரதர் கதையே 300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது தான் என்பது மேற்கண்ட தரவுகளின் மூலம் புலனாகிறது.

அடுத்து திராவிடர் மகாஜன சபை நடத்தி பௌத்தம் தழுவிய அயோத்திதாசர் அவர்கள் இந்த 60 ஆண்டுகளுக்கான பெயர்களும் சமஸ்கிருதம் அல்ல அவை பாலி மொழி என்றும் பௌத்த நூல்களில் அறுபது ஆண்டு சுழற்சிமுறை பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற நூலில் ‘சித்திரையே தமிழ் புத்தாண்டு’ என அறிவியல் மற்றும் வானியல் ரீதியில் 60 ஆண்டு சுழற்சி முறையை நிறுவிய தரவுகள் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை சமீபத்தில் மறுவெளியீடு செய்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

இந்த 60 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத பெயர்கள் முதன்முதலில் கிடைப்பது கிபி 5 ஆம் நூற்றாண்டு நூலாக கருதப்படும் ‘பிரகத் சம்கிதா’ என்பதில் தான். அதை எழுதியவர் உஜ்ஜயினியை சேர்ந்த வராகமிகிரர் என்பவராவார்.

தமிழ் ஆண்டு பெயர்கள் ஏன் கிடைக்கப்பெறவில்லை என்பது தான் இங்கு பெரும் சிக்கலாக இருந்துவருகிறது. இந்த சமஸ்கிருத ஆண்டு பெயர்கள் கிபி 5 ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டதாக தரவுகள் கிடைத்தாலும் அந்த பெயர்களும் கூட பழங்கால கல்வெட்டுகளில் கிடைப்பெறவில்லை என்பது தான் உண்மை. ஆகவே தமிழர்களுக்கு புத்தாண்டே இல்லை என்றும் கூட சிலர் கூறிவருகின்றனர். அது பொருந்தாக் கூற்று, ஏனெனில் நமக்கு ஆண்டு பெயர்கள் தான் கிடைக்கவில்லையே தவிர தமிழ் மாதப்பெயர்கள் (மேழம் முதல் மீனம் வரை) சங்க இலக்கியம் முதல் கல்வெட்டுகள் வரை கிடைக்கின்றன. ஆகவே மாத சுழற்சியின் முடிவு தானே புத்தாண்டு. அப்படியிருக்க நிச்சயமாக ஏதோ ஒரு மாதத்தின் தொடக்கத்தை புத்தாண்டாக வைத்திருப்பார்கள் என்பது உறுதி.

இதுவரை தமிழ் ஆண்டு பெயர்கள் கிடைக்கவில்லை. ஆனால் இனி கிடைக்க வாய்ப்புள்ளதா? என கேட்டால் நிச்சயமாக உண்டு. இரண்டு இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று பழைய தமிழ் சைவ ஆதினங்களில் கிடைக்கும் ஓலை சுவடிகளில் கிடைக்கலாம். இது மிகவும் அரிதானது தான். ஏனெனில் ஓலை சுவடிகள் 300 ஆண்டுகளுக்கு மேல் தாங்காது. எனினும் 1% வாய்ப்பு இருக்கக்கூடும். இரண்டாவது தமிழகம் மற்றும் அதை சுற்றிய அண்டை மாநிலங்களில் கிடைத்த பல ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளில் முக்கால் பங்கு கல்வெட்டுகள் இதுவரை முறையாக படிக்கப்பட்டு அச்சில் வெளிவராமல் கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சில பத்தாண்டுகளாக முடங்கியுள்ளது. அவை முறையாக படித்து வெளியிடப்பட்டால் அவற்றில் தமிழ் ஆண்டு பெயர்கள் கிடைக்கக்கூடும்.

அடுத்ததாக தை தான் புத்தாண்டு என்பதற்கு சில சங்க இலக்கிய பாடல் வரிகளை அடிக்கோடிட்டு காட்டுவர். அவை பின்வருமாறு,

தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் குறிப்பிடுகின்றன.

இவை அனைத்தும் தை மாதத்தை குறிப்பிட்டு வரும் பாடல்களே தவிர இதில் எதுவும் புத்தாண்டு பற்றிய தகவல்களை தரவில்லை. இதுபோல் மார்கழி மாதத்தை குறிப்பிட்டு வரும் பாடல்களையும் மேற்கோள் காட்டமுடியும். ஆனால் இதை மேற்கோள் காட்டுவதால் பயன் என்ன?

அடுத்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பள்ளிவாசலில் ஒரு கல்வெட்டு கிடைத்ததாகவும், அதை தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு என கருத ஆதாரமாகவும் எழுதி வந்தார்கள்.

கீழக்கரை பள்ளிவாசல் கல்வெட்டு

ஆனால் அது சூரியன் உத்ராயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய தை மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது என்பதை விளக்கும் கல்வெட்டு. இக்கல்வெட்டு 300 ஆண்டுகள் பழமையானது. ஆனால் பிற்கால சோழர்காலத்திலே கூட இந்த உத்ராயண, தட்சனாயண தினத்தன்று நிவந்தங்கள் வழங்கிய கல்வெட்டுகள் உண்டு. ஆனால் எங்கேயும் அதில் புத்தாண்டை குறிக்கவில்லை.

இவை தவிர்த்து சித்திரையில் புத்தாண்டு எனும் கருத்துக்கு இதுவரை கூறிவரும் ஆதாரங்களின் உண்மைத்தன்மை பற்றி பார்ப்போம்..

புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா” – நெடுநல்வாடை (159-163)

இதன் பொருள்: பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்திருந்த     பாண்டி மாதேவி அவ்வோவியத்தைக் கண்டு தானும் உரோகிணியைப் போன்று எப்போதும் கணவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருத்தங் கொண்டதாக நெடுநல் வாடை கூறுகிறது.

ஆக இதுவும் மேட இராசியை புத்தாண்டிற்காக குறிப்பிடவில்லை. ஆனால் மாத சுழற்சி என்பது இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தொல்காப்பியம் குறிப்பிடும் ஆறு பெரும்பொழுதுகளில் முதலாவது இளவேனில் காலம் என்பதை அறிக. இளவேனில் காலம் என்பது சித்திரை-வைகாசி மாதங்களாகும். இவை தவிர்த்து பின்னாளில் கிடைக்கும் சித்திரைக்கான ஆதாரங்கள் மிக அதிகம்.

கிபி 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக கருதப்படும் ‘அகத்தியர் பன்னீராயிரம்’ எனும் நூலும், கிபி 15 ஆம் நூற்றாண்டில் திருவாரூர் கமலை ஞானப்பிரகாசம் அவர்கள் எழுதிய ‘புட்பவிதி’ எனும் நூலும் நேரடியாகவே சித்திரை தான் முதல் மாதம் என்பதற்கு சான்றுகள் தருகின்றன. இவை தவிர்த்து 1796இல் இலங்கை திரிகோணமலை கோவிலில் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடியதாக போர்ச்சுகீசியர் குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது.

போர்ச்சுகீசியர் குறிப்புகளில் இருந்து http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp

அடுத்ததாக ஆஸ்திரேலியா அறிஞர் ஏ.எல்.பாஷம் அவர்களின் ‘Wonder That Was India’ எனும் நூலில் ஆரியருக்கான புத்தாண்டு என்பது ஆரம்ப காலங்களில் கார்த்திகை மாத தீபாவளியையொட்டி தான் தொடங்கியது என்றும், வெகு பிற்காலத்தில் அது சித்திரை மாத தேய்பிறையில் மாறியது என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் குறிப்பிடத்தகுந்த வரலாற்று அறிஞர் திருமதி மாலதி ஷென்ஜ் அவர்கள் தனது நூலான ‘The civilized demons : The Harappans in Rgveda” வில் சித்திரை மாதத்தின் முதல்நாளில் கொண்டாடப்படும் வருடப்பிறப்பானது இயற்கை சார்ந்த சடங்குகளை கொண்டுள்ளதால் அது ஆரியரல்லாதவர்களுக்கான புத்தாண்டு என்பதையும் கார்த்திகை மாதத்தில் அசுரனை வெற்றிக்கொண்டு கொண்டாடும் புத்தாண்டு தான் ஆரியருக்கான புத்தாண்டு என்றும் குறிப்பிடுகிறார். சிந்துவெளியின் வானியலை ஆராய்ந்த பலரும் சித்திரையை தான் முதல் மாதமாக கருதியிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். ஆனால் தொடர்ந்து சிந்துவெளியை திராவிட நாகரீகமாக முன்மொழிவோர்கள் வானிலை ரீதியாக முரண்படுவது மட்டும் ஏன் என புரியவில்லை.

இவை தவிர்த்து திராவிட மாநிலங்களாக அறியப்படும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா வரையிலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தென்கிழக்காசிய நாடுகளும் சிங்களவர்களும் கூட ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஆனால் திராவிட மொழியின் மூலமாக கருதப்படும் தமிழ் மொழிக்கு மட்டும் புத்தாண்டு சித்திரையில் இல்லை என்பது ஏனோ புரியாத புதிர்.

இவற்றையெல்லாம் கடந்து கலைஞர் அவர்கள் தை முதல்நாளை திருவள்ளுவர் தினமாகவும் , திருவள்ளுவர் காலத்தை கிமு 31 என்றும் 1971இல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால் அப்போதே ஏன் தமிழ் புத்தாண்டையும் அவர் அறிவிக்கவில்லை எனும் கேள்வியும் எழாமல் இல்லை. சமஸ்கிருத ஆண்டு சுழற்சிக்கு மாறாக திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்பட வேண்டும் என்பதே கலைஞரின் முடிவு. எனில் பிறகு திருவள்ளுவர் தினத்தை தை இரண்டாம் நாள் என மாற்றியமைத்தது ஏன் என்பதற்கும் விடையில்லை. அதன்பின் 2008இல் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு என அறிவிக்கப்படுகிறது. இந்த வகையில் எப்படி திருவள்ளுவர் ஆண்டுமுறை கணக்கிட முடியும்?

உலகில் எல்லா தேசிய இனங்களுமே,தங்கள் ஆதி, வசிப்பிடமான காட்டின் நினைவாக ஒவ்வொரு மலரை தங்கள் இனத்தின் அடையாளமாகவும், கொண்டாட்ட தினங்களில் சூடவும் வரித்திருந்தார்கள்.

நமது அண்டை மாநில மக்களான தெலுங்கர்களுக்கு வேப்பம் பூ பூப்பதுதான் புத்தாண்டின் துவக்கம்.மலையாளிகள் சரக்கொன்றை பூப்பதை கொண்டாடி அத்தப்பூ கோலங்கள் இட்டு புதுவருடத்தை வரவேற்கிறார்கள்.சிங்களர்கள் முள் முருங்கை பூப்பதை தங்கள் புத்தாண்டு துவக்கமாக கருதுகிறார்கள்.தொல்குடிகளான தமிழர்களோ ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பூவை வைத்திருந்தார்கள்.

மூவேந்தர்களும் தனித்தனி மரங்களை தங்களின் அடையாளமாக வைத்திருந்தார்கள். அவர்களது தனித்த அடையாளமாக மரங்களும்,மலர்களும் இருந்தன. சேரர்களின் அடையாளம், பனை மரம், பாண்டியர்களுக்கு வேம்பு, சோழர்களுக்கு அத்தி மரம் காவல் மரமாய் இருந்திருக்கிறது.

போரில் வென்றால் வாகைப் பூ சூடி இருக்கிறார்கள்.அதைத்தான் இப்போது, தேர்தலில் ஜெயித்தால கூட ‘வெற்றி வாகை சூடினார்’ என்கிறோம். தமிழர்களின் கடவுள் முருகன்.அவனது அடையாளம் வேங்கை மரம். ஒரு வேங்கை மரம் தான் முருகன் வள்ளி களவு மணத்துக்கு சாட்சி, அதனால்தான் முருகன் கோவில்களில் தல விருட்சமாக வேங்கை நிற்கிறது.

1972 சித்திரை முதல்நாளினை புத்தாண்டு என்றே அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசு வெளியிட்ட விழா மலர்.

வேங்கை மரம் பூப்பதை வைத்துத்தான் முற்காலத்தில் தமிழ் புத்தாண்டை கணித்திருக்கிறார்கள்.

சங்க நூலான மலைபடுகடாம் எனும் ( பாடல் வரி 305 ) நூலில் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேங்கை மரத்தில் பங்குனி மாத கடைசியில் அல்லது சித்திரை மாத தொடக்கத்தில் பூ பூக்கும். எனவே தலைநாள் பூத்த வேங்கை என்பது சித்திரை முதல்நாள் என்பதைக் குறிக்கிறது.

அதோடு வேங்கை பூ வருடத்தின் பிற மாதங்களில் எப்போதும் பூப்பதில்லை. பங்குனி-சித்திரையில் மட்டுமே அது பூப்பதை பழமொழி நானூறில் வரும், ‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்’ எனும் வரியில் இருந்து அறியலாம்.

பிற திராவிட மாநிலங்களான கர்நாடக/கேரள/ஒரிசா போன்றவைகளிலும் தமிழர்கள் பன்னெடுங்காலமாக தொடர்பில் இருக்கும் தென்கிழக்கு ஆசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

ஆகவே தமிழ் புத்தாண்டு சித்திரை தான் என்பதும், 60 ஆண்டுகளுக்கு சமஸ்கிருத பெயர் முறையும், அந்த பெயர்களுக்கான புராணமும் வெகு பிற்காலத்தில் தமிழர் மரபில் ஒட்டிக்கொண்ட ஒன்று என்பதும், ஆரிய புத்தாண்டே சித்திரையில் இல்லை என்பதும், தமிழ் நிலப்பரப்பின் நெருக்கமான அண்டை நாடு மற்றும் மாநிலங்களும் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் புத்தாண்டை கொண்டாடுவதையும் கொண்டு தமிழ் புத்தாண்டு சிக்கல்களை வாசகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.